Published:Updated:

எம்.எல்.எம். நிறுவனங்களுக்கு வருகிறது கடிவாளம்!

எச்சரிக்கை

பிரீமியம் ஸ்டோரி
எம்.எல்.எம். நிறுவனங்களுக்கு வருகிறது கடிவாளம்!

சம்பவம் 1

எம்.எல்.எம். நிறுவனங்களுக்கு வருகிறது கடிவாளம்!

சமீபத்தில் திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பெண்களிடத்தில் பிரபலமாகி வருகிறது ஒரு திட்டம். தாம்பரத்தில் இருக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, 1,500 ரூபாய் கட்டி புடவை, எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர், மிக்ஸி என ஏதாவது ஒன்றை வாங்கிக் கொள்ள சொல்கிறது. பொருளை அனுப்பும்போது மூன்று கூப்பன்களையும் சேர்த்து அனுப்புகிறது.

இந்த மூன்று கூப்பன்களையும் தனக்குத் தெரிந்தவர்களிடம் கொடுக்க, அவர்களும் பணம் அனுப்பி பொருட்களை வாங்க, இப்படி விரிந்துகொண்டே போகிறது அந்த பிஸினஸ். காசை அனுப்பியவுடன் பொருள்தான் வந்துவிடுகிறதே என்கிற நம்பிக்கையில் பல ஆயிரம் பேர் பணத்தை அனுப்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைக்கிற பொருள் தரமற்றது என்பதோடு நிறைய பேர் பணம் அனுப்பியபிறகு இந்த கம்பெனி திடீரென காணாமல் போகவும் வாய்ப்புண்டு.

சம்பவம் 2

##~##
நான்கெழுத்து கொண்ட ஒரு நிறுவனம், இன்ஷூரன்ஸ் என்ற பெயரில் காலாண்டு, அரையாண்டு பிரீமியம் கட்டச் சொல்கிறது. இப்படி வசூலாகும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பிற்பாடு ஒன்றுக்கு மூன்று மடங்கு பணம் தருவதாகச் சொல்கிறது இந்நிறுவனம். இத்திட்டத்தில் நாம் சேர்ந்தபிறகு, நமக்குத் தெரிந்த வேறு சிலரையும் சேர்த்துவிட்டால் கூடுதல் கமிஷன் கிடைக்கும். இந்த கமிஷனுக்கு ஆசைப்பட்டு பல பெண்களும், வேலையில்லாத ஆண்களும் இத்திட்டத்தில் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். இப்படி போடும் பணம் திரும்ப கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இதுபோன்ற பல மோசடி நிறுவனங்கள் சத்தமில்லாமல் பணத்தைக் கறந்து கொண்டிருக்க, இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்று பலரும் கவலைப்பட்டு வந்தனர். இதற்கொரு  தீர்வாக, எம்.எல்.எம். மற்றும் சீட்டு நிறுவனங்களை நெறிமுறைப்படுத்த ஒரு ரெகுலேட்டரை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.

எம்.எல்.எம். நிறுவனங்களுக்கு வருகிறது கடிவாளம்!

'சீரியஸ் ஃபிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸ்’ என்னும் விசாரணை அமைப்பு எம்.எல்.எம். மற்றும் சீட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த ஒரு கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ததன் விளைவாக, கம்பெனி விவகாரத்துறை, ஆர்.பி.ஐ.யுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்த கட்டுப்பாட்டு அமைப்பு யார் தலைமையில் உருவாகும், இந்த அமைப்புக்கு என்னென்ன அதிகாரம், எப்போது நடைமுறைக்கு வரும் என்பதெல்லாம் இனிமேல்தான் முடிவாக வேண்டிய விஷயங் கள் என்றாலும், இப்படி ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு அமைக்கப்பட இருப்பதைப் பலரும் வரவேற்கவே செய்கிறார்கள்.

''டைரக்ட் செல்லிங்’ என்கிற பெயரில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து சம்பாதிப்பதே இந்நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது. இதனோடு மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்.) யுக்தியை கையாளும் போது லாபம் பன்மடங்கு அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் அத்தனை பணத்தையும் எடுத்துக் கொண்டு காணாமல் போவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது'' என்கிறார் நுகர்வோர் நலன் காக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர்.

''இந்த மோசடி நிறுவனங் களைக் கட்டுப்படுத்த ஓர் அமைப்பை உருவாக்குகிற அதே நேரத்தில், இதில் பணத்தைப் போடும் மக்களையும் திருத்துவதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். தமிழகம் முழுக்க ஏதாவது ஒரு பகுதியிலிருந்து இந்த மோசடி நிறுவனங்களை பற்றிய செய்திகள் தினம்தினம் வந்துகொண்டுதான் இருக்கிறது. மக்களிடம் பேராசை ஒழிந்தால்தான் இதுபோன்ற நிறுவனங்களின் தகிடுதத்தமும் குறையும்'' என்றார் இன்னொரு நிதி ஆலோசகர்.

இதற்காக எல்லா எம்.எல்.எம். நிறுவனங்களையும் தவறு என்று சொல்லிவிட முடியாது. உதாரணமாக, ஆம்வே நிறுவனமும் எம்.எல்.எம். அடிப்படையில் இயங்கக்கூடிய நிறுவனம்தான். இந்நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்கள் விலை மிகுந்தவை என்றாலும். அந்த பொருட்களின் தரத்தைக் குறைத்து சொல்ல முடியாது. எம்.எல்.எம். நிறுவனங்களை கட்டுப்படுத்தும் வாரியத்தை வரவேற்பதாகச் சொல்கிறார் ஆம்வே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ.     பில் பின்கினி.

''பல மோசடி நிறுவனங்கள் இதுபோன்ற பிஸினஸ் செய்து மக்களின் பணத்தை ஏமாற்றி சென்றுவிடும்போது, எங்களைப் போன்ற நிறுவனங்களை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு வரும் போது எங்களைப் போன்ற நிறுவனங்களுக்குப் பாதுகாப்பும் வரவேற்பும் கிடைக்கும்'' என்றார் அவர்.

எப்படியோ, மோசடி எம்.எல்.எம். நிறுவனங் களிடமிருந்து மக்களைக் காப்பாற்ற இப்போதாவது ஒரு வழி பிறந்ததே என்று சந்தோஷப்படுவோம்!

-பானுமதி அருணாசலம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு