Published:Updated:

`சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் விற்பனை!' - ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே வழக்கு

`சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் விற்பனை!' - ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே வழக்கு
`சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைன் விற்பனை!' - ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே வழக்கு

தங்களது தயாரிப்புகளை சட்டத்துக்குப் புறம்பாக ஆன்லைனில் விற்பனை செய்வதாகக் குற்றம்சுமத்தி ஃப்ளிப்கார்ட் மீது ஆம்வே நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்வே நிறுவனம், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் நேரடி விற்பனை முறைப்படி தனது தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை வேறொருவரோ அல்லது ஆன்லைனிலோ விற்கவோ அனுமதி கிடையாது. அப்படி ஆன்லைனில் விற்பனை செய்வதாக இருந்தால் ஆம்வே நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

ஆனால் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனைத்தளத்தில் ஆம்வே நிறுவனத்தின் சில தயாரிப்புகளை முன்அனுமதியின்றி விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. சில விற்பனையாளர்கள், அதிக அளவில் விற்பனை செய்யும்பொருட்டு குறைந்த விலையில் இந்நிறுவனத்தின் பொருள்களை விற்பனை செய்துள்ளார்கள். ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆம்வே பொருள்களை விற்பனை செய்பவர்கள், அந்த பொருள்களின் மூடி மற்றும் சில்வர் ஃபாயில் பேப்பர் மீது பிரின்ட் செய்யப்பட்ட விவரங்களை அழிப்பதாகவும், சேதப்படுத்துவதாகவும் மற்றொரு புகாரும் எழுந்துள்ளது. இப்படி அழிப்பதன்மூலம் விற்பனையாளர்கள் குறித்த ஆதாரங்களை மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இந்தப் புகாருக்கு ஃப்ளிப்கார்ட் தரப்பில் எவ்வித பதிலும் கிடைக்காததால் தற்போது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கு முன்னதாக, ஸ்நாப்டீல், 1எம்ஜி.காம் போன்ற நிறுவனங்களின்மீதும் நிறைய வழக்குகளை ஆம்வே பதிவு செய்துள்ளது. தாங்கள் நேர்மையான முறையிலும், தங்களது விற்பனையாளர்களுக்கு பயனளிக்கும்விதமாகவும் விற்பனை செய்துவருவதாகவும், இதுபோன்ற தவறுகள் தங்களைப் பாதிப்பதாகவும் ஆம்வே கூறியுள்ளது.