நாணயம் மேடை

வருமான வரி தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் வருமான வரி முதன்மை ஆணையர் (சென்னை) சீதா.செந்தாமரைக்கண்ணன்.

நாணயம் மேடை

''என்னுடைய லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் மார்ச் கடைசி வாரத்தில் 50,000 ரூபாய் பிரீமியம் கட்டினால் 15,000 ரூபாய் வரி கட்டாமல் தப்பிக்கலாம் என்கிறார். அடுத்த வாரத்தில் பாலிசி பிடிக்கவில்லை என ரத்து செய்தால் 500 ரூபாய் பிடித்துக்கொண்டு மீதி பணத்தை தந்துவிடுவார்கள். இதற்கு அவருக்குத் தனியாக 1,000 ரூபாய் தந்தால் போதும் என்கிறார். இப்படி செய்வதால் பின்னால் வருமான வரித் துறையிலிருந்து சிக்கல் ஏதுவும் வர வாய்ப்பு உள்ளதா?

- மகேஷ், திருநெல்வேலி.

''நீங்கள் கட்டிய பணத்திலிருந்து ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒரு சிறிய தொகையைப் பிடித்தம் செய்துகொண்டு மீதியைக் கொடுக்குமா, கொடுக்காதா என்று எனக்குத் தெரியாது. வருமான வரித் துறையைப் பொறுத்தவரையில், ஒருவரின் மொத்த வருமானத்திலிருந்து, ரூபாய் ஒரு லட்சத்துக்கு மிகாமல் 80சி என்கிற செக்ஷனின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சேமிப்புகளில் சேமித்தால் ரூபாய் ஒரு லட்சத்திற்கு மிகாத அந்தத் தொகையை கழித்துக்கொண்டு, மீதி தொகைக்கு வருமான வரிச் செலுத்தினால் போதுமானது.

##~##
ஆயுள் காப்பீட்டுக்காக நீங்கள் செலுத்தும் இந்த பிரீமியம் காப்பீடு உறுதித் தொகையில் 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. மேலும், இவ்வாறு ரூ.50,000 சேமித்தால் உங்களுக்கு எவ்வளவு வருமான வரி குறையும் என்பது உங்களின் நிகர வருமானம் எவ்வளவு என்பதைப் பொறுத்து உள்ளது. உதாரணமாக, உங்களின் நிகர வருமானம் 2-2.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால் நீங்கள் கட்டவேண்டிய வருமான வரி 10% மட்டுமே குறையும். உங்களின் நிகர வருமானம் ரூபாய் 5-10 லட்சமாக இருந்தால் நீங்கள் கட்ட வேண்டிய வருமான வரி 20% மட்டுமே குறையும். நீங்கள் குறிப்பிட்டிருக்கிற ரூ.15,000 வரி குறைப்பு, உங்களுக்கு நிகர வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே முடியும்.''

''சொத்தை விற்கும்போது கிடைக்கும் உண்மையான மூலதன ஆதாயத்தை கணக்கிட, வாங்கிய விலையிலிருந்து விற்ற விலையைக் கழித்துவரும் தொகை போக வேறு எந்த செலவுக்கு எல்லாம் கழிவு இருக்கிறது என விளக்க முடியுமா?

- சுரேஷ், காவல்கிணறு.

''ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த சொத்தை விற்றத் தொகையிலிருந்து, அந்த சொத்தை வாங்கிய தொகையையும், அந்த சொத்தை மேம்படுத்த செலவு செய்த தொகையையும், அந்த சொத்தை விற்பதற்காக செலவு செய்த எல்லா தொகைகளையும் (தரகு போன்றவை) கழித்துக்கொள்ளலாம்.''

நாணயம் மேடை

''குடும்பத் தலைவியான நான் என் ஓய்வு நேரத்தில் பத்திரிகைகள் மற்றும் பிரசுரங்களுக்கு எழுதி வருகிறேன். எனக்கு டி.டி.எஸ். பிடித்துவிட்டுதான் மீதித் தொகையைத் தருகிறார்கள். இந்த வரிப் பணத்தை திரும்பப் பெற வழியிருக்கிறதா?

- சுகந்தி, சென்னை-15

''நீங்கள் ஒரு நிதி ஆண்டில் ஈட்டும் எல்லா வருமானங்களையும் கூட்டி அதற்கு எவ்வளவு வருமான வரி என்று கணக்கிட்டு அந்தத் தொகையிலிருந்து உங்களுக்குக் கிடைத்த வருமானங்களிலிருந்து பிடித்த எல்லா வரி பிடித்தங்களையும் டி.டி.எஸ். கழித்து, மீதம் ஏதாவது இருப்பின் அந்த தொகையை கட்டி உங்களின் வருமான வரிப் படிவத்தை வருமான வரித் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரித் தொகையைவிட இந்த வரிப் பிடித்தம் அதிகமாக இருந்தால், இதை உங்கள் வருமான வரி படிவத்தில் காட்டி, அதிகமாகப் பிடிக்கப்பட்ட வரித் தொகையை வருமான வரித் துறையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.''

நான் சுமார் ஒரு மாத இடைவெளியில் பங்குகளை விற்று லாபம் பார்த்து வருகிறேன். இந்த லாபத்துக்கு நான் வருமான வரி எவ்வளவு கட்ட வேண்டும்?

- ராஜபாண்டி, மும்பை.

''உங்கள் நிகர லாபம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு அதிகமாகப் போகவில்லை என்றால் நீங்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. அந்த நிகர லாபம் இரண்டு லட்சத்திற்கு அதிகமானால் நீங்கள் ஈட்டிய லாபத்தில் 15% வரி கட்டவேண்டும்.''

(வருமான வரி பற்றிய பதில்கள் தொடரும்)

தொகுப்பு: சி.சரவணன்,
படம்: சொ.பாலசுப்ரமணியன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு