பிரீமியம் ஸ்டோரி

கான்ட்ராக்டர்கள் படுத்தும் பாடு!

எடக்கு மடக்கு!

நண்பர் ஒருத்தரு வீடு கட்ட லோன் வாங்குன கதையைப் பத்தி போன வாரம் சொன்னேன். வீட்டை கட்டித் தர்ற கான்ட்ராக்டர் எப்படி? நல்லவரா இருந்தா சொல்லுங்க, நாலு பேரு கேட்டா ரெஃபர் பண்றேன்னு என் நண்பர் கிட்ட கேட்டேன். அய்யோன்னு அலறிட்டாரு அந்த நண்பரு! அவரோட அனுபவத்தையும் விலாவாரியா எடுத்துச் சொன்னாரு.

##~##
''ஏ
காம்பரம், வீட்டை கட்டறதுக்கு கான்ட்ராக்டரை பிக்ஸ் பண்ணி விட்டுறதோட வேலை முடிஞ்சு போயிடறதில்லை. கட்டி முடிக்கற வரைக்கும் அந்த கான்ட்ராக்டரோட சண்டை ஏதும் போட்டுடப்படாது. சண்டை போட்டா, பில்டிங் பாதியில நின்னு போயிடும்னு பல பேரு சொல்லியிருக்காங்க. இது உண்மையா, பொய்யான்னு தெரியல. ஆனாலும், உண்மைன்னே வச்சுக்கிட்டு நான் பொறுமையா இருக்கணுமின்னு நினைச்சுகிட்டு கட்ட ஆரம்பிச்சேன்.

பூஜை போடற அன்னைக்கே எடத்தை கிளீன் பண்றதுல ஆரம்பமாச்சு டென்ஷன். பூஜைக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே கான்ட்ராக்டர்கிட்ட போனைப்போட்டு நிலத்தைக் கொஞ்சம் பக்காவா கிளீன் பண்ணிடுங்கன்னு சொல்லியிருந்தேன். கம்ப்ளீட்டா கிளீன் பண்றதாதான் கான்ட்ராக்டர் சொல்லி இருந்தாரு. ஆனா, வாஸ்து பூஜை செய்றதுக்கு மட்டும் கொஞ்சம் எடத்தை கிளீன் பண்ணி வச்சிருந்தாங்க. என்னடா இதுன்னு என் அப்பா புலம்பினாரு. நான்தான் பூஜை நேரத்துல பிரச்னை பண்ண வேணாமுன்னு நெனைச்சு சும்மா இருந்துட்டேன்.  

அப்புறம் பில்டிங் வேலை ஆரம்பிச்சாங்க. பேஸ்மென்ட்ல பில்லரெல்லாம் போட்டு முடிச்சாங்க. எனக்கு ஆபீஸ் வேலைங்கறதால என் அப்பா போய் பாத்துட்டு வந்து, ஒரு பில்லர் கொஞ்சம் கோணலா இருக்குதுன்னு சொன்னாரு. நானும் ஆபீஸ் போறப்ப, சைட்டுக்குப் போய் பார்த்தேன். ஒரு பில்லர் நல்லாவே சாய்ஞ்சிருந்தது. உடனே கான்ட்ராக்டருக்கு போன் பண்ணி கேட்டேன். 'கூப்பிடு அவனை’ என்றார். யார் அந்த அவன்? வாஸ்து பூஜை அன்னைக்கே ஏடாகூடம் பண்ண அதே ஆள்தான்! கான்ட்ராக்டர் அந்த ஆளை செமத்தியா திட்றது கேட்டுது. 'அய்யா! இனிமே இப்படி நடக்காது’ன்னு சொன்ன பிறகுதான் விட்டாரு கான்ட்ராக்டரு. ச்சே, எப்படிப்பட்ட கான்ட்ராக்டருன்னு நான் ஜில்லாயிட்டேன்.

அடுத்து செங்கல் கட்டடம் ஆரம்பிச்சாங்க. அப்பா காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் அங்கேயே கிடந்தாரு. கான்ட்ராக்டரு காலையில ஒரு அரை மணி நேரம், சாயங்காலம் ஒரு அரை மணி நேரம் நேரில வந்து போறாரு. அவரு இருக்கற அந்த ஒரு மணிநேரம் உலகத் தரத்துல வேலை நடக்குற மாதிரி ஒரு மாய்மாலம் நடக்குது. அவரு அந்தப் பக்கம் போயிட்டா, உள்ளூர் தரத்துலகூட வேலை நடக்கிறதில்லை.  செங்கலை தண்ணீல ஊறவச்சு கட்டுன்னு கத்தீட்டு போறாரு. தண்ணியை செங்கல் மேல அடிச்சு வச்சுகிட்டு, ஆனா எடுக்கும்போது தண்ணியே பாக்காத செங்கலை எடுத்து வச்சு கட்டறான். தண்ணீரை தெளிச்சாலே கரையுற செங்கலை வைச்சு கட்டறான்.

எடக்கு மடக்கு!

அப்பகூட வளைஞ்ச பில்லரை எவனும் சரி பண்ணலை. கம்பி கட்டுறவன் கம்பியை தட்டி நேர் பண்ணாமலே கட்டுறான். பில்லர் போட்டா அதில கம்பி வெளியில தெரியுது. இதுல எதைச் சொன்னாலும் எங்கே அவன்? அவனைக் கூப்பிடு. ஆய்! ஊய்ன்னு திட்டுறதுதான் கான்ட்ராக்டரோட மெயின் வேலையா இருந்துச்சு. எப்ப கான்ட்ராக்டர் திட்டினாலும் 'அய்யா! இனிமே நடக்காம பாத்துக்கிறேன் அய்யா’ன்னு அவன் சொல்வான். ஆனா, எதை செய்யக்கூடாதோ அதை ரொம்ப சரியா செய்வான். இதை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து என் தூக்கம் போயிடுச்சு''ன்னு கதையைச் சொல்லிக்கிட்டே போனாரு நண்பரு.  'அடப்பாவி, இது நாடகம் போலல்ல இருக்குது’ன்னேன்.

'ஏகாம்பரம், நாடகம் போலல்ல, நாடகமேதான். இதுல கொடுமையின் உச்சம், சாயங்காலமா கலவை போடுறது. ஒருநாள் நான் லீவு போட்டுட்டு சைட்டுல இருந்தேன். அஞ்சு மணிக்கு பத்து சட்டி கலவை இருந்தது. நான் இருப்பேன்னு தெரியாம கான்ட்ராக்டரு வந்தாரு. பில்டிங்கிற்குள்ளே போறப்ப கலவை தரையில கிடந்துச்சு. அங்க இங்க சுத்திட்டு வர்றப்ப கலவை இருந்த இடத்துல ஒரு மணல் குவியல் மட்டும் இருந்துச்சு. நான் பொறுமை போயி ஒரு குச்சியை எடுத்து மணலை குத்தினா உள்ளார கலவை. 'என்ன சார் இது, சிமென்ட் 340 ரூபா விக்குது! இப்படி கலவையை போட்டு வேஸ்ட் பண்ணினா எப்படி?’ன்னேன்! 'டேய் இங்க வாடா’ன்னு அதே ஆளைக் கூப்பிட்டு ஆக்ட் பண்ணுனாரு பாரு. கட் சொல்றதுக்கு நான் அந்த ஆளு காலில விழவேண்டியதாப் போச்சு.  

அடுத்து, ரூப் காங்கிரீட் போட்ற சமயம். காலையிலேயே களேபரம். கான்ட்ராக்டர் வந்து நின்னுகிட்டு இதை சரி பண்ணு, அதை சரி பண்ணுன்னு. அட்டையை வை. களிமண்ணை வை. ஜல்லியை வச்சு தூக்குன்னு பல இன்ஸ்ட்ரக்ஷன். காங்கிரீட் ஸ்டார்ட் ஆச்சு. ஒரு வண்டியை வைச்சு மேலே கொண்டு போய் கொட்டக் கொட்ட என் பிபி எகிறிச்சு. கான்ட்ராக்டரு கல், மண், சிமென்ட் அப்படீன்னு ஒரு ரேஷியோ சொல்லிட்டு மேலே போய் நிக்குறாரு. இவன் இன்னொரு ரேஷியோல காங்கிரீட் கலக்குறான். மேலே போனா டேய் தண்ணி ஊத்தி அனுப்புன்னு சவுண்ட் விடறாரு. இவன் தண்ணியை விட்டு ஆட்டீடறான். மேலே போனா டேய் தண்ணியைக் குறைங்கிறாரு. அடுத்த வண்டியில உதிரியா அனுப்பறான். இப்படி நாள் பூராவும் கண்ணாமூச்சிதான்’னு நண்பரு சொல்லிட்டே போனாரு.

'இது உனக்கு மட்டும் ஏற்பட்ட விநோத அனுபவமா இருக்கும் போலிருக்கே’ன்னேன்.

எடக்கு மடக்கு!

என்னைய முறைச்சுப் பார்த்துட்டு, 'ஏகாம்பரம், எங்க ஆபீஸுல வீடுகட்டின பல பேரிட்டையும் கேட்டேன் பிரச்னை கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கே தவிர, யாருமே திருப்தியா வீடு கட்டி முடிக்கலை. அத்தோட முடிஞ்சுதா, பிளம்பிங்காரன் அடிக்கிற கூத்து, டைல்ஸ் போடறவன் பண்ற காமெடி, எலெக்ட்ரிஷியன் கொடுக்கற ஷாக்குன்னு போறவன் வர்றவனெல்லாம் நம்ம காசுக்கு உலையை வச்சுட்டுப் போயிடறான். வெட்டிச் செலவுங்கறது கொஞ்ச நஞ்சமில்லை. பிளம்பிங் பண்றவன் ஒவ்வொரு பைப்பா இன்ஸ்டால்மென்டுல சொல்வான். ஒவ்வொன்னுக்கும் வண்டிச்சத்தம் தனித்தனியா தரவேண்டியிருக்கும்.  இவன் வந்தா அவன் வரமாட்டான், அவன் வந்தா இவன் வரமாட்டான்னு ஒரு கண்ணாமூச்சி. டைல்ஸ் போடறவன் மேடும் பள்ளமுமா போட்டுத்தள்ளறான். நம்ம கண்ணுக்கு மேடுபள்ளமா இருக்கிறது அவன் கண்ணுக்கு சரியாத் தெரியுதுன்னு அடம்பிடிக்கிறான். பெயின்டர் எப்ப வருவாரு போவாருன்னு ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

இதையெல்லாம் முடிச்சு கணக்குப்பாக்குறப்ப கான்ட்ராக்டரு, 'சார் உசிரைக் கொடுத்து வேலை செஞ்சிருக்கே’ன்னு சொல்லிட்டு ஒரு ஃபைனல் பில் போட்டாரு பாரு, நான் ஆடிப் போயிட்டேன். என்ன செய்றது குடியிருக்கப் போற வீடு கட்டுன விஷயமாச்சே! யாரு மனசும் கோணக்கூடாதுன்னு நினைச்சு மௌனமா பணத்தைக் கொடுத்துட்டேன். அடுத்த மாசம் கிரகப்பிரவேசம் வச்சுருக்கேன். கட்டாயம் வந்துடு ஏகாம்பரமுன்னு கூப்பிட்டாரு நண்பரு.

அட, கான்ட்ராக்டர்களே, ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ரேஞ்சுக்கு சம்பாதிக்கிறீங்க. உங்களுக்குக் கொடுக்கற ஒவ்வொரு ரூபாயையும் வட்டியும் முதலுமாச் சேர்த்து இரண்டு ரூபாயா பதினைஞ்சு வருஷத்துல வீட்டுக்காரன் பேங்கிற்கு லோனைத் திருப்பிக் கட்டுவான். பெரும்பாலானவங்களுக்கு வீடு கட்டுறது ஒண்ணே வாழ்க்கையில செஞ்ச பெரிய சாதனையா முடிஞ்சுடுது. இதுல நடக்கற ஒவ்வொரு ரூபாய் விரயமும் பூதாகரமா மாறி அவருக்குப் பயங்கரமான வட்டிச் செலவை வச்சுடும். ஒவ்வொரு ரூபாய் சேமிப்பும் அவருக்கு பெருத்த லாபத்தைத் தரும். இது ஏன் உங்களுக்கு சுத்தமாப் புரியமாட்டேங்குது?

இவ்வளவு குழப்பத்துக்கப்புறமும் நல்லதனமா செட்டில் பண்ணியனுப்பணுமுன்னு நினைக்கிறாரே இது தப்பா! உசிரைக் கொடுக்க வேண்டாம். வாங்குற காசுக்குண்டான உழைப்பைக் கொடுங்க. பணம் மதிப்பு மிக்கது. பதினஞ்சு வருஷ உழைப்பை வீடு காவு வாங்கிடுது. நீங்க விளையாட்டா வேலை பார்க்கலாமா? சிக்கனமாவும் சீக்கிரமாவும் வேலையை முடிச்சுக் கொடுங்க.  அப்படிச் செஞ்சா மனசார உங்களை எல்லோரும் வாழ்த்துவாங்க. இல்லீங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு