பிரீமியம் ஸ்டோரி
எடக்கு மடக்கு!

சுதந்திர தினம் மனசுக்கு ரொம்ப இதமா இருந்துச்சுங்க. கஷ்டப்பட்டு வாங்கின சுதந்திரத்தைக் கண்ணும் கருத்துமா வச்சு காப்பாத்தணுங்கிறதுல நம்ம மக்களுக்கு இருக்கிற அக்கறைக்கு தாராளமா சல்யூட் அடிக்கலாம்ங்க!  வேத்துமையில ஒத்துமை எங்கிறதுதானே நம்ம மக்களோட பஞ்ச் லைன்!  

ஆனா, பாமர ஜனங்களுக்குத்தாங்க இதெல்லாம்! அரசியல்வாதிங்க  வேற வேற கட்சியைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் பதவிக்கு வந்தா சம்பாதிச்சுடணுமுங்கறதுல எவ்வளவு ஒத்துமையா இருக்கிறாங்கப் பாருங்க!

மத்திய அரசைப் பாருங்க. என்ன முறைப்பு! என்ன விரைப்பு! என்ன இளிப்புன்னு! ஆட்சிகள் மாறாமலேயே காட்சிகள் மாறிக்கிட்டே போகுதே!

பொருளாதாரம் பிஞ்சு நஞ்சு நூலாப் போற இந்த நேரத்துல பொருளாதார வல்லுநர் பிரதமரா இருக்காரே! எதையாவது மேஜிக் பண்ணி வண்டியை ஓட வச்சுடுவாருன்னு பார்த்தா, தள்ளாடற மனுஷனை தடுக்கி விழவச்சு, படுக்கையில படுக்க வச்சுடுவார் போலிருக்கேங்க. அமெரிக்கா பத்திரிகைகாரன் விமர்சனம் பண்ணிட்டான்னவுடனே எனக்கே மூக்கு மேல கோபம் வந்துச்சு. எங்க பிரதமரைப் பத்தியாடா அப்படிச் சொன்னேன்னு மீசையை முறுக்கிகிட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு பிரதமரு விட்டாரு பாருங்க ஒரு ஸ்டேட்மென்டு, எனக்கு எம்மேலேயே கோபம் வந்துடுச்சுங்க.

அப்படி என்ன ஏகாம்பரம் அவரு சொன்னாருன்னு கேட்கறீங்களா? கூட்டணிக்குள்ள ஒருமனதா முடிவெடுக்க முடியலயாம். அதனாலதான் நம்மால வெளிநாட்டு முதலீடுகளை திரட்ட முடியலைன்னு சொல்றாரு. கூட்டணிக்குள்ள ஒருமனதா முடிவெடுக்க முடியலைன்னா, அதுக்குப் பேரு கூட்டணி இல்ல, குழப்பணி.  

கூட்டணிக்குள்ள ஒற்றுமையான முடிவு எடுக்கற அளவுக்கு நிலைமையில்லேன்னா என்ன அர்த்தம்? உங்க கூட்டணி ஒரே விஷயத்துலதான் ஒத்துமையா இருக்கு. அதாவது ஆட்சியில தொடர்ந்து இருந்து அனுபவிக்கணுமிங்கறதுல எல்லாரும் ஒத்துமையா இருக்காங்க. இது புரிஞ்சவுடனே என் மனசுல இருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைச்சுடுச்சுங்க. 2ஜி பிரச்னை தலைவிரிச்சு ஆடுறப்பவும் கூட்டணியில சில காம்ப்ரமைஸ் செய்யத்தான் வேண்டியிருக்குன்னு சொன்னாருன்னு பேப்பரில படிச்சேன். இப்பவும் அதையே வேற மாதிரி சொல்லாருன்னா என்னங்க அர்த்தம்? இந்த கூட்டணி ஒரு போலியான கூட்டணி. ஆட்சியில இருக்கறதுக்கான கூட்டணி. ஆட்சிய நடத்துறதுக்கான கூட்டணியில்லை.

##~##
அவ்வளவு பெருந்தன்மையான மனுசன் இப்படிப்பட்ட கூட்டணியில உயர்ந்த பதவியில எப்படித்தான் உக்கார்ந்துகிட்டு இருக்காரோன்னு சில சமயத்துல நெனைப்பேன். ஆனா, எந்த பதவியா இருந்தாலும் கொஞ்சநாள் உக்காந்துட்டா  போதும், பிறகு அந்த நாற்காலியை யாருக்கும் தர மனசு வராது போலிருக்கு. அட, நீங்க எவ்வளவு நாள் வேணுமுன்னாலும் பதவியில இருங்க. நாட்டைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. மக்கள் படுற கஷ்டத்தை நினைச்சுப் பாருங்க. எதையாவது செஞ்சு, பொருளாதாரத்தை வேகமா ஓடற மாதிரிச் செய்யாம, இப்படி புலம்புறது உங்களுக்கே நல்லா இருக்கா?

கூட்டணியில இதுக்குத் தடையிருந்தா பதவியைத் தூக்கியெறிஞ்சுட்டு பாராளுமன்றத்தைக் கலைச்சுட்டு மக்கள்கிட்ட போங்க. தெளிவா ஓட்டுப் போடுங்க! கூட்டணிங்கிற குழப்பணியைத் திரும்பவும் உருவாக்காதீங்கன்னு ஒவ்வொரு இந்தியக் குடிமகன்கிட்டேயும் சொல்லுங்க. அதை விட்டுட்டு இப்படி ரப்பர் ஸ்டாம்ப்பைவிட மோசமா பொழப்பு நடத்தறீங்களே?

அய்யா, நீங்க இந்தியப் பொருளாதாரத்தை அதிவேகத்தில ஓட வச்ச சிற்பின்னு நாங்க பெருமைப்பட்டுட்டு இருந்தோம். இப்ப நீங்க செஞ்சுட்டு இருக்கற வேலை உங்க புகழை எல்லாம் கீழே தள்ளி குழியும் பறிச்சுடும் போலிருக்கே. செல்போன் கொடுக்கறேன்! டாக் டைம் தர்றேன்னு நீங்கள் சொல்ல ஆரம்பிச்சா, மாநில அரசுங்கெல்லாம் ரெண்டு இட்லியும் கெட்டிச் சட்னியும் கொடுக்கிறோமுன்னு எறங்கிட மாட்டாங்களா? இப்படி அமைதியாவே இருந்தீங்கன்னா சின்னப்புள்ளகூட உங்களை பாத்துக் கேலி பண்ணுமே! இப்பவே செல்போனை சைலன்ட்டுல போடறதுக்குப் பதிலா மன்மோகன்சிங் மோட்ல போடுன்னு எஸ்.எம்.எஸ். விட்றானுங்க விடலைப் பசங்க! அவனுங்க வெறும் வாய்க்கு நீங்க அவலா மாறிட மாட்டீங்களா?  

தினசரி ஆடிக்கிட்டு இருக்கிற நாற்காலியில பயந்து பயந்து உட்கார்றதை விட ஒரு தடவை கீழ விழுந்தாலும் பரவாயில்லை; ஆடாத நாற்காலியை உண்டு பண்ணுவோமுன்னு துணிவா நீங்க எறங்க வேணாமுங்களா? அதை விட்டுட்டு சரியான பயந்தாங்கொள்ளியா சேரை கெட்டியாப் பிடிச்சுகிட்டு உக்கார்ந்திருக்கீங்களே! இது எங்களுக்கில்ல சங்கடமா இருக்கு!

இது முடியாதா! அப்ப பிரித்தலும் பேணிக்கொளலுமுன்னு வள்ளுவர் சொன்னாரே, அதுக்கு என்ன அர்த்தமுன்னு உங்க பக்கத்துல உக்கார்ந்திருக்கிற எங்க ஊர்க்காரர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அய்யா, நீங்க பஞ்சாப் சிங்கமுங்க. இப்படி சத்தம் கேட்டாலே பயந்தா என்ன பண்றது. உங்க பயம் தொடர்ந்துச்சுன்னா எங்க பயம் எகிறிடுங்க. அப்புறம் என்ன? பதினாலுல பணால்தான்.

என்னது போட்டிக்கு வேற ஆளேயில்லியேங்கிறீங்களா! வருவான்! வராமலா போயிடுவான் எவனாச்சும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு