Election bannerElection banner
Published:Updated:

அடி மேல் அடி! என்ன ஆச்சு இன்ஃபோசிஸுக்கு?

அடி மேல் அடி! என்ன ஆச்சு இன்ஃபோசிஸுக்கு?

அடி மேல் அடி! என்ன ஆச்சு இன்ஃபோசிஸுக்கு?

ன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவு சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. இதனால் இந்த நிறுவனத்தின் இமேஜ் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. காலாண்டு முடிவு வந்தபிறகு இந்நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 10 சதவிகிதத்துக்கும் மேல் சரிந்ததோடு, 52 வார குறைந்தபட்ச விலைக்குக் கொஞ்சம் அதிகமாக வர்த்தகமாகிறது. இந்த விலை அடுத்துவரும் நாட்களில் இன்னும்கூட சரியக்கூடும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

இப்படி சொல்வதற்கு என்ன காரணம் என அவர்களிடம் கேட்டோம். பல விஷயங்களைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். முதலாவது, இன்ஃபோசிஸ் தன்னுடைய மார்ஜினை விட்டுக்கொடுப்பதில்லை. இன்னும் பழைய காலம் போலவே அதிக மார்ஜினைக் கொடுக்கும் டீல்களை மட்டுமே முடிக்கிறது. பொருளாதாரச் சிக்கல் காரணமாக அதிக விலை தர விரும்பாத நிறுவனங்கள் வேறு ஐ.டி. நிறுவனங்களைத் தேடிச் சென்றுவிட, இன்ஃபோசிஸின் வருமானம் குறைகிறது.

##~##
ஐ.டி. நிறுவனங்களின் முக்கியமான வருமானம், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான். ஆனால், டி.சி.எஸ். உள்ளிட்ட நிறுவனங்கள் தன்னுடைய எல்லையை சீனா மற்றும் லத்தின் அமெரிக்கா நாடுகளில் விரிவுபடுத்தி இருக்கிறது. இதனால் அவற்றின் வருமானம் அதிகரித்து வருகிறது.

ஐ.டி நிறுவனங்களின் முக்கியமான பிரச்னை ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ள முடியாதது. எல்லா நிறுவனங்களிலும் இந்த பிரச்னை இருந்தாலும், இன்ஃபோசிஸில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. முக்கியமான பணியாளர்களை இன்ஃபோசிஸ் வெகு எளிதாக இழந்து வருகிறது. ஆனால், டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சாதாரணமாக வேலையைவிட்டுச் செல்வதும் இல்லை; செல்ல அனுமதிப்பதும் இல்லை.

மன்னராட்சி நடப்பது போல, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தொடங்கியவர்கள் ஒவ்வொருவராக உயர்பதவிக்கு வந்து ஓய்வுபெறுகிறார்கள். தற்போதைய நிலையில் நிறுவனர்கள் அல்லாத 'புதிய ரத்தம்’ தலைமை பதவிக்கு வந்தால் மட்டுமே அந்த நிறுவனத்தில் புதிய சிந்தனையோட்டம் பிறக்கும். ஆக மொத்தத்தில், தொலைநோக்கு பார்வையுடன் கூடிய இள ரத்தம் தேவை'' என்று முடித்தார்கள் அவர்கள்.

இந்தியாவில் ஐ.டி. என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இன்ஃபோசிஸ்தான். அந்த பெயர் இன்னும் நீடிக்க வேண்டுமென்றால் புதிய தலைமையும் புதிய சிந்தனையும் தேவை! வெளியிலிருந்து வந்த சேர்மன் கே.வி.காமத் சிந்திப்பாரா?

-வா.கார்த்திகேயன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு