Published:Updated:

உணர்ச்சி வசப்படாதீர்கள்! - முதலீட்டின் முக்கிய ரகசியங்கள்!

திட்டமிடல்

பிரீமியம் ஸ்டோரி
உணர்ச்சி வசப்படாதீர்கள்! - முதலீட்டின் முக்கிய ரகசியங்கள்!

சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் தன் முதலீட்டு அனுபவத்தை எடுத்துச் சொன்னார். அந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருப்பதால் அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

உணர்ச்சி வசப்படாதீர்கள்! - முதலீட்டின் முக்கிய ரகசியங்கள்!

'என் நண்பன்தான் ஷேர் மார்க்கெட்ல நிறைய பணம் சம்பாதிக்கலாம்னு சொன்னான். என்னையும் பணம் போடச் சொன்னான். அப்ப எங்கிட்ட 2 லட்ச ரூபா பேங்க்ல இருந்தது. அதை அவன் சொன்ன ஏழு பங்குல போட்டேன். பணம் போட்ட நாலு நாள்லயே 3,000 ரூபா லாபம். அடுத்த சில நாள்ல 10,000 ரூபா லாபம். ஒரே மாசத்துல 45,000 ரூபா லாபம். எனக்கு குஷியோ குஷி.  

வீட்டுக்குப் போயி என் பொண்டாட்டிகிட்ட சொன்னேன். அவளும் த்ரில்லாயிட்டா. என் மாமனார்க்கிட்டேயிருந்து 50,000 ரூபா கடன் வாங்கிக் கொடுத்தாள். ஏற்கெனவே வாங்கியிருந்த ஷேர்லயே அந்த பணத்தையும் போட்டேன்.

அந்த வாரம் பெரிசா லாபம் கிடைக்கலை. அதற்கடுத்த வாரம் திடீர்னு மார்க்கெட் விழ ஆரம்பிச்சுது. ரெண்டே வாரத்துல, என் பணம் 1,75,000 ரூபாவாயிடுச்சு. 50,000 ரூபா லாபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா குறையும்போது திக்திக்குன்னு இருந்தது.

##~##
ஒண்ணும் பிரச்னை இல்லை; திரும்ப மேல வந்துடும்னான் என் நண்பன்.

நான் போட்ட பணம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சி 1,20,000 ரூபாவாயிடுச்சு. இதுக்கு மேலேயும் தாங்காதுடா சாமின்னு எல்லாத்தையும் வித்துட்டு வெளியில வந்துட்டேன். என் மாமனார்க்கிட்ட இருந்து வாங்கின பணத்தைக் கொடுத்துட்டு, என் பொண்டாட்டிகிட்ட செம டோஸ் வாங்குனேன். அதுக்கப்புறம் நான் வாங்கின ஸ்டாக் எல்லாம் ஏறினது வேற  கதை!'' என்று முடித்தார்.  

கீழேயிருக்கும் படத்தைப் பாருங்கள். மேலே என் நண்பர் விவரித்த அத்தனை உணர்வுகளும் வருவதைப் பார்ப்பீர்கள். நீங்கள் எவ்வளவு புத்திசாலியாயிருந்தாலும், இந்த உணர்ச்சி வளைவுகளில் சிக்காமல் வெளியில் வருவது சாத்தியமே இல்லை.

நாம் இந்த உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கக்கூடாது. பின்வரும் சில முக்கியமான அம்சங்களை கவனத்தில் கொண்டு செயல்பட்டால், நம் முதலீடு சார்ந்த மொத்த அனுபவமும் நிச்சயம் நன்றாகவே இருக்கும்.    

உணர்ச்சி வசப்படாமல் முதலீடு செய்ய நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்:

1) ஒரு சினிமா பார்க்க வேண்டுமென்றால்கூட பத்திரிகைகளில் விமர்சனம் படித்துவிட்டு, போகிறோம். ஆனால், முதலீட்டில் மட்டும் இதுமாதிரி நாம் எதுவும் செய்வதில்லை. பட விமர்சனங்களைப் போல, பங்கு விமர்சனங்களை நாம் படிப்பதே இல்லை. முதலீடு என்பது விளையாட்டல்ல. என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்ய வேண்டும். தகுந்த ஆராய்ச்சி செய்யாமல் முதலீடு செய்யக் கூடாது.

2) ஏற்ற இறக்கங்களின்போது நம் உணர்ச்சிகளை வெறுமனே கண்காணிக்க வேண்டும். அதற்கு செவிமடுக்கக்கூடாது.

உணர்ச்சி வசப்படாதீர்கள்! - முதலீட்டின் முக்கிய ரகசியங்கள்!

படத்தில் சொல்லி இருப்பது போல, உணர்ச்சிகளுக்குச் செவி மடுக்காமல்  பொறுமையுடன் இருப்பவனே லாபம் சம்பாதிப்பான்.    

3) டைமிங்க் மிகவும் முக்கியம். நல்ல கம்பெனியின் பங்காயிருந்தாலும், சரியான விலையில் கிடைத்தால் தான் வாங்க வேண்டும். அதேபோல, பென்னி ஸ்டாக்ஸ் கம்பெனியின் பங்குகள் சூப்பர் விலையில் கிடைத்தாலும் வாங்கக்கூடாது. நல்ல விலையில் பென்னி ஸ்டாக் வாங்குவதைவிட, பெரிய கம்பெனியில் பங்குகளை சுமாரான விலையில் வாங்குவதே புத்திசாலித்தனம்.  

4) ஒரே நேரத்தில் முதலீடு கூடாது. 100 ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமெனில், 25 ரூபாய்களாக நான்கு முறை முதலீட்டை பிரித்துப் போடுவது நல்லது. பங்கின் விலை இறங்க இறங்க நாம் முதலீடு செய்யலாம். ஆனால், இதற்கு முன் கண்டிப்பாக ஆராய்ந்து பார்த்தே பணத்தைப் போட வேண்டும்.  

5) கடன் வாங்கி முதலீடு செய்வது என்பது கண்டிப்பாகக் கூடாது. 15 சதவிகிதத்திற்குக் கடன் வாங்கி, ஈஸியாக 20% லாபம் பார்க்கலாமே என்பது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், இது பல சமயங்களில் பலிக்காது.    

6) நஷ்டமே இல்லாமல்  பங்கு முதலீடு செய்ய முடியாது. என்னதான் ஆராய்ந்து முதலீடு செய்தாலும், சில சமயம் நஷ்டம் வரவே செய்யும். அதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே ஒழிய, பயந்து ஒதுங்கிவிடக் கூடாது!  

எனவே, உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவு எடுக்காமல், தகுந்த ஆராய்ச்சி செய்து தெளிவான சிந்தனையின் அடிப்படையில் முதலீடு செய்து, நீங்களும் வாரன் பஃபெட்டுகளாக மாறுங்கள்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு