Published:Updated:

உன்னால் முடியும் பெண்ணே!

குறைகளை மற...நிறைகளை நினை...ஸ்வய்னாவை ஜெயிக்க வைத்த ஃபேஷன் ஜுவல்லரி !படங்கள்: எம்.உசேன்

உன்னால் முடியும் பெண்ணே!

குறைகளை மற...நிறைகளை நினை...ஸ்வய்னாவை ஜெயிக்க வைத்த ஃபேஷன் ஜுவல்லரி !படங்கள்: எம்.உசேன்

Published:Updated:

 பிஸினஸ் வெற்றிக் கதைகள்

##~##

வீழ்ந்து கிடக்கும் ஒருவர், மீண்டெழுந்து தன்னை நிரூபிக்கத் துடிக்கும்போது தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்... தன்னம்பிக்கை! அப்படித்தான் தன்னை இழுத்த துயரப் புதைகுழியில் இருந்து வாழ்க்கையின் வசந்தத்தை நோக்கி வந்திருக்கிறார் ஸ்வப்னா. நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லும் இந்த மாற்றுத்திறனாளி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்து பல பெண்களுக்கும் வாழ்க்கையில் நிமிர்ந்து நடக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஃபேஷன் ஜுவல்லரி பிஸினஸில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ஸ்வப்னாவை, மாலை வேளையில் சென்னை, அமைந்தகரையில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இப்போ எனக்கு 27 வயசாகுது. நான் பிறந்தப்போ எங்க குடும்பத்துக்கு ஆரம்பிச்ச கவலை, இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டு இருக்கு. அம்மாவும் அப்பாவும் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகிட்டாங்க. அப்பா பிரகாஷ், ராஜஸ்தான்காரர். அம்மா செந்தாமரை, தமிழ்நாட்டுப் பொண்ணு. ரெண்டு அண்ணன்கள் எனக்கு.

மத்தவங்க முன்ன வாழ்ந்து காட்டணும்னு அம்மாவும் அப்பாவும் ரொம்பப் போராடினாங்க. குடும்பம் கொஞ்சம் நிதானத்துக்கு வந்து சமயத்துல, நான் பிறந்த பத்தாவது மாசத்துல போலியோவால பாதிக்கப்பட, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பேரிடி. எத்தனையோ ஹாஸ்பிட்டல்களுக்கு தூக்கிட்டுப் போயும் பலன் இல்ல. நடக்க முடியாதுனு உறுதியான பின்னும், ஸ்கூல்ல சேர்த்துப் படிக்க வெச்சாங்க'' என்பவருக்கு, அவர் அம்மாதான் ஊன்றுகோலாக இருந்திருக்கிறார் எல்லாவற்றிலும்.

''பத்தாவது வரைக்கும் அம்மாவோட உந்துதலாலதான் படிச்சேன். பள்ளிக்கூடம் போற தூரம் ரொம்ப சிரமப்படுத்த, பிரைவேட்டா ப்ளஸ் டூ எழுதினேன். ஐ.ஐ.டி. டிப்ளமா படிச்சேன். வீட்டுக்கு பாரமா இருக்கக்கூடாதுனு பல இடங்களுக்கு வேலைக்குப் போனேன். என் உடல் நிலையை எண்ணி நான் வருத்தப்படுறதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டாங்க எங்கம்மா. என் முன்னால யாரையும் நெகட்டிவ்வா பேசவிட மாட்டாங்க. 'உனக்கு என்ன குறைச்சல்..? உன் கையில் வருமானம் வர வழியைத் தேடி’னு விரட்டுவாங்க.

உன்னால் முடியும் பெண்ணே!

மகளிர் சுயஉதவிக் குழு தலைவியா இருக்குற அவங்க, என்னையும் அவங்க குழுவில் சேர்த்துவிட்டாங்க. அங்க ஒருமுறை ஃபேஷன் ஜுவல்ஸ் மேக்கிங் பயிற்சிகள் கிடைச்சப்போ, 'இதை பொழுதுபோக்கா இல்லாம சீரியஸா கத்துக்கோ. நீ சுயமுயற்சியில் முன்னேறுவதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான்னு நினைச்சுக்கோ’னு மனசுல உரம் போட்டாங்க'' என்றவருக்கு, அங்குதான் பிடிமானம் கிடைத்திருக்கிறது.

''கிளாஸில் கத்துக்கொடுக்குற விஷயங்களோட நிற்காம, நானே யோசிச்சு புதுசு புதுசா டிசைன்களை செய்தேன். எல்லாரும் பாராட்டினாங்க. ஆனா, அதை தொழிலா செய்ற தைரியமும் இல்லை, முதலீடும் இல்லை. 'இருந்த இடத்தில் இருந்துட்டே செய்ற வேலை இது. கால்கள் தேவை இல்லை... கைகளும் கிரியேட்டிவிட்டியும் போதும். கரையேற இதுதான் நமக்கான படகு’னு மனசுக்கு சொல்லி சொல்லி தைரியம் ஏத்தினேன். வங்கியில 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். உழைப்பு, கற்பனை, நேர்த்தி இது எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்து வேலை பார்த்தேன். மார்க்கெட்டிங் விஷயங்களையும் கத்துக்கிட்டேன். முதல் மாசமே நல்ல வருமானம் கிடைக்க, நம்பிக்கை அதிகமாச்சு. நான் சம்பாதிச்ச பணத்தை, என் கையில பார்த்தப்ப இருந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை'' எனும்

உன்னால் முடியும் பெண்ணே!

ஸ்வப்னா, அந்த நிறைவோடு நின்றுவிடவில்லை. முயற்சிகளைத் தொடர்ந்திருக்கிறார்.

''நிறைய ஸ்டால்கள் போட்டேன். தேடிப்பிடிச்சு ஆர்டர்கள் வாங்கினேன். ரெகுலர் கஸ்டமர்கள் கிடைச்சாங்க. ஒரு கட்டத்துல, மத்தவங்களுக்கு ஜுவல்லரி மேக்கிங் கிளாஸும் எடுக்க ஆரம்பிச்சேன். இப்போ எங்கிட்ட 10 பேர் கத்துக்குறாங்க. ஒரு வார கிளாஸுக்கு 1,500 ரூபாய் ஃபீஸ் வாங்குறேன். கிளாஸோட முடிச்சுடாம எங்க மெட்டீரியல்ஸ் வாங்கணும், எப்படி லோன் வாங்கணும், மார்க்கெட்டிங் விஷயங்கள், ஆர்டர் எடுக்குறதுனு எல்லாத்துக்கும் வழி காட்டுறேன். என்னைப் பார்த்து, 'என்னால் முடியும்’னு களத்தில் இறங்குங்க. நிச்சயமா வெற்றி பெறுவீங்கனு நம்பிக்கையும் தர்றேன். இப்போ என்னோட மாத வருமானம் பத்தாயிரம் ப்ளஸ்!'' எனும்போது கண்களும் சிரிக்கிறது ஸ்வப்னாவுக்கு!

ஸ்வப்னாவின் அம்மா, ''இவளை நினைச்சு எந்தளவுக்கு கவலைப்பட்டேனோ, இப்போ அந்தளவுக்கு பெருமைப்பட வெச்சுட்டா. இவள மாதிரி இருக்குற மத்த பொண்ணுங்களுக்கும் இவ ஒரு முன் உதாரணமா இருக்கா. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் வழங்கின வண்டிய ஓட்டக்கத்துக்கிட்டு, தன் தொழிலோட மார்க்கெட்டிங் விஷயங்களை எல்லாம் கவனிச்சுக்குறா. அதைப் பார்த்து பல மாற்றுத்திறனாளி பெண்களும் அந்த வண்டியை ஓட்டக் கத்துக்க முன் வர்றாங்க!'' என்றார் உள்ளம் பூரித்து!  

''உடலில் உள்ள குறைகளை நினைச்சு சுயபச்சாதாபத்தை வளர்த்துக்காம, முயற்சிகளையும் போராட்டத்தையும் தொடர்ந்தா நிச்சயம் ஒருநாள் வெற்றி வரும். அதுக்கு நானும் ஓர் உதாரணம்!''

- கம்பீரமாக முடித்தார் ஸ்வப்னா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism