Published:Updated:

30% லாபம்... அள்ளித் தந்த ஷேருச்சாமி!

கண்ணோட்டம்

30% லாபம்... அள்ளித் தந்த ஷேருச்சாமி!

காலையில் 4.30 மணிக்கே 'வாக் போகலாம் வர்றீயா?’ என்று எனக்கும் செல்லுக்கும் மெசேஜ் ஒரே நேரத்தில் வந்தது. நம்பர் புதியதாக இருக்கவே இரண்டு பேரும் திகைத்துப் போனோம். சில்மிஷ மெசேஜ்கள் வருதுன்னு அடிக்கடி பேப்பரில் படிக்கிறோம். ஆனால், ஒரே ரூமில் தங்கியிருக்கும் இரண்டு ஆண்களுக்கு ஒரே நேரத்தில் 'வாக் போகலாம் வர்றீயா?’ என்று வருகிறதே! ஏதேனும் வில்லங்கமோ என்று நினைக்கும்போதே என் போன் அடித்தது. எரிச்சலுடன் போனை எடுத்தால், மறுமுனையில் ஷேருச்சாமி.

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'எ
ன்னடா பசங்களா பயந்துட்டீங்களா?’ என்றார் மிடுக்காய். 'ஹிஹி’ என்று சிரித்து, 'சாமி, எங்கேயிருந்து பேசறீங்க?’ என்றேன். 'உங்க ஊர்ல இருந்துதான். சென்னைக்கு வந்திருக்கேன். இங்க நிலைமை சரியாயிட்டு வருதில்ல! அதான் சிங்கப்பூரிலிருந்து நேத்து நைட் கிளம்பி வந்துட்டேன். பங்களாவுக்கு வந்தவுடன் உங்களுக்கு மெசேஜ் போட்டேன். என்ன வாக்கிங் போற பழக்கமெல்லாம் இருக்குதா! இல்லை, விட்டுட்டீங்களா?’ என்றார். பதிலைச் சொல்வதற்குள், 'சட்டுப்புட்டுன்னு கிளம்பி பங்களாவுக்கு வாங்க. ஒரு டீயைப் போட்டுட்டு பிரிஸ்க்கா வாக்கிங் போவோம்’ என்று சொல்லி பட்டென கட் செய்தார்.

உடனே நானும் செல்லும் முகத்தைக் கழுவிக்கொண்டு கிளம்பி ஓடினோம். ரீபோக் ஷூவும், டீ-ஷர்ட்டுமாய் சாமி அமர்க்களமாக ரெடியாகி இருந்தார். அதிகாலையிலும் '10 ட்ரில்லியன் டாலர் பரிசு காத்திருக்கின்றது - வளமான சைனாவையும் இந்தியாவையும் வசப்படுத்த முடிபவர்களுக்கு’ (The $10 Trillion Dollar Prize: Captivating the Newly Affluent in China and India) என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தார் சாமி. எங்கள் காலடி சத்தம் கேட்டவுடனேயே, 'வாங்கடே’ என்று செல்லமாக அழைத்தார். மனுசன் கெட்டிதான் என்று நினைத்துக்கொண்டோம். சுடச்சுட சாமி தந்த டீயைக் குடித்த உடனேயே, ''வாங்க, நடந்துகிட்டே பேசுவோம்'' என்றார்.

மெயின் ரோட்டுக்கு வந்தவுடனேயே டு-லெட் 3,000 சதுர அடி, 1,000 சதுர அடி என்று ஆங்காங்கே போர்டுகள் தொங்கியதை அதிகாலையின் மங்கலான வெளிச்சத்திலும் உற்றுப் பார்த்தார் சாமி. 'சாமி, இந்த மாதிரி டு-லெட் போர்டுதான் இப்ப நிறைய. நம்ம ஃபிரெண்ட் ஒருத்தர்கூட கட்டடம் கட்டி வச்சுட்டு வாடகைக்கு ஆளில்லாம முழிச்சிகிட்டு இருக்காரு’ என்றான். 'ஒரு ஆறு மாசம் வெயிட் பண்ணச் சொல்லு சரியாயிடும்’ என்று சாமி குறி சொல்வதைப் போல் சொன்னார்.

'அது என்ன சாமி, ஆறு மாசம்? ஜோசியராட்டம் சொல்றீங்களே!’ என்றேன் நான். 'இல்லே இப்பத்தானே அரசாங்கம் கொஞ்சம் பாசிட்டிவ்வான விஷயங்களைச் செய்ய ஆரம்பிச்சிருக்கு. மெள்ள மெள்ள நிலைமை சரியாயிடும்’ என்றார். 'சாமி, இப்ப பங்குச் சந்தை...’ என செல் ஆரம்பிச்சதும் நான் கடுப்பானேன்.

30% லாபம்... அள்ளித் தந்த ஷேருச்சாமி!

'ஏண்டா, ரொம்ப நாள் கழிச்சு சாமி இந்தியாவிற்கு வந்திருக்காரு. நல்லாயிருக்கீங்களா? பிரயாணம் சுகமா இருந்துச்சான்னு விசாரிக்காம, இப்படி வந்ததும் வராததுமா ஷேரைப் பத்திப் பேசுறே’ன்னு கண்டித்தேன். சாமி கடகடவெனச் சிரித்தார். 'கன்னு, செல் கேட்டதுதான் கரெக்ட்டான விசாரிப்பு. பிஸினஸ்மேன் குணம். நீ மிடில்கிளாஸ் மாதவன். எனக்கென்ன கன்னு, சூப்பரா இருக்கேன்! செல்லு, உன் கேள்வியை அவித்துவிடு!’ என்றார் சாமி.

சாமியின் பேச்சை கேட்டு குஜாலாகிப் போன செல், 'சாமி, நீங்க போன ஜனவரியில சொன்ன ஸ்டாக் எல்லாத்தையுமே நான் வாங்கி வச்சிருக்கேன். இப்ப நல்ல லாபத்தில இருக்கு!’ என்றான். 'அக்டோபர் 4-ம் தேதி நிலைமைக்குக் கிட்டத்தட்ட 32 சதவிகித லாபம் இருக்குமே!’ அசால்ட்டாக குறுந்தாடியை தடவியபடி கேட்டார் சாமி. 'அட! ஆமா சாமி எப்படி இப்படி கரெக்ட்டா சொல்றீங்க?’ என்றான் செல். 'டேய், ஷேரைச் சொன்னதே நான்தான். அப்புறம் எவ்வளவு ஏறுச்சுன்னு கணக்கு வச்சுக்கத் தெரியாதா? சரி, என்னென்ன ஷேர் வாங்கியிருக்கேன்னு சொல்லு?’ என்றார்.

'சாமி, நீங்க சொன்ன அத்தனை பங்கையும் வாங்கி வச்சிருக்கோம். இப்ப இதை நாங்க என்ன செய்றது?’ என்று சட்டென கேட்டான் செல். 'ரிஸ்க்கு வேண்டாமுன்னு நினைச்சேன்னா, எல்லாத்தையும் நாளைக்கே வித்துடு. கொஞ்சம் ரிஸ்க் எடுப்போமேன்னு நினைச்சேன்னா, 20 சதவிகிதத்துக்கு மேலே லாபம் தந்துருக்குற எல்லா ஷேரையும் வித்துடு’ என்று சாமி ஒரே போடாகப் போட்டார்.

'சாமி, ஆறேழு மாசத்துக்கு முன்னாடியே நம்ம அரசாங்கம் தப்பை உணர்ந்து நடவடிக்கை எடுக்குமுன்னீங்க. அதே மாதிரி நடவடிக்கை வந்துடுச்சு. பொருளாதாரமும் கொஞ்சம் பிக்-அப் ஆயிடும் போலிருக்கு!’ என்றேன் நான். 'நிச்சயமா வாய்ப்பிருக்கு. அதனாலதான் 2013 ஜனவரியில திரும்பி வரலாமுன்னு இருந்த நான் அக்டோபரிலேயே வந்துட்டேன்’ என்றார் சாமி.

'சாமி, ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் அரசாங்கம் செமத்தியா செயல்பட்டு சந்தையை ஜிவ்வுன்னு மேலே போக வச்சுது. இப்ப மறுபடியும் பழைய குருடி கதவைத் திறடின்னு பட்டும் படாமயும் பேச ஆரம்பிச்சுடுச்சே. அதிலேயும் கமிட்டி, கிமிட்டின்னு பல பேரு பேசறதையும் கேட்டா பயம்மா இருக்கே சாமி!’ என்றான் செல்.

'அடேய்! அரசாங்கம் நெனைச்சதை எல்லாம் ஒடனே செஞ்சுட முடியாது. கூட இருக்கறவன் இருப்பானா, போயிடுவானா? போற மாதிரி பாசாங்குச் செய்வானா? வேற எவனாவது சேருவானான்னு பல கணக்கைப் போட்டுகிட்டே எடுக்க வேண்டிய முடிவு இது. கொஞ்சம் முன்னே பின்னேதான் இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் வரும். சில சமயம் வராமலும் போகும்!’ என்றார் அரசியலை கரைத்துக் குடித்த மாதிரி.

'சரி சாமி, இப்ப நிலைமை என்னவாகுமுன்னு சொல்லுங்க?’ என்றேன் நான். 'அரசாங்கம் நினைக்குற வேகத்துக்கு எதையும் செஞ்சுர முடியாதுன்னாலும், சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர வாய்ப்பிருக்கு. ஆனா, இதனோட இம்பேக்ட் ஓரிரண்டு காலாண்டுகள் முடிவிலதான் தெரியும். செப்டம்பரில முடியற காலாண்டு ரிசல்டுல எந்தவிதமான பெரிய மாறுதலும் இருக்காதுங்கறத நீ நல்லா புரிஞ்சுக்கணும்'' என்றார் சாமி.

'சாமி, ஆகஸ்ட் மாசம் 16600 இருந்த சென்செக்ஸ் இப்போ 18800-க்கு பாய்ஞ்சுடுச்சே! அப்படி என்னதான் நடுவுல நடந்துச்சு?’ என்று கேட்டான் செல். 'தம்பி, ஆகஸ்டுல எதிர்காலம் ரொம்ப மோசமாத் தெரிஞ்சுது. செப்டம்பரில கொஞ்சம் தெளிவடையிற மாதிரி இருந்துச்சு. அதனாலேயே இந்த ஜம்ப். இந்த நிலை தொடர ஆரம்பிக்கிறப்ப உடனடியா மேலே போகாட்டாலும் இந்த லெவலுக்குக் கீழே வேகமாப் போகாம இருந்துடும்’ என்றார். சாமி சொன்னது என் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருந்தது!

30% லாபம்... அள்ளித் தந்த ஷேருச்சாமி!

'நாங்க வந்தா நீங்க செஞ்சதையெல்லாம் கேன்சல் பண்ணிடுவோமுன்னு எதிர்க்கட்சிங்க பயமுறுத்துறாங்களே!’ என்று உள்ளூர இருந்த சந்தேகத்தைக் கேட்டேன். 'எல்லா விஷயத்திலேயும் அப்படி இருக்க முடியாது. நிலைமை மோசமானதாலத்தான் இன்றைக்கு அரசாங்கம் இப்ப இந்த முடிவுகளை எடுத்திருக்கு. அடுத்த எலெக்ஷனுக்குள்ள இந்த முடிவை சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளும் முடிவுகளும் நடைமுறைக்கு வந்துடும். கேன்சலேஷன் அப்படீங்கிறது அவ்வளவு சுலபமா இருக்காது’ என்றார் சாமி.

'அப்ப நம்பி வாங்கிப் போடலாமா சாமி?’ என்றான். 'நம்பி வாங்கிப் போடு. நம்பிக்கைதானே வாழ்க்கை! தவிர, 2020-ல இந்தியா நிஜமாவே எங்கேயோ போயிடும். அப்ப அறுவடை செய்றதுக்காக இப்பவே தரமான விதைகளை போட்டாத்தானே (நல்ல கம்பெனிகளோட ஷேரை வாங்கிவையுங்க) நல்லது'' என்றார். 'பயம்மா இருக்கே சாமி?’ என்றான் செல்.

'எப்பவுமே பயத்தைவிட ஆசை கொஞ்சம் அதிகமா இருக்கறவனாலதான் சந்தையில லாங்டேர்முல ஜெயிக்க முடியும். எல்லாத் தொழிலும் ஏத்த இறக்கத்தைத் தவிர்க்கவே முடியாது. 15500ல இருந்ததால தான் 18800ங்குற லாபம். இறக்கமே கூடாதுன்னா ஏற்றமே இருக்காது. புத்திசாலித்தனமுங்கிறது சரியான நேரத்துல முதலைப் போட்டு சரியான நேரத்துல வெளிய எடுக்கிறதுதான். இதுல சரியான தொழிலில முதலீட்டைப் பண்ணிட்டேன்னா உனக்கு பிரச்னை வர வாய்ப்பேயில்லை. வந்தாலும் பயப்பட வேண்டிய அவசியமிருக்காது.

உன்னைச் சுத்தி இருக்குற தொழில் பண்றவங்களைப்பாரு. லாபம் வரும், நஷ்டம் வரும், தொடர்ந்து நஷ்டம் வரும், டல்லா இருக்கும், தொடர்ந்து லாபம் வரும் அப்படீன்னு பலவிதமான சூழ்நிலையிலும் பிஸனஸை தொடர்ந்து நடத்திக்கிட்டுத்தான் இருப்பாங்க. தொழில்ல முதலீடு செய்யற நீயும் அதே அணுகுமுறையை இங்க வச்சிருக்கணும். அதை விட்டுட்டு கொஞ்ச நாள் டல்லா இருந்தா நான் இனி சந்தைக்கே வரமாட்டேங்கிறதெல்லாம் கிறுக்குத்தனம். அதேமாதிரி சந்தை சரியாயிடுச்சுன்னா ஒரேயடியாய் எகிறிக் குதிச்சு எல்லாப் பணத்தையும் சந்தையில போடுறதும் கிறுக்குத்தனம். தொடர்ந்து தேவையான அளவு முதலீடுகளைச் செஞ்சுகிட்டே இருக்கிறதுதான் புத்திசாலித்தனம்’ என்றார் சாமி.

கிட்டத்தட்ட ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மீண்டும் பங்களாவுக்கே திரும்பி இருந்தோம் நாங்கள். பங்களாவுக்கு வந்து உட்கார்ந்ததும், 'குளிச்சுட்டு சாப்பிட்டுட்டுப் போங்கடே!’ என்றார் சாமி. குளித்து முடித்து, நல்ல டிபனை சாப்பிட்டுவிட்டு கிளம்பும்முன் சாமியிடம் கேட்டான் செல்.

''சாமி, உங்க புண்ணியத்துல எங்களுக்கு 30 பெர்சன்ட் லாபம் கிடைச்சுடுச்சு! இப்ப என்னென்ன ஷேரை வாங்கலாம்னு கொஞ்சம் சொல்லுங்க சாமி!’ 'ஏன் இந்த அவசரம்? நான்தான் இப்ப இங்கேயே வந்துட்டேனே! இந்த ஷேரை வாங்கினா லாபம் கிடைக்கும்னு நான் நெனைச்சா உங்களுக்கு போன் போட்டு சொல்லிட மாட்டேனா?’ என்று ஒரு மடக்கு மடக்கினார் சாமி. அது நமக்கு சரியாகவேபட்டது. ''அப்ப, திரும்ப வருவோம் சாமி!'' என்றான் செல்.

''அடிக்கடி வாங்கடே!'' என்று டாடா காட்டினார் சாமி!