Published:Updated:

சிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா!

சிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா!
சிங்கிள்ஸ் டே விற்பனையில் சாதனை படைத்த அலிபாபா!

ஆன்லைன் வர்த்தகத்தில், ஒருபக்கம் ஃபிளிப்கார்ட்டும் அமேசானும் மல்லுக்கட்டும் சூழலில், இவர்களையே ஆச்சர்யப்படுத்தும்விதமாக சீனாவின் அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம், `சிங்கிள்ஸ் டே' விற்பனையில் சாதனைபடைத்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11-ம் தேதி, இந்த சிங்கிள்ஸ் டே விற்பனையை அலிபாபா நிறுவனம் நடத்திவருகிறது.

இந்த ஆண்டும் நவம்பர் 11, ஞாயிறன்று ஒருநாள் நடைபெற்ற சிங்கிள்ஸ் டே விற்பனையில், விற்பனை தொடங்கி முதல் 85 நொடிகளில், 72,93.50 கோடி ரூபாய் (1 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பொருள்களை விற்று சாதனை படைத்துள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் 72,935 கோடி ரூபாய் (10 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பொருள்கள் விற்பனையாகின. மொத்தத்தில் ஒரு நாள் விற்பனையாக சுமார் 2,24,424 கோடி (30.8 பில்லியன் டாலர்) மதிப்புள்ள பொருள்கள் விற்றுத் தீர்ந்தன. இந்த விற்பனைக்காக டோக்கியோ முதல், ஃப்ராங்ஃபர்ட் நகரம்வரை வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். 

`சிங்கிள்ஸ் டே’ என்பது, சீனாவில் திருமணமாகாமல் சிங்கிளாக இருக்கும் இளைஞர், இளைஞிகள் கொண்டாடும் மகிழ்ச்சியான நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11-ம் தேதி, சிங்கிள்ஸ் டே கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மேலும் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற, கடந்த 2009-ம் ஆண்டு அலிபாபா நிறுவனர் ஜேக் மா ’சிங்கிள்ஸ் டே சேல்’ என்னும் தள்ளுபடி விற்பனையை அறிமுகப்படுத்தினார்.

கடந்த 2009-ம் ஆண்டிலிருந்து சிங்கிள்ஸ் டே விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்துவரும் அலிபாபா நிறுவனம், கடந்த 2017-ல் 25.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 27% விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒருநாள் அதிரடி விற்பனையில் தனது நிறுவனம்தான் என்றும் ராஜா என்பதை ஜேக் மா மீண்டும் நிரூபித்துள்ளார்.