Published:Updated:

வெல்த் புரொட்டக்‌ஷன்: பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்கா வழிகள்!

வியூகம்

பிரீமியம் ஸ்டோரி
வெல்த் புரொட்டக்‌ஷன்: பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்கா வழிகள்!

ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு விதமான முதலீட்டு மனோபாவம் உண்டு. அமெரிக்க முதலீட்டாளர்கள் ரிஸ்க் விரும்பிகள். அவர்கள் அதிகம் விரும்புவது பங்குச் சந்தை முதலீட்டைத்தான். ஆனால், நம்மவர்கள் அப்படியில்லை. எந்த காலத்திலும் முதலுக்கு மோசம் வரக்கூடாது என்று நினைப்பவர்கள். எனவே, பங்குச் சந்தையிலிருந்து கொஞ்சம் ஒதுங்கி, எஃப்.டி., அஞ்சல் நிலைய சேமிப்புகளை தேடிப் போகிறார்கள்.

வெல்த் புரொட்டக்‌ஷன்: பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்கா வழிகள்!

''பங்குச் சந்தை ரிஸ்க் நிறைந்தது என்பதற் காக அதைப் பார்த்து விலகி ஓட வேண்டிய அவசியமில்லை. நம் முதலீட்டை சரியாக அமைத்துக் கொண்டோமெனில் நம் ரிஸ்க்கை கணிசமாக குறைத்து, அதிக லாபத்தைப் பார்க்கலாம்'' என்கிறார் சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்டின் செயல் இயக்குநர் சொக்கலிங்கம். முதலுக்கு மோசம் வராதபடி நம் முதலீட்டை பாதுகாப்பாக அமைத்துக் கொள்வது எப்படி என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''பத்தாண்டுகளுக்கு முன்பு தகவல் பரிமாற்றம் என்பது கொஞ்சமாகத்தான் இருந்தது. அதாவது, எல்லாத் தகவல்களும் எல்லாருக்கும் கிடைக்காது. ஆனால், தற்போதைய நிலையே வேறு. மீடியா மற்றும் இன்டெர்நெட் வசதியினால், ஒரு தகவல் ஒரே சமயத்தில் அனைவருக்கும் கிடைக்கிறது. இதனால் அனைவரும் ஒரே முடிவுக்கு வந்து அதிக எண்ணிக்கையிலான பங்குகளை விற்க முயற்சிக்க, அந்த பங்கின் விலை கடுமையாகச் சரிகிறது.

##~##
மேலும், உலகத்தின் முக்கியமான நாடுகள் என்று சொல்லப்படுகிற நாடுகளில்கூட பொருளாதாரம் நிலையாக இல்லை. அங்கு நடக்கும் சிறிய நிகழ்ச்சிகள்கூட இந்திய பங்குச் சந்தை மீது அல்லது குறிப்பிட்ட சில பங்குகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் கொஞ்சம் டிபென்ஸிவ்-ஆக முதலீடு செய்து முன்னேறி செல்வதே சிறந்த வழியாக இருக்க முடியும்'' என்றவர், அதற்கான விதிமுறைகளை எடுத்துச் சொன்னார்.

''ஒருவர் தனது மொத்த முதலீட்டில் 40 சதவிகிதத்தை மட்டுமே பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. வயது குறைவாக இருக்கும்போது பங்குச் சந்தையில் அதிகமாகவும், வயது அதிகமாக அதிகமாக பங்குச் சந்தை முதலீட்டைக் குறைத்தும் கொள்ளலாம் என்று இன்னொரு தியரியும் இருக்கவே செய்கிறது. இதுவும் சரிதான்.

ஆனால், முன்பெல்லாம் வேலை இழப்பு என்பது எங்கேயாவது அபூர்வமாக நடக்கும். ஆனால், இப்போது வேலை இழப்பு, பிஸினஸில் நஷ்டம் என்பவை எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் நாற்பது சதவிகிதம் வரை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்வதே சரியாக இருக்கும்.

முப்பது சதவிகிதத்தைக் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். பத்து சதவிகிதப் பணத்தைக் கையில் வைத்திருக்கலாம். மீதமுள்ள      20 சதவிகிதத்தை ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

பணமாக ஏன் வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஒன்று, அவசரத் தேவைக்கு அந்த பணம் உதவும். இரண்டாவது, பொருளாதார நெருக்கடி வரும்போது பணத்தின் உண்மையான மதிப்பு அதிகரிக்கும். தற்போது இருக்கும் ஒரு பொருளின் விலையைவிட, நெருக்கடி காலத்தில் அந்த பொருளின் விலை மிகவும் குறைவாக இருக்கும். விலையைக் குறைத்தால்தான் பிஸினஸ் செய்ய முடியும் என்ற நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்படும். அப்போது நம் கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு குறைவான விலையில் பொருட்களை வாங்கலாம்.

பங்குகளை எடுத்துக் கொண்டால், குறைந்தபட்சம் 10 முதல் 12 பங்குகளாகத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்கள். ஒருவேளை இதில் ஏதாவது ஒரு பங்கு 40% அளவுக்கு சரிந்தால்கூட உங்களது போர்ட்ஃபோலியோவின் மொத்த சரிவு 4 சதவிகிதமாகவே இருக்கும்.

வெல்த் புரொட்டக்‌ஷன்: பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்கா வழிகள்!

மேலும், சரிந்துகொண்டே போகும் பங்கினை சராசரி செய்யாதீர்கள். கீழே விழுகிற கத்தியைப் பிடிக்க முயற்சி செய்து தோற்றால், அந்த கத்தி உங்கள் கையை பதம் பார்த்துவிடும், ஜாக்கிரதை.

எந்த ஒரு பங்கிலும் 10 சத விகிதத்துக்கு மேல் முதலீடு செய்ய வேண்டாம். அதேபோல், மிட்கேப் பங்குகள் சிலவற்றைக் கவனமாக ஆராய்ந்து பார்த்து விட்டு வாங்குவது நல்லது. நூறு கோடி மார்க்கெட் கேப் இருக்கும் ஒரு பங்கினை, தற்போதைய விலையிலே வாங்காமல் விட்டுவிட்டு அது 3,000 கோடியாக உயர்ந்த பிறகு வாங்குவது சரியான முதலீடாக இருக்காது.

லார்ஜ்கேப் பங்குகள் என்றாலே தரமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறார்கள் பலர்.  இண்டெக்ஸில் இருக்கும் பங்குகள்கூட தரமானவை என்று நினைக்கிறார்கள் சிலர். இந்த எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் நேரமிது.

எந்த பங்காக இருந்தாலும்  அதன் கடந்த கால செயல்பாடுகளை பார்க்காமல் வாங்கக்கூடாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த பங்கு சரியான பாதையில்தான் பயணிக்கிறதா என்பதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் தற்போதைய நிலையில் மதிப்புள்ள, சிறந்த நிர்வாகம் இருக்கிற, எதிர்காலத்தில் அந்த பிஸினஸுக்கு வாய்ப்பு இருக்கிற மாதிரியான பங்கு களாக வாங்குவது நமக்கு பாதுகாப்பையும் வளர்ச்சியை யும் கொடுக்கும்.

தற்போதைய நிலையில் சில பங்குகளின் 'குரோத் ஸ்டோரி’ முடிந்துவிட்டது. இருந்தாலும், அந்த பங்குகளை அதிக முதலீட்டாளர்கள் துரத்துவதால் அதன் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. இது புரியாமல் நாமும் அதை வாங்கினால், நம் முதலீட்டுக்கான பாதுகாப்பை யும் எதிர்பார்க்க முடியாது; வருமானமும் கிடைக்காது.

இறுதியாக, வாரன் பஃபெட் சொன்ன மாதிரி, கண்ணுக்குத் தெரிந்த நிறுவனங்களிலேயே முதலீடு செய்யுங்கள். எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்று தெரியாத ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யாதீர்கள். கடந்த சில வருடங்களாகவே, கரூர் வைஸ்யா பேங்க், கொரமண்டல் இன்டர்நேஷனல், இன்ஃபோசிஸ் போன்ற தென் இந்திய நிறுவனங்களின் செயல்பாடு நன்றாகவே இருந்தது. அதுபோல நமக்கு தெரிந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் நிச்சயம் உங்கள் முதலுக்கு மோசம் வராது'' என்றார்.

பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்கா ஆலோசனைகள் ரெடி.  இனி வியூகத்தை அமைக்க  வேண்டியது நீங்கள்தான்!

-வா.கார்த்திகேயன்.

வெல்த் புரொட்டக்‌ஷன்: பாதுகாப்பான முதலீட்டுக்கு பக்கா வழிகள்!


பிடித்ததைச் செய்யுங்கள்!

மிக்கி மவுஸ், டொனால்ட் டக் ஆகிய கார்ட்டூன்கள் உருவாக்கிய வால்ட் டிஸ்னி, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும், மதிக்கும் மனிதர். கார்ட்டூன் படங்கள், சினிமா கம்பெனிகள், ஸ்டுடியோக்கள், டிஸ்னி லேண்ட் விளையாட்டுப் பூங்காக்கள் எனப் பல்வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டினார்; கோடிக் கோடியாகப் பணம் கொட்ட வைத்தார்.  

டிஸ்னியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், 'இதுவரை நீங்கள் சாதித்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?''  

பளிச் என்று உடனேயே வால்ட் டிஸ்னியின் பதில் வந்தது, 'நான் செய்த எல்லாமே எனக்குப் பிடித்தவை. பிடிக்காத விஷயங்களில் நான் இறங்கவேமாட்டேன். உங்களுக்குப் பிடித்ததைச் செய்யும்போதுதான் உங்களால் அந்தச் செயலில் முழுமூச்சாக இறங்க முடியும், சாதிக்க முடியும். வேண்டா வெறுப்பாகச் செய்யும் காரியங்களில் வெற்றி காண முடியாது!''

- அத்வைத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு