பிரீமியம் ஸ்டோரி
களவாணி வலைதளங்கள்!

''ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு வெப்சைட்ல பங்கு வர்த்தகம் மூலம் எப்படி ஈஸியா பணம் சம்பாதிக்கலாம், அதுக்கு எந்த மாதிரியான வழிமுறைகளை கையாளலாம்னு டிப்ஸ் தர்றோம்னு போட்டிருந்தாங்க. சுவாரஸ்யமா இருக்கேன்னு அதுக்கு மெயில் போட்டப்ப 3,000 ரூபாய் பீஸ் கட்டச் சொன்னாங்க. சும்மா தெரிஞ்சுக்குவோமேன்னு பணத்தைக் கட்டினேன். நன்றி சொல்லி ஒரு மெயில் வந்துது.

களவாணி வலைதளங்கள்!

வ்வளவுதான், அதுக்குப்பிறகு அவங்ககிட்ட இருந்து ஒரு டிப்ஸும் வரலை. அந்த வெப்சைட்ல இருந்த போன் நம்பருக்கு போன் பண்ணினா சரியான பதிலும் இல்லை. இந்தியில மளமளன்னு பேசிட்டு போனை வச்சிடுறாங்க. இது மாதிரி பித்தலாட்டம் பண்ணும் வெப்சைட்டுகளிடமிருந்து மக்களை நீங்கதான் காப்பாத்தணும்'' என்று நமக்கு கடிதம் எழுதி இருந்தார் திருச்சியைச் சேர்ந்த அசோக்.    

இந்த வாசகர் மட்டுமல்ல, இவரைப் போல ஏமாந்தவர்கள் பலர். இனிமேலும் இது மாதிரியான வலைதளங்களில் சிக்காமல் இருக்க என்ன வழி? வெப்சைட்டுகளின் உதவியை நாடும்போது எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம்.

''புதிதாக ஒரு வலைதளத்தினுள் நுழைந்தால் அந்த வலைதளம் குறித்த தகவல்களை முதலில் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நாம் பயன்படுத்தாத அல்லது நமக்கு பரிட்சயமே இல்லாத வலைதளங்களுக்குள் செல்லும்போது, அவை எந்த அளவுக்கு உண்மையானது, அதன் பின்புலம் என்ன? டிப்ஸ் தருகிறார்கள் எனில் யார் அந்த டிப்ஸை தருகிறார்கள்? என்கிற மாதிரியான பல கேள்விகளுக்குப் பதிலை தெரிந்துகொண்டு, அவை உண்மைதான் என்று முடிவு செய்தால் மட்டுமே பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.  

களவாணி வலைதளங்கள்!

இந்த வலைதளங்கள் தரும் சேவைகளுக்காக பணம் கட்ட சொல்கிறார்கள் எனில், காசோலைகளாகவோ அல்லது கேட்பு காசோலைகளாகவோ தான் (டி.டி.) கொடுக்க வேண்டும். இதையும் நிறுவனத்தின் பேரில்தான் தரவேண்டுமே ஒழிய, தனிநபர்கள் பெயரில் தரக்கூடாது. ஆன்லைன் மூலம் பணம் கட்டச் சொல்லும் வலைதளங்களை எடுத்த எடுப்பிலேயே தவிர்த்து விடலாம். காரணம், காசோலை களாக கொடுக்கும்போது நாம் யாருக்கு பணம் தருகிறோம், எந்த இடத்தில் இருப்பவருக்கு பணம் அனுப்புகிறோம் என்பது போன்ற தகவல்கள் நம்மிடம் இருக்கும். ஆனால், ஆன்லைன் மூலம் பணம் கட்டும்போது நாம் யாருக்கு பணம் தருகிறோம், எந்த ஊரில் இருப்ப வருக்குத் தருகிறோம் என்பது தெரியாது.

முக்கியமாக, உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லி விடாதீர்கள். கூடுமானவரை அவர்களிடமிருந்து எவ்வளவு தகவல்களை வாங்கி வைத்துக் கொள்ள முடியுமோ, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

தகிடுதத்தம் செய்யும் இந்த வெப்சைட்டு களில் இனிமேல் மாட்டாமல் இருக்கவே இந்த ஆலோசனை. 'ஏற்கெனவே மாட்டித் தொலைச்சுட்டோம். என்ன பண்றதுனு தெரியாம முழிக்கிறேன். தயவு பண்ணி வழி காட்டுங்க’ என்கிறவர்களுக்கு என்ன பதில் என்று சென்னை அண்ணா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்களிடம் கேட்டோம்.

''இது மாதிரியான வெப்சைட்கள் மூலம் பணத்தைக் கட்டி ஏமாந்தவர்கள் சென்னையில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் தங்களது புகாரை பதிவு செய்யலாம். தாங்கள் ஏமாற்றப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களுடனும் புகாரை பதிவு செய்ய வேண்டும். ஆதாரங்கள் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்த புகாரை பொருளாதார குற்றப் பிரிவு உடனே விசாரிக்கும். பணத்தை ஆன்லைன் மூலமாக தந்திருந்தால், பணப் பரிமாற்றம் நடந்த நேரம், அதுகுறித்த மற்ற விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் பிரச்னை எளிதில் தீர வாய்ப்பிருக்கிறது.

##~##
பொதுவாக இதுபோன்ற வலைதளங்களை பயன்படுத்தும் போது அதில் தொடர்புக்காக ஏதாவது தொலைபேசி எண்கள் தந்திருந்தால், அதில் போன் செய்து அந்த வலைதளம் குறித்த நமது அனைத்து சந்தேகங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். இந்த எச்சரிக்கை நடவடிக்கை எதையுமே செய்யாமல், பொய்யான வலைதளங்கள் சொல்வதை நம்பி பணத்தைக் கட்டிவிட்டு, பிறகு புலம்புவதால் எந்த பிரயோஜனமுமில்லை. பணம் கட்டும்முன் நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்'' என்றனர்.

இனியாவது முன்பின் தெரியாத வெப்சைட்டுகளில் நுழைந்து பணம் கட்டும் முன்பு கவனமாக இருப்பது நல்லது.

- செ.கார்த்திகேயன்
படம்:  ஜே.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு