பிரீமியம் ஸ்டோரி
நாணயம் மேடை

வங்கிச் சேவை மற்றும் குறைபாடுகள் குறித்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் வங்கி குறைதீர்ப்பாளர் (ரிசர்வ் வங்கி) எஸ்.கணேஷ்.

நாணயம் மேடை

பொதுத்துறை வங்கி ஒன்றில், என்.ஆர்.இ. ஜாயின்ட் அக்கவுன்டில் கடந்த 2003-ம் ஆண்டு 5 லட்ச ரூபாய் ஃபிக்ஸட் டெபாசிட் பத்து ஆண்டுகளுக்குப் போட்டோம். ஆண்டுக்கு 5.5% வட்டி தருவதாகச் சொன்னார்கள். ஆனால், மூன்று ஆண்டு முடிவில் வட்டியை 3%ஆக குறைத்துவிட்டார்கள். கேட்டால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் என்கிறார்கள், அந்த வங்கியில். அப்படி செய்ய முடியுமா?

சங்கீதா, ஹாங்காங்.

''ஒப்பந்தத்தில் வேறு மாறுபட்ட பிரிவு இல்லையென்றால், உறுதியளிக்கப்பட்ட வட்டி விகிதத்தை வங்கி வழங்க வேண்டும்.’'

''முன்னணி பொதுத்துறை வங்கியில் கடந்த 2009-ம் ஆண்டு வீட்டுக் கடன் வாங்கினேன். முதல் ஆண்டில் 8% வட்டி, அடுத்த இரு ஆண்டுகளுக்கு 8.5% வட்டி என அக்ரிமென்டில் எழுதிக் கொடுத்தார்கள். ஆனால், இரண்டாம் ஆண்டில் வட்டியை 9% ஆக உயர்த்திவிட்டார்கள். இப்படி செய்வது சரியா? என்னிடமிருந்து அதிகமாகப் பெறப்பட்ட வட்டியை திரும்ப வாங்கும் வழியைச் சொல்லவும்?

டாக்டர் ப.சரவணன், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்.

''ஒப்பந்தத்தில் உறுதியளிக்கப்பட்ட வட்டி விகிதத்தை வங்கி பின்பற்ற வேண்டும். ஒப்பந்த வட்டி விகிதமும் வசூலிக்கும் வட்டி விகிதமும் வேறுபட்டால், முதலில் வங்கியில் புகார் கொடுக்கவும். ஒருமாத காலத்துக்குள், வங்கி திருப்திகரமான பதில் தராவிட்டால், வங்கி குறைதீர்ப்பாளருக்கு புகார் எழுதலாம்.''

''வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளுக்கும் இடையே பெரும்பாலும் கடன் அட்டை என்கிற கிரெடிட் கார்டு தொடர்பான பிரச்னைகள்தான் அடிக்கடி எழுகின்றன. இதை தவிர்க்க வழியில்லையா?

- சூரியமூர்த்தி, அம்பாசமுத்திரம்.

##~##
'கடன் அட்டையைப் பொறுத்தவரை சேர்க்கைக் கட்டணம், ஆண்டுக் கட்டணம், பணம் எடுக்க கட்டணம், வட்டி, காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம் என ஏராளமான கட்டணங்கள் உள்ளன. இவற்றை விரிவாக அறிந்துகொள்வது அவசியம். அடுத்து பில் தேதி, செலுத்த வேண்டிய மொத்த தொகை, மொத்த தொகையைக் கட்டாவிட்டால் விதிக்கப்படும் கட்டணங்கள், பணம் செலுத்த கடைசி நாள், இலவச கடன் காலம், அதனை கணக்கிடும் முறை பற்றி அறிந்துகொண்டால் பிரச்னைகளை குறைக்க முடியும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களைக் கையாளும் வழிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

• கிரெடிட் கார்டு தொலைந்து போனாலோ, திருடு போனாலோ அல்லது தவறாக பயன்படுத்தப்பட்டாலோ உடனடியாக வங்கிக்குத் தெரிவித்து, அட்டையை முடக்க வேண்டும்.

• உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கப்பட்டால் அல்லது பணம் எடுக்கப்பட்டால் உடனே எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கி அல்லது நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இது உங்களின் பரிவர்த்தனைகளைத் தெரிந்துகொள்ள உதவும்.

• உங்கள் கிரெடிட் கார்டு பாஸ்வேர்டு போன்றவற்றை எவரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.'

ஒரு வங்கி சரியாக சேவை செய்யவில்லை எனில், அது குறித்து வங்கி குறைதீர்ப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள்தான் புகார் தர வேண்டுமா?

- கலாவதி, திருவாரூர்.

''பாதிக்கப்பட்ட நபர் தானாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் மூலமாகவோ முறையிடலாம். இந்த பிரதிநிதி வக்கீலாக இருக்கக் கூடாது.''

கூட்டுறவு வங்கிகளின் நடைமுறை தொடர்பான குறைகளை யாரிடம் தெரிவிக்க வேண்டும்?

- ராஜா சிங், தூத்துக்குடி.

''தொடக்க நிலைக் கூட்டுறவு வங்கிகள் பற்றிய சேவைக் குறைபாடுகள் குறித்து மட்டுமே வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் தெரிவிக்கலாம்.''

எது மாதிரியான புகார்கள், வங்கி குறைதீர்ப்பாளர் திட்டத்தின் கீழ் வராது என விளக்க முடியுமா?

- கார்த்திகேயன், மானா மதுரை.

'கடன் வழங்குவது பற்றிய கோரிக்கைகள் மற்றும் கடன் அல்லது கிரெடிட் கார்டுக்காக கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை பைசல் செய்வது போன்றவை வங்கி குறைதீர்ப்பாளர் திட்டத்துக்கு அப்பாற்பட்டவை. மேலும், வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் புகார்களும் இத்திட்டத்துக்கு அப்பாற்பட்டவை.''

தொகுப்பு: சி.சரவணன்

ரு குறிப்பு: 12.8.12 தேதியிட்ட இதழின் 'நாணயம் மேடை’ பகுதியில் வங்கி குறைதீர்ப்பாளர் எஸ்.கணேஷ் அளித்த ஒரு பதிலின் இறுதியில் '...ஊழியர்களும் எரிச்சல் அடைய வேண்டியிருக்காது’ என்ற வரிகள் அவர் கூறியவை அல்ல. இதனால் தவறான புரிந்துகொள்ளுதல் ஏதேனும் நேர்ந்து இருந்தால் வருந்துகிறோம்.

-ஆர்

நாணயம் மேடை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு