Election bannerElection banner
Published:Updated:

நீண்டகால முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

வர்த்தகம்

நீண்டகால முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

கமாடிட்டியில் குறுகியகால வர்த்தகம், தின வர்த்தகம் என்பதுதான் பெரும்பாலானவர்கள் பின்பற்றும் நடைமுறை. தங்களுக்கு இது சரிப்படாது என்று நினைத்துதான், பலரும் கமாடிட்டி சந்தையிலிருந்து ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால், கொஞ்சம் துணிந்து  நீண்டகால முதலீடு நோக்கில் பணத்தைப் போட்டால், நல்ல லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் வெல்த் டெரிவேட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன். எப்படி என்பதை அவரே சொல்கிறார்.

நீண்டகால முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

''கமாடிட்டி வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்க வேண்டுமெனில், கட்டாயம் பொறுமை தேவை. தவிர, ஒரு கமாடிட்டியின் விலை குறையும்போது ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

இந்தியாவில் கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் நடப்பது    14 மணி நேரம் மட்டுமே. ஆனால், சர்வதேச அளவில் 24 மணி நேரமும் வர்த்தகம் நடைபெறும் என்பதால், இந்திய சந்தை ஆரம்பிக்கும்போது சர்வதேச சந்தையின் தாக்கம் இருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும். தவிர, சர்வதேச விலையைப் பார்ப்பது மட்டுமல்லாமல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பையும் தெரிந்துகொள்ள வேண்டும். இதை தெரிந்துகொள்ளவில்லை எனில், பொசிஷன் எடுப்பது சிரமாக இருக்கும். உதாரணமாக, சர்வதேச அளவில் காப்பரின் விலை ஒரு சதவிகிதம் அதிகரிக்கிறது எனில், நமது கரன்சியின் மதிப்பும் (ரூபாய்) ஒரு சதவிகிதம் அதிகரிக்கும்போது நமக்கு எந்த லாபமும் கிடைக்காது.  

கமாடிட்டியில் வர்த்தகம் செய்தாலும் சரி, நீண்டகால முதலீடு என்றாலும் சரி ஐந்து லட்சம் ரூபாய் குறைந்தபட்சம் முதலீடு செய்தால் நன்றாக வர்த்தகம் செய்ய முடியும். கமாடிட்டி வர்த்தகத்தில் பெரும்பான்மையானவை டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களாக இருப்பதால் டெலிவரி எடுக்க முடியாது.  குறுகியகால வர்த்தகத்தில் ஷார்ட் போகிறவர்கள் நீண்டகாலத்திற்கு ஷார்ட் பொசிஷன் போவதைத் தவிர்க்கவும்.

அக்ரி கமாடிட்டி என்பது அதிக சென்சிட்டிவ்வானவை. அரசின் கொள்கை முடிவுகளுக்கும், ஃபார்வேர்டு மார்க்கெட் கமிஷனின் விதிமுறைகளுக்கும் உட்பட்டு இருக்கும் என்பதால், நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அக்ரி கமாடிட்டியைத் தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, கமாடிட்டி வர்த்தகத்தில் புதிதாக நுழைபவர்கள் முதலில் பேப்பர் டிரேடிங் செய்து பல்வேறு நுணுக்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்'' என்றவர், நீண்டகால முதலீட்டின் அடிப்படையில் எப்படி லாபம் பார்ப்பது என்பதையும் சொன்னார்.

நீண்டகால முதலீட்டில் லாபம் பார்ப்பது எப்படி?

நீண்டகால முதலீடு!

##~##
பங்குச் சந்தையைப் போல கமாடிட்டி சந்தையிலும் கமாடிட்டியை வாங்கி, சிறிது காலத்திற்கு வைத்திருந்து  பிற்பாடு விற்று, லாபம் பார்க்க முடியும். கமாடிட்டியை முதலீட்டு நோக்கில் யாரும் பார்க்க மறுப்பதற்கு காரணம், இதில் அதிகப்படியான தொகையை மார்ஜினாக (முன்பணமாக) கட்ட வேண்டும் என்பதினால்தான். ஒரு லாட் காப்பரை வாங்கினால் அதன் விலை 4,40,000 ரூபாய். ஆனால், இதை வாங்க குறைந்தபட்ச மார்ஜினாக 20,000 - 25,000 தரவேண்டும். ஆனால், குறைந்தபட்ச மார்ஜினைப் போல நான்கு மடங்கு தொகையை (80,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை) கையில் வைத்துக் கொண்டால் நல்லது.

கமாடிட்டியில் முதலீட்டு நோக்கில் வர்த்தகம் செய்யும்போது ஒரு லாட் காப்பருக்கான முழுத்தொகையை கையில் வைத்துக்கொள்ள வேண்டும். மார்ஜின் தொகையைச் செலுத்தி ஒரு லாட் காப்பரை வாங்கியபிறகு பத்து சதவிகித பணம் போக, மீதம் தொண்ணூறு சதவிகித பணம் நம்மிடம் இருக்கும். இனி காப்பரின் விலை இறங்கும்பட்சத்தில், ஒவ்வொரு    2.5 சதவிகித இறக்கத்திற்கு ஒருமுறை வாங்கி ஆவரேஜ் செய்ய வேண்டும்.

ஆவரேஜ் செய்த விலையிலிருந்து விலை உயரும்பட்சத்தில், ஒவ்வொரு 1 சதவிகித உயர்வின்போதும் விற்க வேண்டும். இப்படி கான்ட்ராக்ட் முடிகிற வரை தொடர்ந்து செய்துவந்தால், நல்ல லாபம் பார்க்க முடியும்.

உதாரணமாக, ரமேஷ் என்பவர் ஒரு கிலோ காப்பரை 420 ரூபாய்க்கு வாங்குகிறார். இதன் விலை 1 சதவிகிதம் அதிகரித்தால் 424 ரூபாயாகும். இதனை விற்க வேண்டும். விலை மீண்டும் குறையும்பட்சத்தில் 2.5 சதவிகிதம் இறங்கினால் ஆவரேஜ் செய்ய வேண்டும் என்கிற விதிக்கேற்ப 410 ரூபாயில் மீண்டும் வாங்கி ஆவரேஜ் செய்ய வேண்டும். அந்த விலையிலிருந்து 5 சதவிகிதம் அதிகரித்தால் சுமார் 430 ரூபாய்க்கு வரும். ஆனால், ஒவ்வொரு சதவிகித உயர்வின்போதும் வாங்கியதைக் கட்டாயம் விற்க வேண்டும். இந்த நடைமுறையைக் கொஞ்சம் கவனமாகப் பின்பற்றினால் கமாடிட்டி சந்தையிலும் நீண்டகால நோக்கில் பணம் பார்க்க முடியும்'' என்றார் அவர்.

கொஞ்சம் முயற்சித்துத்தான் பாருங்களேன்!

- பானுமதி அருணாசலம்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு