Published:Updated:

''தரமான சேவையே எங்களை உயர்த்தியது!''

''தரமான சேவையே எங்களை உயர்த்தியது!''

''தரமான சேவையே எங்களை உயர்த்தியது!''

காக்னிசென்ட். பல இந்திய இளைஞர்களின் கனவு நிறுவனம். 1994-ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இப்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐ.டி. கம்பெனி. மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரும் ஐ.டி. நிறுவனமாக வளர்ந்துவிட்ட இந்த குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி (டெக்னாலஜி மற்றும் ஆபரேஷன்ஸ்) ஆர்.சந்திரசேகரன். அவர் நாணயம் விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இதோ:  

##~##
பேட்டிக்கு முன், அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம். சீர்காழியில் 10-ம் வகுப்பு வரை படித்தார் சந்திரசேகரன். பிறகு சென்னை லயோலா கல்லூரியிலும், திருச்சி என்.ஐ.டி.யில் மெக்கானிக்கல் இன்ஜினீரியங் படித்தார். சென்னை அசோக் லேலாண்டில் நான்கு வருடம் வேலை பார்த்தார். பிறகு பெங்களூருவில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் படித்துவிட்டு டி.சி.எஸ்.-ல் ஒன்பது வருடங்கள் வேலை பார்த்தார். காக்னிசென்ட் நிறுவனம் தொடங்கியதிலிருந்து அந்த நிறுவனத்திலேயே பணியாற்றுகிறார். இனி பேட்டி ஆரம்பம்...

சென்ற வருடம் விப்ரோவைத் தாண்டினீர்கள்; இந்தாண்டு இன்ஃபோசிஸ். எப்படி இது சாத்தியமானது?

''எந்த நிறுவனத்தையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்றெல்லாம் நாங்கள் திட்டமிட்டு வேலை செய்யவில்லை. எங்கள்  வேலையை நாங்கள் செய்தோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல, தரமான சேவை தந்தோம். எங்கள் பணியாளர்களுக்கு சவாலான வேலைகளையும் வாய்ப்புகளையும் கொடுத்தோம். இன்று முன்னணி நிறுவனமாக இருக்கிறோம், அவ்வளவுதான்!''

ஐ.டி. துறையின் வளர்ச்சி 11-14% மட்டுமே இருக்கிறது என்கிறது நாஸ்காம். ஆனால், நீங்கள் மட்டும் 20% வளருவோம் என்கிறீர்களே, எப்படி?

''தனியாக தெரிவதற்கோ, யாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்பதற்கோ நாங்கள் இப்படிச் சொல்லவில்லை. எங்கள் வளர்ச்சியில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவை தருவதால் அவர்களும் எங்களுக்கு தொடர்ந்து பிஸினஸ் தருகிறார்கள். உதாரணமாக, எங்களுக்கு 95 சதவிகித பிஸினஸ் ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்கள் மூலமாகவே வருகிறது.''

செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin) குறைவாக (19-20%) இருப்பதால்தான் உங்களுக்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களா?

''அது காரணமல்ல; மற்ற நிறுவனங்களைவிட குறைவான லாப வரம்பை நாங்கள் காண்பிக்கிறோம். அதற்கு மேல் கிடைத்த லாபத்தை மீண்டும் பிஸினஸ் விரிவாக்கத்துக்குத்தான் செலவிடுகிறோம். பிஸினஸில் மேலும் மேலும் முதலீடு செய்தால்  வருமானம் அதிகரிக்கத்தானே செய்யும்!''.

ஐ.டி. துறையின் பொற்காலம் முடிந்துவிட்டதா?

''அப்படி சொல்ல முடியாது. நாஸ்காம் கணக்குபடி, ஐ.டி. துறை 11-14% வரை வளர்ந்திருக்கிறது. இந்த வேகத்தில் வேறு எந்த துறை வளர்ச்சி அடைகிறது? ஐ.டி. துறையின் வளர்ச்சி வேக விகிதம் முன்பைவிட குறைந்திருக்கிறது. காரணம், ஐ.டி.யின் பிஸினஸ் 8 பில்லியன் டாலராக இருந்தபோது 30% வளர்ச்சி சாத்தியம்தான். ஆனால், 80 பில்லியன் டாலர்களுக்கு மேல் சென்றபிறகு அதே சதவிகிதத்தை எதிர்பார்க்க முடியாது. வேலைவாய்ப்புகளை பாருங்கள், கிட்டத்தட்ட 90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைத் தந்திருக்கிறது ஐ.டி. துறை.''

''தரமான சேவையே எங்களை உயர்த்தியது!''

ஐ.டி. துறைக்கு வருகிற இளைஞர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

''நான்கு விஷயங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனலிடிக்கல் ஸ்கில், மேத்தமெட்டிகல் ஸ்கில், குழுவாகப் பணியாற்றும் திறன், இவை அனைத்தையும்விட புதிதாக கற்றுக்கொள்ள நினைக்கும் ஆர்வம். காரணம், ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கும் டெக்னாலஜி மாறிக்கொண்டிருக்கும். கற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால் இந்த துறையில் தாக்குப் பிடிக்க முடியாது.''

உங்கள் நிறுவனத்தை அமெரிக்க சந்தையில் பட்டியலிட்ட நீங்கள், ஏன் இந்தியச் சந்தையில் இன்னும் பட்டியலிடவில்லை?

''நிறுவனத்தைப் பட்டியலிட முடிவு செய்தபோது எங்களுக்கு இரண்டு விஷயங்கள் தோன்றியது. முதலாவது, பணியாளர்கள் இருக்கும் இடத்தில் பட்டியலிடலாமா அல்லது வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தில் பட்டியலிடமா என விவாதித்தோம். இறுதியில் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாக அமெரிக்காவில் பட்டியலிட்டோம். மேலும், பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பட்டியலிடுகின்றன.  நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு இந்திய நிறுவனமாக அமெரிக்காவில் பட்டியலிடுவோம் என்று முடிவெடுத்தோம்.''

இந்திய பங்குச் சந்தையில் எப்போது பட்டியலிடுவீர்கள்?

(சிரித்துக்கொண்டே) ''இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. அதற்காக இந்தியாவில் பட்டியலிடும் வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.''

உங்களது மொத்த வருமானத்தில் அமெரிக்காவிலிருந்து சுமார் 79% கிடைக்கிறது. ஐரோப்பாவில் 17 சதவிகிதமும், இதர நாடுகளில் இருந்து 4 சதவிகிதம்தான் கிடைக்கிறது? ஏன் அமெரிக்காவையே அதிகம் ஃபோக்கஸ் செய்கிறீர்கள்?

''முதலில் அமெரிக்காவில் கவனத்தைக் குவித்து, பிஸினஸை பெருக்கினோம். அடுத்து ஐரோப்பாவில் கால்பதித்து ஓரளவுக்கு சீரான வளர்ச்சியை அடைந்து வருகிறோம். இப்போது மற்ற நாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்னால் இதர நாடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் ஒரு சதவிகிதமாகவே இருந்தது. இப்போது 4 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல வருங்காலத்தில் அமெரிக்காவில் இருந்து வருமானம் குறைந்து, ஐரோப்பா மற்றும் இதர நாடுகளில் இருந்து அதிகமாகும்.''

ரூபாயின் சரிவு உங்களது வருமானத்தை அதிகரித்ததா?

''நாங்கள் ஹெட்ஜிங் செய்திருந்ததால், அதன் மூலம் பெரிய வருமானம் இல்லை.''

உங்களிடம் 2.3 பில்லியன் டாலர் கையிருப்பு உள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?

''பல நிறுவனங்களை வாங்கி எங்களுடன் இணைத்து வருகிறோம். அதைத் தொடர்ந்து செய்வோம். மேலும், புதிய இடங்களை நோக்கிச் செல்வதற்கு, புதிய கட்டுமானங்களை உருவாக்குவதற்கு அந்த பணத்தை பயன்படுத்தப் போகிறோம்.''

விப்ரோ போல வேறு பிஸினஸுக்கு செல்லும் திட்டம் உங்களுக்கு உண்டா?

''அப்படி எதுவும் இல்லை. ஐ.டி. துறையில்தான் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம்.''

சேவைத் துறையில் மட்டுமே இந்திய ஐ.டி. துறை கவனம் செலுத்தி வருகிறது என்கிற விமர்சனத்துக்கு உங்கள் பதில்..?

''இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு அந்த நிலை மாறும். அப்போது நம்மிடம் நிறைய அறிவுசார் சொத்துரிமைகள் (intellectual property) இருக்கும்.''

- வா.கார்த்திகேயன்,
படங்கள்: வி.செந்தில்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு