மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

வீடிருக்க பயமேன்!

அடமானக் கடன்

வீடிருக்க பயமேன்!

நம்மில் பலர் இரண்டாவது வீடு வாங்க, தொழில் தொடங்க, மகன்/மகளுக்கு கல்வி மற்றும் கல்யாணம் என பெரும்பாலான செலவுகளுக்கு உதவி செய்வது வீட்டு அடமானக் கடன்தான். இந்த கடனில் ஒரு வசதி, வீட்டுப் பத்திரத்தை வங்கியில் நீங்கள் அடமானமாக வைத்தாலும் அதில் நீங்கள் குடியிருப்பதற்கான உரிமை இம்மி அளவும் குறையாது என்பதே. வீட்டு அடமானக் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கிச் சொல்கிறார், நிதி ஆலோசகர் யூ.என்.சுபாஷ்.

வீடிருக்க பயமேன்!

''பெரும்பாலான வங்கிகள் வீட்டின் சொத்துப் பத்திரத்தை  ஜாமீனாக ஏற்றுக்கொண்டு கடன் தருகின்றன. அடமானக் கடன் கேட்டு வருபவர்களிடம் வங்கி எதிர்பார்க்கும் ஒரே விஷயம், சொத்தில் எந்த வில்லங்கமும் இருக்கக் கூடாது என்பதே. வீட்டு அடமானக் கடனுக்காக வங்கியை அணுகுகிறவர் அவர் பெயரில் சொத்து இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் வங்கிக் கடன் கிடைக்காது.  

கடன் வாங்கும் நபர் வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும். அந்த வகையில் மாதச் சம்பளம் வாங்குபவர்கள், சொந்த தொழில் செய்பவர்கள் இந்த கடனை வாங்கிக்கொள்ளலாம். கணவன் - மனைவி இருவரும் சம்பளம் பெறுபவராக  இருந்தால், இணைந்து வீட்டு அடமானக் கடனை பெற்றுக்கொள்ளலாம்.

சொத்தின் மதிப்பில் 50 முதல்  70%  வரை கடன் கிடைக்கும். வங்கி தரும் கால அவகாசத்திற்குள் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இ.எம்.ஐ.-ஆக கட்டி கடனை அடைக்க வேண்டும். இந்த கடனுக்கு வங்கிகளும், வீட்டுக் கடன் நிறுவனங்களும் வெவ்வேறான வட்டி விகிதங்களை கையாளுகின்றன. இந்த வட்டி விகிதங்கள் கடன்தாரர் திருப்பிச் செலுத்தும் கால அளவை பொறுத்து மாறுபடும். இருப்பினும் அடமானக் கடன் வட்டி விகிதம் வீட்டுக் கடனுக்கான வட்டிவிகிதத்தைவிட 2 முதல் 4 சதவிகிதம் வரை அதிகமாக இருந்தாலும், தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதத்தைவிட குறைவுதான்.

உதாரணத்திற்கு, வீட்டின் மதிப்பு ஒரு கோடி என்கிறபோது, அந்த மதிப்பில் 60 சதவிகிதத்திற்கு மேல் வீட்டு அடமானக் கடன் கிடைக்கும். இதற்கான வட்டிவிகிதம் 14% என்கிறபோது மாத இ.எம்.ஐ. 79,905 ரூபாய் 15 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டியதிருக்கும். வீட்டு அடமானக் கடனின் பொதுவான காலஅளவு 15 ஆண்டுகள். 55 வயதுள்ள ஒருவர் வீட்டு அடமானக் கடனை எடுப்பவராக இருந்தால் 5 ஆண்டுகளுக்குள் அந்த கடனை முடிக்க வேண்டியதாக இருக்கும்.

ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன்!

##~##
ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன் என்பது வீட்டு கடனுக்கு எதிர்மறையானது. ஒருவர் வீடு கட்ட வாங்கும் வீட்டுக் கடனுக்காக மாதாமாதம் இ.எம்.ஐ. செலுத்துவார். ஆனால், ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோனில் வீட்டை அடமானம் வைத்துவிட்டு மாதாமாதம் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்டத் தொகையை பெற்றுக்கொள்ளலாம். இது பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்களுக்குப் பயன்படும். இந்த திட்டமானது இந்தியாவில் 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தன் பெயரில் வீடு இருக்கும் பட்சத்தில் யார் தயவையும் எதிர்பார்க்காமல் வீட்டை அடமானம் வைத்து ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தின் மூலம் மாதா மாதம் பணத்தை வாங்கி செலவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கடன்தாரர்களுக்குப் பிறகு அவர்களின் வாரிசுகள் கடனை அடைத்துவிட்டு வீட்டை திருப்பிக்கொள்ளலாம். இல்லையெனில் வங்கி, அந்த வீட்டை விற்று கடன் தொகையை எடுத்துக்கொண்டு மீதித் தொகையை வாரிசுகளிடம் ஒப்படைத்துவிடும்.

60 வயதுள்ளவரால்தான் ரிவர்ஸ் மார்ட்கேஜ் திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ரிவர்ஸ் மார்ட்கேஜ் லோன் கால அளவு அதிகபட்சம் 15 முதல் 20 ஆண்டுகள். இந்த கால அளவு வங்கிகள் மற்றும் வீட்டுக் கடன் நிறுவனங்களைப் பொறுத்து மாறுபடும். குறைந்தபட்ச கால அளவு 10 ஆண்டுகள். கடன்தாரர் விருப்பத்திற்கு ஏற்ப மாதம் ஒருமுறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை அல்லது மொத்தமாக கடன் தொகை வழங்கப்படும். இதை அவரவர்களின் தேவைக்குத் தக்கபடி தேர்வு செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு கோடி மதிப்புள்ள சொத்திற்கு 12% வட்டி என்றால்

15 ஆண்டுகளுக்கு வங்கி பணம் தருவதாக வைத்துக்கொண்டால், மாதம் ஒருறை 12,000 ரூபாயும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை 36,400 ரூபாயும், வருடத்திற்கு ஒருமுறை 1.52 லட்சம் ரூபாயும், மொத்தமாக என்றால் 10 லட்ச ரூபாயும் கிடைக்கும்.  

கடன்தாரரின் காலம் முடிந்ததும் அவரின் மனைவி இருந்தால் அவர் அந்த வீட்டின் மூலம் தொகையை வாங்கி செலவு செய்துகொள்ளலாம். அதன்பிறகு வாரிசுதாரர்கள் மொத்த கடனையும் ஆறு மாதங்களுக்குள் செலுத்தி வீட்டை திருப்பிக்கொள்ளலாம். இல்லையெனில் வங்கி அல்லது வீட்டுக் கடன் நிறுவனம் வீட்டை விற்று கடன் தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகையை வாரிசுக்குக் கொடுத்துவிடும்'' என்றார்.

சொந்த வீடு இருக்கும்போது என்றைக்கும் கவலை இல்லை என்று சொல்வது இதற்குத்தானா..?

- செ.கார்த்திகேயன்.