Published:Updated:

வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்!- சி.பி.டி.டி. தலைவர் தகவல்

வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்!- சி.பி.டி.டி. தலைவர் தகவல்
வருமான வரித்துறையால் கண்காணிக்கப்படும் 80,000 பேர்!- சி.பி.டி.டி. தலைவர் தகவல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகான காலகட்டத்தில் வருமான வரித்தாக்கல் செய்யாத 80,000 பேரை வருமான வரித்துறை கண்காணிப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சி.பி.டி.டி.) தலைவர் சுசீல் சந்திரா தெரிவித்தார். 

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கியில் அதிகப்படியாக டெபாசிட் செய்தவர்களின் வங்கிக் கணக்குகள் கணக்கெடுக்கப்பட்டன. அதன்படி 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளின் டெபாசிட்டுகள் சந்தேகத்திற்குரியவையாகக் கண்டறியப்பட்டன. அவர்களது வருமானம் குறித்து விளக்கமளிக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டன. அதன்பிறகு பெரும்பாலானவர்கள் வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விசாரணைக்குப் பிறகும் வரித்தாக்கல் செய்யாத 3 லட்சம் பேருக்கு வருமான வரித்துறையிலிருந்து சட்டபூர்வமான நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதையடுத்து அவர்களில் 2.15 லட்சம் பேர் வரித்தாக்கல் செய்துள்ளனர். இன்னும் 80,000 பேர் வருமான வரித்தாக்கல் செய்யவில்லை. தற்போது அவர்களை வருமான வரித்துறை தொடர்ந்து கண்காணித்துவருவதாக சுசீல் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிதியாண்டில் 6.02 கோடி பேர் வருமான வரித்தாக்கல் செய்துள்ளதாகவும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 54% அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.