பிரீமியம் ஸ்டோரி
காக்டெய்ல்

1. புது மாப்பிள்ளை ஜார்ஜ் சோரஸ்!

நியூயார்க்  பெரும் பணக்காரர் மற்றும் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸுக்கு 82 வயதாகிறது. இவர் ஹெல்த்கேர் கன்சல்டன்ட்டான தமிகோ போல்டன் என்கிற நாற்பது வயது பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார். ஜார்ஜ் சோரஸுக்கு இது மூன்றாவது திருமணம்; போல்டனுக்கு இது இரண்டாவது திருமணம். சமீபத்தில் தனது 82-வது பிறந்தநாளை கொண்டாடியபோது இந்த திருமணத்தைப் பற்றி அறிவித்தார் ஜார்ஜ் சோரஸ். இவரது முந்தைய திருமணத்தின் மூலம் ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர்.

பணம் பத்தும் செய்யுங்கிறது இதுதானா?

2. பந்தயத்தில் சிக்கிய தீபிகா!

##~##
பொழுது போகவில்லை என்றால் எதைப் பற்றியாவது பெட் கட்டுவது சிலர் வழக்கம். இந்தி நடிகை தீபிகா படுகோனும் இப்படி பெட் கட்ட, அம்மணிக்கு 10 லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம். காக்டெய்ல் எனும் இந்தி படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் விஜயன், டிட்டிதாரு எனும் பாடல் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என்று சொன்னாராம். இதனை தீபிகா மறுத்துச் சொல்ல, இருவரும் பெட் கட்டியிருக்கிறார்கள்.

பெட் தொகை கொஞ்சநஞ்சமல்ல, ஒரு மில்லியன் ரூபாய்! ஆனால், பாட்டு செம ஹிட்டாகிவிட்டது. பந்தயத்தில் தோற்ற தீபிகா அப்படியே ஜகா வாங்கலாம் என்று நினைத்தார். ஆனால், தயாரிப்பாளர் ஒற்றை காலில் நின்று பந்தயத் தொகையை தீபிகாவிடமிருந்து வாங்கிவிட்டாராம். பணம் பறி போச்சே என்கிற பரிதவிப்பில் இருக்கிறாராம் தீபிகா.

அட, வட போச்சே!

3. சின்சியர் சிதம்பரம்!

நிதியமைச்சர் சிதம்பரம் எந்த பதவி வகித்தாலும் அதில் கடமை உணர்வுடன் இருப்பார். அவர் துறையில் இருக்கும் மேல் அதிகாரிகளுடன் தினமும் காலையில் மீட்டிங் போட்டுவிட்டுதான் மறுவேலை பார்ப்பார். மேலதிகாரிகளோடு சேர்ந்து இளநிலை அதிகாரிகளின் கருத்துகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம். தினமும் காலை 8.30 மணிக்கே அலுவலகம் வந்துவிடுவார். இரவு எத்தனை மணிக்கு அலுவலகத்திலிருந்து செல்வார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியுமாம். சிதம்பரம் எப்போது நிதியமைச்சர் பதவி வகித்தாலும், தினமும் நடக்கும் மீட்டிங்கில் அவர் அதிகாரிகளிடம் கேட்கும் கேள்வி 'நேற்றைய வரி வசூல் எவ்வளவு?’ என்பதுதான். அதை வைத்துதான் அடுத்த திட்டமிடல்கள் அத்தனையும் செய்வார்.

செட்டி நாட்டை சேர்ந்தவராச்சே, கணக்கில கில்லாடியாத்தானே இருப்பாரு!

காக்டெய்ல்

4. இவராவது காப்பாற்றுவாரா?

இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுநாள் வரை இந்த பதவியை வகித்து வந்த  கௌசிக் பாசு கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ரகுராம் ராஜன் இந்த பதவிக்கு வந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே சர்வதேச நிதி ஆணையத்தின் சீஃப் எக்கனாமிஸ்ட்-ஆக இருந்தவர். ஐ.ஐ.டி. டெல்லியிலும் ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் எம்.பி.ஏ.வும், அமெரிக்காவில் பொருளாதாரத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு டாக்டர் பட்டமும் பெற்றவர் இந்த ரகுராம் ராஜன்.

இவராவது நமக்கு நல்ல வழி காட்டட்டும்!

5. விலைவாசியில் மும்பை நம்பர் 1

மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் துறை புள்ளிவிவரப்படி விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்று முன்னணியில் நிற்கிறது மும்பை நகரம்! கொல்கத்தாவில் ஒரு கிலோ அரிசி 20 ரூபாய் என்றால், மும்பையில் 28 ரூபாய். ஒரு லிட்டர் பால் கொல்கத்தாவில் 28 ரூபாய். அதுவே மும்பையில் 36 ரூபாய். இப்படி எல்லா பொருட்களும் மும்பையில் அதிகமாக இருக்க காரணம், அங்குள்ள மக்கள் உணவுப் பொருட்களுக்காக செலவு செய்ய தயக்கம் காட்டுவதில்லை என்பதுதான். விலைவாசி உயர்வில் மும்பைக்கு அடுத்தபடியாக இருக்கும் நகரம் எது தெரியுமா? நம்ம சென்னைதான்!

இதுக்கு முடிவே இல்லையா?

- செ.கார்த்திகேயன், இரா.ரூபாவதி,ராபின் மார்லர்,
-  சு.ராம்குமார், பி.செ.விஷ்ணு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு