Published:Updated:

கேவலப்படுத்தும் ஊர்; கண்டுகொள்ளாத விவசாயி! - கோமாளி பண்ணை உருவான கதை#MyVikatan

துரை.வேம்பையன்
கேவலப்படுத்தும் ஊர்; கண்டுகொள்ளாத விவசாயி! - கோமாளி பண்ணை உருவான கதை#MyVikatan
கேவலப்படுத்தும் ஊர்; கண்டுகொள்ளாத விவசாயி! - கோமாளி பண்ணை உருவான கதை#MyVikatan

'வாழும் வள்ளலே', 'கரட்டுக்காட்டில் வாழும் காமராஜரே' என்று தமக்குத்தாமே முக்குக்கு முக்கு ஃப்ளெக்ஸ் வைத்து, 'பெருமித சுயபுராண' தமுக்கு அடித்துக்கொள்பவர்கள் மலிந்துவிட்ட காலமிது. ஆனால், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள குள்ளமாபட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரவியோ, அதிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். ஆமாம், தனது பண்ணைக்கு முன்பு, 'கோமாளி பண்ணை' என்று எழுதி வைத்து, அசரடிக்கிறார். இன்னும் இறங்கிப்போய் ரவியிடம் பேச ஆரம்பித்தால், 'நான் கோமாளிங்க...' என்று கூறி, நம்மை ஜெர்க் அடிக்க வைக்கிறார். 

கேவலப்படுத்தும் ஊர்; கண்டுகொள்ளாத விவசாயி! - கோமாளி பண்ணை உருவான கதை#MyVikatan

 'கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருப்பாரோ..?' என்ற அச்சத்தோடு பேச ஆரம்பித்தால், பின்னாடிதான் தெரிகிறது அது எவ்வளவு தவறான அனுமானம் என்பது. ரவியிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தோம்.

"பூர்வீகத் தொழில் விவசாயம்தாங்க. ஆனா, நான் பட்டுக்கோட்டையில் போய், பதினைந்து வருஷமா தொழில் பார்க்கிறேன். இதற்கிடையில், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, நம்மாழ்வார் பத்தி தெரிஞ்சு, இயற்கை விவசாயத்து மேல ஈர்ப்பா ஆயிடுச்சு. இங்க எங்களுக்கு ஒரு ஏக்கர்தான் நிலமிருந்துச்சு. அதனால், 20 லட்சம் செலவு பண்ணி, கரடுமுரடா இருந்த 5 ஏக்கர் நிலத்தை வாங்கிப் போட்டேன். அப்போதே ஊர்மக்கள், 'முட்டாபய. எவனாச்சும் புண்ணியத்துக்கு உதவாத காட்டை இவ்வளவு லட்சத்துக்கு வாங்குவானா?'னு பேச ஆரம்பிச்சுச்சு. மேற்கொண்டு 20 லட்சம் செலவு பண்ணி காட்டை சரிபண்ணுறது, கேணி வெட்டுறதுனு செஞ்சேன்.

கேவலப்படுத்தும் ஊர்; கண்டுகொள்ளாத விவசாயி! - கோமாளி பண்ணை உருவான கதை#MyVikatan

ஊர் இன்னும் ஒருபடி மேலே போய், 'பொழைக்க தெரியாத பய'னு பேசினுச்சு. கண்டுக்காம, நான் அதுல இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன். அதைப் பொறுக்காத ஊர்சனம், 'கோமாளி பய. உதவாத வயலை வாங்கினதே தப்பு, அதுல இயற்கை விவசாயம் வேற பண்ணினா, விளங்கிரும்'னு பேசினாங்க. அதுக்கும் நான் ஒண்ணும் சொல்லலை. 'நம்மாழ்வார் காட்டுன வழியில் போய், இயற்கை விவசாயத்துல ஜெயிப்பேன். அதுவரைக்கும் நான் கோமாளியாவே இருந்துக்கிறேன், என் பண்ணைக்கு, 'கோமாளி பண்ணை'னு பேரும் வச்சுக்கிறேன்'னுதான் இப்படி போர்டு வச்சுருக்கிறேன். எத்தனை வருஷமானாலும், போராடி ஜெயிப்பேன். அப்போ, 'கோமாளி பண்ணை' போர்டை கழட்டி ஊர்மக்கள் முன்பு கடாசி எறிந்துவிட்டு, அவங்க முகத்துல கரியைப் பூசுவேன்" என்று வைராக்கியமாகப் பேசி முடிக்கிறார்.

கேவலப்படுத்தும் ஊர்; கண்டுகொள்ளாத விவசாயி! - கோமாளி பண்ணை உருவான கதை#MyVikatan

தனது தோட்டம் முழுவதும் உள்ள வேலிகளில் நம்மாழ்வார், சகாயம் ஐ.ஏ.எஸ், காமராஜர், ஜீரோ பட்ஜெட் புகழ் பாலேக்கர் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களையும் அவர்களின் கருத்துகளையும் மாட்டி வைத்திருக்கிறார். தனது காரில் 'ஏரோட்டி' என எழுதி வைத்திருக்கிறார். நமக்கோ, 'இதுதான் புதுமையான புரட்சிப் போராட்டம்' என்று தோன்றிற்று!