Election bannerElection banner
Published:Updated:

நாணயம் மேடை

நாணயம் மேடை

நாணயம் மேடை

கிரெடிட் கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை, கடன் சார்ந்த அத்தனை சந்தேகங்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார், திஷா - நிதி சார்ந்த ஆலோசனை மையத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

நாணயம் மேடை

அண்மையில் வீட்டுக் கடன் கேட்டு பொதுத்துறை வங்கி ஒன்றுக்குச் சென்றேன். முதலில் கடன் தருகிறேன் என்று சொன்னவர்கள், சில தினங்களுக்குப் பிறகு கடன் தர இயலாது என்றார்கள். வற்புறுத்திக் கேட்டபோது கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை 3,000 ரூபாயை நீண்ட நாட்களாக கட்டாமல் வைத்திருக்கிறீர்கள் என்றார்கள். சில ஆயிரம் ரூபாயைச் சரியாகக் கட்டவில்லை என்றால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீட்டை அடமானமாகக் கொடுத்தும் வீட்டுக் கடன் வாங்க முடியாதா?

             - சி.சுரேஷ் கிருஷ்ணன், சென்னை-600 044

''தற்போது வங்கிகள் அனைத்தும் கடன் கொடுப்பதற்கு முன் சிபில் அறிக்கையை சரிபார்த்தப் பிறகுதான் கடன் தருவதா, வேண்டாமா என்று முடிவு செய்கின்றன. நீங்கள் 3,000 ரூபாயை பல வருடங்களாக கட்டாத விஷயம் சிபில் அறிக்கை மூலம் தெரிய வருகிறது. இந்த சிறிய கடனை கட்ட வசதி இருந்தும், நீங்கள் அதை கட்டாததால், ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி ’willful defaulter’, அதாவது 'வேண்டும் என்றே தவறு செய்தவர்’ ஆக கருதப்படுவீர்கள். அதன்படி நீங்கள் எந்த கடன் பெறுவதற்கும் தகுதி இல்லாதவராக ஆகிறீர்கள். எனவே, வீடு அடமானமாக இருப்பினும், நீங்கள் கிரெடிட் கார்டு நிலுவையைத் தீர்க்காத வரை கடன் பெறுவது கடினம்.''

##~##
அவசரச் செலவுக்கு எங்கள் ஏரியாவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஒரு லட்ச ரூபாய் பெர்சனல் லோன் வாங்கினேன். மூன்று மாதங்கள் சரியாகக் கட்டி வந்தேன். இடையில் நான் வேலை பார்த்த கம்பெனியை மூடிவிட்டார்கள் என்பதால், வேறு குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறேன். இதனால் பெர்சனல் லோன் தவணையைக் கட்ட முடியவில்லை. வங்கியில் இருந்து ஒரு மாதிரியான ஆட்கள் சாயந்திரம் விளக்கு வைக்கிற நேரத்தில் வந்து என் மனைவியை மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். இவர்களிடம் தவணைக் காலத்தை அதிகரித்து வாங்க முடியாதா? மேலும், வங்கி ஆட்கள், என் வீட்டுக்கு வந்து மிரட்டிவிட்டுச் செல்வதைத் தடுக்க முடியாதா?

- பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர், அண்ணா நகர், சென்னை.

''நீங்கள் எந்தவிதமான அவசரச் செலவிற்கு பெர்சனல் லோன் வாங்கினீர்கள் என்று குறிப்பிடவில்லை. குடும்ப மருத்துவச் செலவு போன்ற அவசியச் செலவுக்குக் கடன் வாங்கியிருந்ததற்கான ஆதாரத்துடன் வங்கிக்கு எடுத்து கூறி, உங்களுடைய தற்போதைய நிலையில் எவ்வளவு வருமானம், அதில் எவ்வளவு குடும்பச் செலவு,  உங்களால் மாதந்தோறும் எவ்வளவு கட்ட முடியும் என்பதையும் ஆதாரத்துடன் விளக்க வங்கியை அணுகி,  தவணைக் காலத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வாடிக்கையாளர்கள், தங்களை எப்போது கடன் வசூலிப்பவர்கள் சந்திக்க வேண்டுமென தீர்மானித்து வங்கிக்குத் தெரியப்படுத்தலாம். அவ்வாறு தெரியப்படுத்தியபிறகும் வங்கி ஊழியர்களோ அல்லது கடன் வசூலிப்பவர்களோ நேரம் கெட்ட நேரத்தில் வந்து அடிக்கடி தொந்தரவு செய்தால், வங்கி அதிகாரியையும், பிறகு வங்கியின் மைய அதிகாரியையும் (Nodal officer)) அணுகலாம், முறையிடலாம்.''

வங்கியில் கூப்பிட்டுக் கொடுத்தார்கள் என்பதற்காக, விவரம் தெரியாமல் கிரெடிட் கார்டு வாங்கிவிட்டேன். அதனைக்கொண்டு பொருட்களையும் வாங்கிவிட்டேன். பணம் கட்ட முடியாததால், நான் வாங்கிய 75,000 ரூபாய்க்கு வட்டி, வட்டிக்கு வட்டி எல்லாம் சேர்த்து 1.5 லட்சம் ரூபாய் கட்ட நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இந்த அளவுக்கு என்னால் கட்ட முடியாது. இந்த வட்டியை தள்ளுபடி செய்து அல்லது வட்டியைக் குறைத்து கட்ட வழி இருக்கிறதா?

- திருமலை, மானாமதுரை.

நாணயம் மேடை

''கிரெடிட் கார்டு கடனுக்கு எவ்வளவு அதிகப்படியான வட்டி வசூல் செய்யப்படும் என்பதை, கார்டு வழங்கும்போதே ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி தங்களுக்குத் தெரிவித்திருப்பார்கள். நீங்கள் பொருட்கள் வாங்க கிரெடிட் கார்டை, அதற்கான தொகையை குறிப்பிட்ட நாட்களில் கட்ட முடியும்பட்சத்தில்தான் உபயோகிக்க வேண்டும். பொருளை வாங்கியபிறகு மாதந்தோறும் கட்டவேண்டிய இ.எம்.ஐ.யை கடனாக மாற்றியிருக்க வேண்டும். அப்படி செய்ய தவறியதன் காரணமாகவே உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் வந்து சேர்ந்திருக்கிறது. நீங்கள் வங்கியை நேரடியாக செட்டில்மென்டுக்காக அணுகினால், வங்கி சொல்லும் செட்டில்மென்ட் தொகையை அதிகபட்சமாக மூன்று மாத தவணையில் கட்ட சம்மதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சிபில் அறிக்கையில் கணக்கு செட்டில்மென்ட் மூலம் தீர்க்கப்பட்டது என தெரிவிப்பார்கள். அது எதிர்காலத்தில் தாங்கள் கடன் வாங்குவதற்குத் தடையாக அமையலாம்.''

(திஷா பதில்கள் தொடரும்)

தொகுப்பு: சி.சரவணன்,
படம்: ஆ.முத்துக்குமார்.

குறிப்பு: அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகளைப் பொறுத்தே தெரிவிக்கப்படுகிறது. வாசகர்கள் அவர்களின் சந்தர்ப்பம் மற்றும் தேவையின் அடிப்படையில் சொந்த முடிவெடுக்கவும். திஷா மற்றும் அதன் ஆலோசகர்கள் எக்காரணத்திற்கும் பொறுப்பாக மாட்டார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு