Published:Updated:

அந்தக் காலத்து அத்தர் கடை!

அந்தக் காலத்து அத்தர் கடை!
பிரீமியம் ஸ்டோரி
அந்தக் காலத்து அத்தர் கடை!

பாரம்பர்யம்

அந்தக் காலத்து அத்தர் கடை!

பாரம்பர்யம்

Published:Updated:
அந்தக் காலத்து அத்தர் கடை!
பிரீமியம் ஸ்டோரி
அந்தக் காலத்து அத்தர் கடை!

ஞ்சையின் பெருமை பேசும் அடையாளங்கள் பல. அதில், பலரும் அறியாத ஓர் அடையாளம் `அப்துல் ரஹீம் அத்தர் கடை.' இந்தப் பெயரைச் சொன்னாலே பல நாள்களுக்கு மணக்கும். 

அந்தக் காலத்து அத்தர் கடை!

விரைவில் 100 வயதை எட்டவிருக்கும் இந்தக் கடைக்கு, நான்கைந்து தலைமுறைகள் தாண்டிய வாடிக்கையாளர்கள் உண்டு! டி.ஆர்.மகாலிங்கம், குன்னக்குடி வைத்தியநாதன், என்.சி.வசந்தகோகிலம், வீணை தனம்மாள், வீணை பாலச்சந்தர், ஜி.என்.பாலசுப்ரமணியம், பத்மா சுப்ரமணியம், எழுத்தாளர் சிவசங்கரி என அந்தப் பட்டியலில் பல பிரபலங்களும் அடங்குவர்.

அப்துல் ரஹீமுக்குப் பிறகு, அவர் மகன் முகமது கவுஸ்தான் இந்தத் தொழிலைத் தொடர்கிறார். கவுஸ் பாய்-க்கு இப்போது வயது 82. பேச்சில் சின்னத் தடுமாற்றம்கூட இல்லை. ஒருமுறை நம் பெயரைக் கேட்டதுதான்... அவரது உரையாடலில் நம்மையோ, நம் பின்னணியையோ மறக்காமல் நினைவில் நிறுத்திக் குறிப்பிடுகிறார். கல்லூரி வாசலைக்கூட மிதிக்காத கவுஸ் பாய், அவ்வளவு சரளமாக ஆங்கிலத்தில் பேசுகிறார். நமக்குச் சொன்ன நேரத்தைவிட முன்னதாகவே கடையில் வந்து காத்திருப்பதில் தெரிகிறது அவரது தொழில் பக்தி.

``என் அப்பா அப்துல் ரஹீமுக்கு, மராட்டிய மன்னர்களுடன் நல்ல நட்பு இருந்தது. அந்தக் காலத்திலேயே அப்பா தனியே கடை வைத்து வியாபாரத்தை வளர்த்தார். அப்பா தயாரிக்கும் `அத்தரு'க்கு அவ்வளவு மவுசு. அவர் தயாரிக்கும் `கஸ்தூரி வத்தி' ரொம்பப் பிரபலம். திருவாங்கூர் சமஸ்தானம் வரை எங்கள் வத்தி மணக்கிறது.

அந்தக் காலத்தில் இசைக்கலைஞர்கள் பலரும் வாசனைப் பிரியர்களாக இருந்தார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். இசை ஜாம்பவான்கள் ஜி.என்.பி-யும் பாலக்காடு மணியும் அப்துல் ரஹீம் அத்தர் கடையின் விருப்பமான வாடிக்கையாளர்கள். வீணை தனம்மாளும் அப்படித்தான். இவர்கள் எல்லோருடைய ஃபேவரைட்டும் எங்கள் கடையின் அத்தர்தான்.
 
`அப்படி என்னதான்யா கலக்குறே... சலவைக்குப் போயிட்டு வந்த பிறகும் துணியில அத்தர் வாசனை அப்படியே இருக்கே!' என ஜி.என்.பி-யும் பாலக்காடு மணியும் அப்பாவிடம் ஆச்சர்யத்துடன் கேட்பார்களாம். எழுத்தாளர் சிவசங்கரி, தஞ்சாவூர் வரும்போதெல்லாம் எங்கள் கடையில் அத்தர் வாங்காமல் போனதில்லை. பிரபல பரதக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் ஃபேவரைட்டும் அத்தர்தான். டி.ஆர்.மகாலிங்கத்தின் சாய்ஸ் ஜவ்வாது...'' மணக்க மணக்கப் பேசுகிறார் கவுஸ் பாய்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் காலத்து அத்தர் கடை!

``அந்தக்காலத்தில்  வாசனை  என்றாலே அத்தர்தான். ஆனால், அதைத் தடவுவதில் ஒரு லாகவம் உண்டு. இந்தக் காலத்து சென்ட் பாட்டில்போல எடுத்தோமா, ஸ்பிரே செய்தோமா என உபயோகிக்க முடியாது. அதைப் புறங்கையில் தடவி, காதுகளின் பின்புறத்திலும், அக்குள் பகுதியிலும் தடவ வேண்டும். அந்த அத்தர் வாசனை, பல மணி நேரம் நிற்கும்'' என அத்தர் புகழ் பாடுகிறவர், அதைப் பற்றிய அறிமுகமும் தருகிறார்.

``சென்ட் என்பது, சிந்தெடிக்; கெமிக்கல்களிலிருந்து எடுக்கப்படுவது. அத்தர் என்பது, பூக்களின் இதழ்களிலிருந்து எடுப்பது. உதாரணத்துக்கு, 50 கிலோ ரோஜா இதழ்களைக் கசக்கி எடுத்தால் 50 கிராம் அத்தர் கிடைக்கும். குங்குமப்பூவிலிருந்து எடுப்பது, மருதாணி இலையிலிருந்து எடுப்பது, ரோஜா, மல்லி, தாழம்பூ போன்ற மலர்களிலிருந்து எடுப்பது, வெட்டிவேரிலிருந்து எடுப்பது என அத்தரில் நிறைய வகை உண்டு. `ஸ்வாஹ்' என்றொரு வகையும் உண்டு. அது மிகவும் விலை அதிகம். வீணை தனம்மாளின் ஃபேவரைட் அதுதான்.  வீணை வாசிக்கும்போது வீணையின் நரம்புகளில் அதைத் தடவி வாசிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது'' - கவுஸ் பாயின் வர்ணனையில் நம் மனக்கண்ணில் காட்சிகள் விரிகின்றன.

``அத்தருக்கு அடுத்தபடியாக, புனுகு மற்றும் ஜவ்வாதும் வாசனைப் பொருள்களில் முக்கியமானவை'' என்கிறார் கவுஸ் பாய்.

``புனுகு என்பது, `சிவெட் கேட்' (Indian Civet Cat) என்கிற பூனையிடமிருந்து பெறப்படுவது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் காடுகளில்தான் இவற்றை அதிகம் காண முடியும். தமிழகத்தின் பல கோயில்களில் கடவுள்களுக்குப் புனுகு சாற்றுவது விசேஷமானது. புனுகுப் பூனைகளிடமிருந்து பெறப்படும் இது, மஞ்சள் நிறத்தில் திரவ வடிவில் இருக்கும்.

என் அப்பாவிடம் ஏழெட்டுப் புனுகுப் பூனைகள் இருந்தன. இன்றும் திருப்பதி ஏழுமலையானுக்குப் புனுகும் ஜவ்வாதும் கலந்து அபிஷேகம் செய்வது நடைமுறையில் இருக்கிறது'' கவுஸ் பாயின் வார்த்தைகளில் சந்நிதானத்தின் வாசனை நம் நினைவைத் தீண்டுகிறது.

``செயற்கையாக மாறிப்போன உலகத்தில் இன்று இயற்கைக்கு எங்கே இடமிருக்கிறது? அந்த வகையில் வாசனை பிசினஸும் மணமிழந்துகொண்டுதான் வருகிறது. இன்று கிடைக்கும் பெரும்பாலான சென்ட் வகைகள் கெமிக்கல்களும் ஆல்கஹாலும் கலந்தவை. செயற்கையை விரும்பும் மக்களும் அவற்றையே விரும்புகிறார்கள். அத்தர் மாதிரியான இயற்கையான வாசனைப்பொருள்கள் பற்றிய விழிப்பு உணர்வோ அவை சுலபமாகக் கிடைப்பதற்கான வாய்ப்புகளோ இல்லாததும் இதற்கொரு காரணம்'' என வருத்தம் இழையோடுகிறது கவுஸ் பாயின் பேச்சில். 

தலைமுறைகள் தாண்டி கவுஸ் பாயின் வாசனைத் தொழில், தொடர்ந்து மணம் வீசுமா என்பது சந்தேகமே. அப்துல் ரஹீம் பாய், கவுஸ் பாய் பெயர்கள் இன்னொரு தலைமுறைக்காவது நிலைத்து நிற்கும் என்பது மட்டும் நிச்சயம். அதற்கான சிறு முயற்சியாக கவுஸ் பாயின் அக்கா மகன் அப்துல் ரஷீத், நேரடியாக நிர்வகிக்காவிட்டாலும், இப்போதைக்கு இந்த பிசினஸைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

சாஹா- படங்கள்: ம.அரவிந்த்

கமகம தகவல்கள்..

வா
சனைகளில் முதன்மையானது சந்தனம். எல்லா வாசனைத் திரவியங்களுக்கும் அடிப்படை சந்தன எண்ணெய்தான். இது ஒரு கிலோ 4 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இருப்பதிலேயே விலை உயர்ந்ததும் இதுதான். உணவில் சுவைக்காகச் சேர்க்கும் நெய் போன்றது இது. சந்தன எண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் எந்த வகையான வாசனைப்பொருளும் தனியே மணக்கும்.

 கடலில் வாழும் திமிங்கலம், நிறைய மீன்களைத் தின்னும். அவற்றின் முள் திமிங்கலத்தைக் குத்தும். அதற்கு எதிர்வினையாற்ற திமிங்கலத்துக்கு இயற்கையாகவே ஒருவிதத் திரவம் சுரக்கும். திடீரென ஒருநாள் திமிங்கலம் அதைத் துப்பும். அப்படித் துப்புவதே கிலோ கணக்கில் இருக்கும். ஜெல் வடிவிலான இதுவும் வாசனைத்தன்மை கொண்டது. அதுதான் `ஆம்பர்' என்றழைக்கப்படுகிறது.

லாவெண்டர், ஐரோப்பியாவின் பிரபலமான மலர். சமீபகாலமாக முன்னணி நறுமணங்களில் லாவெண்டர் மணமும் அதிகம் இடம்பெறத் தொடங்கியிருக்கிறது.

வாசனைப்பொருள்களின் விலையைத் தீர்மானிப்பது லண்டன். காலம்காலமாக இதுதான் தொடர்கிறது. சந்தனத்துக்குப் பெயர்போன இடம் கர்நாடகா. ஆனாலும் இவற்றுக்கான மார்க்கெட் விலையை நிர்ணயிப்பதும் லண்டன்தான். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism