பிரீமியம் ஸ்டோரி
காக்டெய்ல்

1.மகாத்மா தாலி!

##~##
இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட மகாத்மா காந்திக்கு எல்லோரும் ஒவ்வொரு வகையில் பெருமை சேர்க்க, லண்டன் வாழ் இந்தியரான மணாலி ஜக்தாப் நயீம் தனது கணபதி செலாத் இந்தியன் கிச்சன் ஓட்டலில் 12 வகையான உணவிற்கு மகாத்மா தாலி என பெயரிட்டுள்ளார். மகாத்மா காந்தி பற்றி அனைவருக்கும் தெரிந்தாலும் அவர் சைவ உணவுகளை வாழ்நாள் முழுக்கச் சாப்பிட்டார் என்பது பலருக்கும் தெரியாது. அதை நினைவுபடுத்தும் விதமாக இந்த சைவ உணவிற்கு காந்தியின் பெயரை வைத்தேன் என்கிறார் மணாலி.

நம்மூருக்கு வருமா மகாத்மா தாலி?  

2.ஆஸ்கார் செல்லும் பர்ஃபி!

ரன்பீர் கபூர், இலியானா, பிரியங்கா சோப்ரா நடித்து அனுராக் பாஸு இயக்கிய பர்ஃபி திரைப்படம் வெளியான முதல் பத்து தினங்களில் 100 கோடி ரூபாய் கல்லா கட்டிவிட்டது. வசூலில் மட்டுமல்ல, இந்தியாவின் உயர்தர காதல் காவியம் என கொண்டாடப்படுகிறது. வரும் 85-வது ஆஸ்கார் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பில் இந்த படத்தை அனுப்பி வைக்கப் போகிறார்களாம். இந்த செய்தி கேட்டு மொத்த படக் குழுவினரும் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

கங்கிராட்ஸ் பர்ஃபி டீம்!

3.பின்னேறும் இந்தியா!

'எக்கனாமிக் ஃபிரீடம் ஆஃப் தி வேர்ல்டு 2012’ (Economic freedom of the world) என்கிற சர்வே உலக அளவில் எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாட்டின் பொருளாதார சுதந்திரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் இந்தியாவிற்கு கிடைத்த இடம் 111. முதல் இடத்தில் ஹாங்காங், அதைத் தொடர்ந்து சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் டாப் ஐந்து இடங்களைப் பிடித்திருக்கிறது. இந்தியா, சென்ற ஆண்டு பிடித்த 103-வது இடத்தைகூட தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியாமல் 111-வது இடத்துக்குப் பின்னேறியிருக்கிறது.

என்ன கொடுமை சார் இது!

காக்டெய்ல்

4.காஸ்ட்லி கரீனா!

பாலிவுட்டின் இன்றைய காஸ்ட்லி நாயகி கரீனா கபூர்தானாம். சமீபத்தில் வெளியான கரீனாவின் 'ஹீரோயின்’ படத்தில் அம்மணி அணிந்திருந்த 130 ஆடைகளும் உலகத்தின் மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள் கலெக்ஷனில் இருந்து வந்தவை. அதன் மதிப்பு 1.5 கோடி என்கிறார் படத்தின் இயக்குநர் மது பந்தர்கர். காஷ்டியூமிக்கே 1.5 கோடின்னா அம்மணிக்கு எவ்வளவு செய்திருப்பாரோ?

அம்மாடியோவ்...!!!

5.நொந்து நூலான பிட்ரோடா!

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா சமீபத்தில் புதுமையான ஒரு கருத்தரங்கை டிவிட்டர் மூலம் நடத்தத் திட்டமிட்டார். இதற்கான அறிவிப்பை டிவிட்டரில் வெளியிட்டவுடன் பலரும் உள்ளே புகுந்து பல ஆயிரம் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பிட்ரோடாவால் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகவே, நொந்து நூலாகி டிவிட்டர் கருத்தரங்கை அவசர அவசரமாக முடித்துவிட்டு வெளியேறினார் பிட்ரோடா. டெலிகாம் துறையில் அவர் கிங்குதான். ஆனால், அவருக்கு டிவிட்டர் பற்றி ட்ரைனிங் வேண்டும் என்று பலரும் கிண்டலடித்தது தான் மிச்சம்!

யானைக்கும் அடி சறுக்கும்!

6.அதிக முட்டை, பால்!

தலைமை பொருளாதார ஆலோசகராக சமீபத்தில் பதவியேற்ற ரகுராம் ராஜன், ''தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் விலைவாசியைக் குறைக்க வேண்டும் என்றால், இன்னும் அதிக அளவில் பாலும் முட்டையும் உற்பத்தி செய்ய வேண்டும். விலையைப் பார்க்காமல் வாங்கிச் சாப்பிடுகிற அளவுக்கு முட்டையும் பாலும் முக்கியமான விஷயங்களாகிவிட்டன. இவற்றை அதிகமாக உற்பத்தி செய்தால் விலை குறைந்து, பண வீக்கம் குறையும்'' என்று சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன்.

புதுக் கண்டுபிடிப்பா இருக்கே!

- செ.கார்த்திகேயன், ச.பா.முத்துக்குமார், சு.ராம்குமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு