நாணயம் மேடை

கிரெடிட் கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை, கடன் சார்ந்த அத்தனை சந்தேகங்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார், திஷா - நிதி சார்ந்த ஆலோசனை மையத்தின் முதன்மை ஆலோசகர் எஸ்.கோபாலகிருஷ்ணன்.

நாணயம் மேடை

வங்கிகளில் ஆரம்பிக்கப்படும் நடப்பு கணக்கு / சேமிப்பு கணக்கு / வைப்புத் தொகை கணக்கு ஆகியவைகளில் எத்தனை நாமினேஷன் (Nomination) தரலாம்? நாமினேஷனை இடையில் மாற்றலாமா?

- சுரேஷ் பாலா, கிருஷ்ணகிரி.

''ஒரு வங்கிக் கணக்கிற்கு ஒருவரைத்தான் நாமினியாகத் தரலாம். ஒரே வங்கியில் பல வைப்புத் தொகை கணக்கு இருப்பின், ஒவ்வொரு வைப்புத் தொகைக்கும் ஒவ்வொருவரை நாமினேஷனாக வைத்துக்கொள்ளலாம். இடையில் விருப்பம் போல நாமினேஷனை மாற்றலாம் அல்லது ரத்து செய்யலாம்.''

நான் என் வைப்புத் தொகையை ஒரு பொதுத்துறை வங்கியில் வைத்திருந்தேன். வங்கியிடம், அந்த வைப்புத் தொகை முதிர்வடையும் போது தொகையை வங்கி காசோலை (Bankers cheque) மூலமாக திருப்பித் தர சொல்லி இருந்தேன். அவர்கள் வங்கிக் காசோலை கொடுப்பதற்கு கட்டணம் எடுத்துக்கொண்டு மீதி தொகைக்கு மட்டும் காசோலை வழங்கியிருப்பது சரியா?

- வி.அம்பிகா, சென்னை - 600 045.

''வங்கி தங்களுடைய வங்கியில் முதிர்வடைந்த வைப்புத் தொகையைச் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது தவறு. அவ்வாறு செய்திருந்தால் அதை திருப்பி தரவேண்டும். அந்த வங்கி, வேறு வங்கியில் உள்ள உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு NEFT / RTGS மூலமாக சுலபமாக குறைந்த செலவில் அனுப்பி இருக்கலாம். அல்லது அவர்களாகவே இம்முறையில் குறைந்த செலவில் அனுப்பி உங்களுக்கு ஆலோசனை கொடுத்திருக்க வேண்டும்.''

##~##
கிரெடிட் கார்டுகளுக்கு எந்தவிதமான காப்பீடுகளை வங்கிகள் எடுக்கின்றன? வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட கூடிய இழப்பிற்கு இந்த காப்பீடுகள் உதவிகரமானதாக இருக்குமா?

- குணா, மதுரை-2.

''பொதுவாக வங்கிகள் விபத்துக் காப்பீடு எடுக்கின்றன. அதில் அட்டைதாரர்கள் இறந்துவிட்டாலோ அல்லது செயல்பாடுகளில் பாதிப்படைந்தாலோ அதற்கு காப்பீடு தொகை உதவியாக இருக்கும். வங்கிகள் காப்பீடு நிறுவனத்துக்கு அட்டைதாரரின் நாமினேஷன் விவரங்களை தவறாமல் தெரியப்படுத்தி அது சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என உறுதி செய்ய வேண்டும். வங்கிகள் காப்பீடு நிறுவனத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதலியவற்றை அட்டைதாரர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மேலும், அட்டைதாரர்களின் விருப்பத்தைப் பொறுத்து அவர்களிடம் பிரீமியம் பெற்று அட்டை தொலைந்து போய் அதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்திற்காக காப்பீடு எடுக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்குப் பரிந்துரை செய்துள்ளது.''

நாணயம் மேடை

வங்கியில் வைப்புத் தொகை (Fixed Deposit) முதலீடு செய்யும்போது வருமான வரி சம்பந்தமாக கவனம் கொள்ள வேண்டியவை எவை?

- சுவாமிநாதன், நாகர்கோவில்.

''வங்கியில் வைப்புத் தொகை போடும்போது வாடிக்கையாளர் வருமான வரி வரம்பிற்குள் இருந்தால் வங்கி டி.டி.எஸ். பிடிக்காமல் இருக்க 15 ஜி என்ற படிவத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். (சீனியர் சிட்டிசன் என்றால் படிவம் 15 ஹெச் பூர்த்தி செய்து தர வேண்டும்). எந்த வங்கியில் வைப்புத் தொகை உள்ளதோ, அந்த வங்கியில் வைப்புத் தொகைக்கு ஒரு நிதி ஆண்டில் வட்டியாக ரூ.10,000-க்கு அதிகமானால், அந்த வங்கி டி.டி.எஸ். பிடித்து வருமான வரி துறைக்கு செலுத்துவார்கள். அவ்வாறு பிடிக்காமல் இருக்க படிவம் 15ஜி /15 ஹெச் தர வேண்டும். பான் கார்டு (PAN Card) விவரம் தெரிவித்திருந்தால் டி.டி.எஸ். 10% ஆகவும், பான் கார்டு இல்லாவிட்டால் 20 சதவிகிதமாகவும் பிடித்தம் செய்வார்கள். மேலும், வைப்புத் தொகையை காலம் முடிவதற்குள் முடிக்க வேண்டிய நிலை இருந்தால், அச்சமயம் எவ்வளவு டி.டி.எஸ். பிடித்தம் செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். முன்னாலேயே முடித்திருந்தால், ஏற்கெனவே குறிப்பிட்ட வட்டியைவிட குறைந்த வட்டி, அது எத்தனை காலம் வங்கியில் வைக்கப்பட்டிருந்தது என்பதைப் பொறுத்து கிடைக்கும். ஆனால், டி.டி.எஸ். பழைய வட்டி விகிதத்தின்படி பிடித்தம் ஆகியிருக்கும். எனவே, டி.டி.எஸ். அதிகமாக செலுத்தியிருந்தால் அந்த நிதி ஆண்டு முடிந்தவுடன் வருமான வரி படிவம் சமர்ப்பித்து அதிகப்படியாக டி.டி.எஸ். செலுத்தியதைத் திரும்ப பெறலாம்.''

தொகுப்பு: சி.சரவணன்.

குறிப்பு: அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் வங்கிகளின் வழக்கமான செயல்பாடுகளைப் பொருத்தே தெரிவிக்கபடுகிறது. வாசகர்கள் அவர்களின் சந்தர்ப்பம் மற்றும் தேவையின் அடிப்படையில் சொந்த முடிவெடுக்கவும். திஷா மற்றும் அதன் ஆலோசகர்கள் எக்காரணத்திற்கும் பொறுப்பாக மாட்டார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு