Published:Updated:

நாணயம் மேடை

நாணயம் மேடை

நாணயம் மேடை

வருமான வரி தொடர்பான அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் வருமான வரி முதன்மை ஆணையர் (சென்னை) சீதா.செந்தாமரைக்கண்ணன்.

நாணயம் மேடை

நான் பி.காம். பட்டதாரி. என் வயது 22. சிறு வயது முதலே வருமான வரி அதிகாரி ஆகவேண்டும் என்று ஆசை. அதற்கு நான் ஏதாவது சிறப்பு படிப்பு படிக்க வேண்டுமா? அல்லது சிறப்பு தேர்வு எழுத வேண்டுமா?

- கிரேஸி, நாகர்கோவில்.

''வருமான வரித் துறைக்குப் பல்வேறு நிலைகளில் ஆட்களைத் தேர்வு செய்கின்றனர். Multi Tasking Staff, Stenographer, Tax Assistants,Inspectors ஆகிய வேலைகளுக்கு டெல்லியில் உள்ள பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) என்ற அமைப்பு ஆட்களைத் தேர்வு செய்கிறது. உதவி ஆணையர் என்ற பதவிக்கு, டெல்லியில் உள்ள மத்திய தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) என்ற அமைப்பு ஆட்களைத் தேர்வு செய்கிறது. நீங்கள் ஒரு பி.காம். பட்டதாரி என்பதால் யூ.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னைப் போன்று ஒரு ஐ.ஆர்.எஸ். (Indian Revenue Service) அதிகாரியாககூட வருமான வரித் துறையில் உங்கள் வேலை வாழ்க்கையைத் (Career) தொடங்கலாம்.

இப்போது எஸ்.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மேலே குறிப்பிட்டுள்ள ஊழியர்களில் மிக மிகக் குறைந்த சதவிகிதத்தினரே தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள். இதனால் எங்களுக்குப் பலவிதமான சிக்கல்கள். எனவே, உங்களைப் போன்ற பலர் மேலே குறிப்பிட்டுள்ள தேர்வுகளை எழுதி, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு வருமான வரித் துறைக்கு வந்தால் எங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.''

நான் என் மருமகளுக்கு என் சம்பாத்தியத்தில் வாங்கிய 30 லட்ச ரூபாய் வீட்டை அன்பளிப்பாக பத்திரம் எழுதி கொடுக்க எண்ணியுள்ளேன். (மகன் பொறுப்பில்லாமல் இருக்கிறான்!) என் மருமகள் கிஃப்ட் டாக்ஸ் ஏதாவது கட்ட வேண்டி வருமா?

-கே.கண்ணப்பன், காரைக்குடி

##~##
''அன்பளிப்பு வரி தற்போது அமலில் இல்லாததால், அன்பளிப்பு கொடுப்பவர்கள், அன்பளிப்பு வரி (கிஃப்ட் டாக்ஸ்) கட்ட வேண்டிய தேவையில்லை. அன்பளிப்பு பெறுபவர்தான் தன்னுடைய வருமான வரியை கட்டும்போது அன்பளிப்பாக வந்த தொகைக்கும் சேர்த்து வருமான வரியைக் கட்ட வேன்டும். அதே நேரத்தில் நெருங்கிய உறவுக்குள் அன்பளிப்பு கொடுக்கும்போது வாங்குபவரும் வருமான வரி கட்டத் தேவை இல்லை.

அந்த வகையில், நீங்கள் உங்கள் மருமகளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பும் 30 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வீட்டுக்கு நீங்கள் அன்பளிப்பு வரி கட்டத் தேவையில்லை; உங்கள் மருமகளும் வருமான வரி கட்டத் தேவையில்லை.''

நாணயம் மேடை

படிவம் 16 இல்லாமலேயே மாதச் சம்பள ரசீதை வைத்தே வரிக் கணக்கு தாக்கல் செய்யலாம் என நீங்கள் சொல்லியிருந்தீர்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் என் மனைவியிடம் பிடித்த டி.டி.எஸ். தொகையை கட்டாமல் விட்டிருந்தால் வருமான வரித் துறையிலிருந்து அவருக்கு நோட்டீஸ் வருமா? அல்லது அவரது நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படுமா? கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?

- வி.கணேசன், மதுரை -1

''சம்பந்தப்பட்ட நிறுவனம் தங்கள் ஊழியரின் சம்பளத்திலிருந்து செய்யப்பட்ட வரிப் பிடித்தத்தை வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டும். பிறகு யார் யார் சம்பளத்திலிருந்து எவ்வளவு எவ்வளவு வரிப் பிடித்தம் செய்தோம் என்ற விவரத்தை இணைய வழி (ளிஸீறீவீஸீமீ) மூலம் எங்களுக்கு அறிவிக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் மட்டுமே உங்கள் மனைவி கட்ட வேண்டிய வருமான வரியிலிருந்து அது கழிக்கப்படும். அவ்வாறு அந்த நிறுவனம் மேற்சொன்ன இரண்டையும் செய்யவில்லையென்றால் உங்கள் மனைவி கட்ட வேண்டிய வருமான வரியில் இந்த தொகையை எங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறைக்காது. அப்போது உங்கள் மனைவிக்கு அவரின் வருமான வரி அதிகாரியிடமிருந்து நிச்சயம் நோட்டீஸ் வரும். அப்படி நோட்டீஸ் வந்தால், உங்கள் மனைவி அவர்களின் வருமான வரி அதிகாரியிடம் அவருக்கு கிடைத்தச் சம்பளத்திலிருந்து வருமான வரிக்காக பிடித்தம் செய்துள்ள தொகையை தனது சம்பள சான்றிதழ் மூலம் நிரூபித்தால், அவரின் வருமான வரி அதிகாரி அந்த நிறுவனத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் வரிப் பிடித்தம் செய்தது உண்மையா, அப்படி வரிப் பிடித்தம் செய்திருந்தால் அதை வங்கியில் எங்களின் கணக்கில் கட்டியிருக்கிறார்களா, இல்லையா என்று பார்த்து அப்படி அந்த நிறுவனம் கட்டியிருந்தால் நீங்கள் கட்டவேண்டிய வருமான வரித் தொகையிலிருந்து அந்த வருமான வரிப் பிடித்ததைக் கழித்துக்கொள்வார். ஒருவேளை அந்த நிறுவனம் அந்த வரிப் பிடித்தத்தை எங்கள் கணக்கில் செலுத்தவில்லை என்றால், அதற்காக உள்ள தனிப் பிரிவிற்கு அனுப்பி பிடிக்கப்பட்ட வருமான வரியை எங்கள் கணக்கில் கட்ட நடவடிக்கை எடுப்பார்.''

-தொகுப்பு: சி.சரவணன்

அடுத்த கட்டுரைக்கு