Published:Updated:

நாணயம் மேடை

விகடன் விமர்சனக்குழு
நாணயம் மேடை

வருமான வரி தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் வருமான வரி முதன்மை ஆணையர் (சென்னை) சீதா.செந்தாமரைக்கண்ணன்.

நாணயம் மேடை

எனது வருமான வரி ஆவணங்கள் சிலவற்றில் என் பெயருக்குப் பின்னால் கணவரின் முழுப் பெயரும், சில ஆவணங்களில் கணவரின் இன்ஷியல் மட்டும் என மாறி மாறி உள்ளது. இதனால் எனக்குச் சிக்கல்கள் வருமா? எல்லா ஆவணங்களிலும் பெயரை ஒரே மாதிரியாக கொண்டுவருவது எப்படி?

- ராதாகிருஷ்ணன் விஜயலெட்சுமி, வேளச்சேரி, சென்னை.

''உங்கள் பெயரிலுள்ள உங்கள் கணவர் பெயரை பல விதங்களில் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தால் உங்களுக்கு வருமான வரித் துறையிடமிருந்து எந்த பிரச்னையும் வராது. மேலும், நீங்கள் இதுவரை வருமான வரித் துறையில் தாக்கல் செய்திருக்கும் ஆவணங்களில் உங்கள் பெயரை ஒரே மாதிரி மாற்ற வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எங்கள் துறையில், நீங்கள் நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number -PAN) பெறுவதற்காக, நீங்கள் கொடுத்த விண்ணப்பத்தில், உங்கள் பெயர் எப்படி எழுதப்பட்டுள்ளதோ, அப்படித்தான் உங்கள் பெயர் பயன்படுத்தப்படும். இதைப் பற்றி நீங்கள் அதிகமாகக் கவலைப்பட வேண்டாம்.''

நான் 2011-12-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை 2012, ஜூலை 15-ம் தேதி தாக்கல் செய்தேன். அதில் சில முதலீடுகளை குறிப்பிடாததால் கூடுதலாக வரி கட்டும்படியாகிவிட்டது. நான் வரிக் கணக்கை மாற்றி தாக்கல் செய்து ரீஃபண்ட் பெற வாய்ப்பு இருக்கிறதா?

- கனிஷ்கா, சென்னை-14

''நீங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்த உங்கள் வருமான வரி படிவத்தை உங்கள் வருமான வரி அதிகாரி 'பிராஸஸ்’ செய்திருந்தால், நீங்கள் உங்கள் வருமானத்தைத் திருத்துவதற்கு இயலாது. உங்கள் வருமான வரி அதிகாரி உங்கள் வருமான வரி படிவத்தை இன்னும் 'பிராஸஸ்’ செய்யவில்லை என்றால், நீங்கள் உங்கள் வருமானத்தை திருத்தி, மீண்டும் ஒரு வருமான வரி படிவத்தைத் தாக்கல் செய்து நீங்கள் அதிகமாக கட்டிய வரிப் பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை உங்கள் வருமான வரி அதிகாரி, ஏற்கெனவே உங்கள் வருமான வரி படிவத்தை 'பிராஸஸ்’ செய்திருந்தாலும், அதுபற்றி உங்கள் வருமான வரி ஆணையரிடம், ஒரு வருடத்திற்குள் முறையிட்டால் அவரது ஆணையின் பேரில் நீங்கள் அதிகமாக கட்டிய வரிப் பணத்தை உங்கள் வருமான வரி அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.''

நாணயம் மேடை

''தற்போது எனக்குச் சொந்தமான மனையை விற்பனை செய்துள்ளேன். இந்த தொகையைக்கொண்டு ஆறு மாதத்துக்குள் ஃபிளாட் (அடுக்குமாடி குடியிருப்பு) வாங்க வேண்டும். இல்லையென்றால் வரி கட்ட வேண்டும் என்கிறார் ஆடிட்டர் ஒருவர். இது சரியா? விளக்க முடியுமா?

வி.சபேஷ், சென்னை-17

''உங்கள் ஆடிட்டர் சொல்வது தவறு. நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க இரண்டு வருடம் அவகாசம் உள்ளது.'

##~##
என் மனைவி பணிபுரியும் அலுவலகத்தில் மாதந்தோறும் சம்பளத்தில் வருமான வரி பிடிக்கிறார்கள். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக பலமுறை கேட்டும் ஃபார்ம் 16 தரவில்லை. இதனால், என் மனைவி வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாத நிலை. இந்நிலையில் மனைவி பணிபுரியும் அலுவலகத்தில் ஃபார்ம் 16 பெறாமலே வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியுமா?

- வி.கணேசன், மதுரை-1

''உங்கள் மனைவி தனது வருமான வரி படிவத்தை தாக்கல் செய்ய, தற்போது 16-ம் படிவம் (திஷீக்ஷீனீ 16) அவசியமில்லை. ஒவ்வொரு மாதமும் உங்கள் மனைவிக்கு, அவர்களின் அலுவலகத்தில் கொடுத்த சம்பளம் பற்றிய விவரங்களை வைத்து உங்கள் மனைவி தனது வருமான வரி படிவத்தைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம். வருமான வரி படிவத்தோடு, 16-ம் படிவத்தை இணைத்து தாக்கல் செய்ய வேண்டியது இல்லை.''

எனது மைனர் பேத்திக்கு சேமிப்பு கணக்கு மற்றும் டேர்ம் டெபாசிட் கணக்கு ஒரு தனியார் வங்கியில் இருக்கிறது. எனது பேத்திக்கு 'பெர்சன் ஆஃப் இந்தியன் ஆர்ஜின் (பி.ஐ.ஓ.) கார்டு’ உள்ளது. அவளின் சேமிப்பு கணக்கிற்கு எனது மகன் காப்பாளர் (கார்டியன்). அவளது டேர்ம் டெபாசிட் வட்டியில் டி.டி.எஸ். பிடித்திருக்கிறார்கள். இந்நிலையில் பேத்திக்கு பான் நம்பர் கேட்கிறார்கள். என் பேத்தி மைனர் என்பதால் சேமிப்பு கணக்கிலிருந்து டேர்ம் டெபாசிட்டுக்குப் பணம் செலுத்தப்படுகிறது. டேர்ம் டெபாசிட்டுக்கான வட்டி எனது மகனுக்கு வந்துவிடுகிறது. ஆனால், வங்கி எனது பேத்தியின் பான் நம்பர் கேட்கிறது. இதற்கு யாரிடம் போய் கேட்க வேண்டும்?

- டி.வி.சத்யநாராயணன். (இ-மெயில் மூலம்)

''ஒரு 'மைனர்’ குழந்தை தன்னுடைய சொந்த முயற்சியினால் வருமானம் ஈட்டியிருக்குமானால், அந்த குழந்தையின் 'கார்டியன்’ அந்த 'மைனர்’ குழந்தையின் பெயரிலேயே வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்து அதற்குண்டான வரியைக் கட்டிவிடலாம். ஆனால், அந்த 'மைனர்’ குழந்தையின் வருமானம், அந்த குழந்தையின் சொந்த முயற்சியில் வந்திருக்காவிட்டால், அந்த குழந்தையின் பெற்றோர்களில், யாருக்கு வருமானம் அதிகமாக உள்ளதோ, அந்த பெற்றோரின் வருமானத்தோடு சேர்த்து, வருமான வரி கட்டிய பின், வருமான வரி படிவம் தாக்கல் செய்ய வேண்டும்.

நீங்கள் கொடுத்துள்ள விவரங்களைப் பார்த்தால், உங்கள் மைனர் பேத்தி தனது சொந்த முயற்சியால் வந்த பணத்திலிருந்து 'டேர்ம் டெபாசிட்’ போட்டிருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். எனவே, அந்த 'டேர்ம் டெபாசிட்’டிலிருந்து வரும் வட்டியை உங்கள் மகனின் வருமானத்தோடு அல்லது உங்கள் மருமகளுக்கு உங்கள் மகனைவிட அதிக வருமானம் என்றால் அவரது வருமானத்தோடு சேர்த்து வருமான வரி படிவம் தாக்கல் செய்து, வரி கட்ட வேண்டும். வங்கியைப் பொறுத்தவரையில் உங்கள் பேத்தி பெயரில் ஒரு நிரந்தர கணக்கு எண் (றிகிழி) வாங்கி அவர்களிடம் கொடுத்துவிடுவது நல்லது.'

தொகுப்பு: சி.சரவணன்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்.