Published:Updated:

`கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் உயர்வு!’ - வருமான வரித்துறை

`கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் உயர்வு!’ - வருமான வரித்துறை
`கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் உயர்வு!’ - வருமான வரித்துறை

இந்தியாவிலுள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, கடந்த நான்கு ஆண்டுகளில் 60% உயர்ந்துள்ளதாக வருமான வரித்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2014 -15 மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரித்தாக்கல் செய்தவர்களில் ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கு மேல் இருப்பவர்களின் எண்ணிக்கை 88,649 என உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2017-18 மதிப்பீட்டு ஆண்டில் 1,40,139 என்று உயர்ந்துள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் இது 60% அதிகமாகும்.

அதேபோல, வருமான வரித்தாக்கல் செய்தவர்களில் தனி நபர் ஆண்டு வருமானமாக ஒரு கோடிக்குமேல் சம்பாதிப்பவர்கள் எண்ணிக்கை 48,416 என்ற அளவிலிருந்து 81,344 என 68% உயர்ந்துள்ளது. வருமான வரித்தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2014 -15 மதிப்பீட்டு ஆண்டில் 3.79 கோடிகளாக இருந்து கடந்த 2017-18 மதிப்பீட்டு ஆண்டில் 80 சதவிகிதம் உயர்ந்து 6.85 கோடியாக உள்ளது. இந்தப் புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, ஐ.டி துறை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியால் பணியாளர்களின் சம்பளம் வளர்ச்சியடைந்திருப்பதும் அதன்காரணமாகக் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் தனி நபர் ஆண்டு வருமானம் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிகிறது. வருமான வரித்தாக்கல் செய்வதிலும் விழிப்பு உணர்வும் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.

ஒருபக்கம் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், இன்னொரு பக்கம், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் வாழ்க்கைத்தரமும் வருமானமும் மேம்படுவதையும் ஒப்புநோக்கியே நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கணக்கிட முடியும்.