நாணயம் மேடை
நாணயம் மேடை

குஜராத்தில் இருக்கும் எனது நண்பரிடமிருந்து ரெடிமேட் ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளேன். குஜராத் அல்லது சென்னை துறைமுகம் இவற்றில் எதன் மூலம் ஏற்றுமதி செய்தால் லாபகரமாக இருக்கும். இதற்கான சட்டம் மற்றும் விதிமுறைகள் பற்றி விளக்கிச் சொல்ல முடியுமா?

- மனிஷ், புதுச்சேரி.

''ஏற்றுமதி பொருட்களை உருவாக்குவதற்கான மூலப் பொருட்கள் அல்லது ஏற்றுமதிப் பொருட்கள் கிடைக்கும் பகுதியில் அமைந்திருக்கும் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்வதே நல்லது. இதன் மூலம் போக்குவரத்து செலவு, குடோன் செலவு உள்ளிட்ட செலவுகளை கணிசமாக மிச்சப்படுத்தி அதிக லாபம் சம்பாதிக்க முடியும். பொதுவாக, இந்தியாவிலுள்ள எந்த துறைமுகத்தின் மூலமும் ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளரின் வசதிக்கு ஏற்ப பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். இதற்கு என தனியாக சட்டமோ அல்லது விதிமுறைகளோ இல்லை.''  

தென்னைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் எந்தெந்த நாடுகளில் இருக்கிறது?

- பி.கோலப்பன், திருப்பதிசாரம், கன்னியாகுமரி மாவட்டம்.

##~##
''பனை மரத்தை போலவே தென்னை மரத்தையும் கற்பகத் தரு என்று சொல்லலாம். காரணம், அதிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் பயனுள்ளதே. தென்னைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருக்கிறது. தென்னை நார், தேங்காய், தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய், தேங்காய் மட்டை, ஓட்டில் செய்த பொருட்கள், தேங்காய் மூலம் செய்த பலகாரங்கள், தென்னங்கரி என பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்க முடியும். ஐக்கிய அரபு நாடுகள் (யூ.ஏ.இ.), சவுதி அரேபியா, சீனா, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு தென்னைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.''  

இந்தியாவில் விளையும் அனைத்துப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியுமா?

- கமலா, விழுப்புரம்.

''தற்போதைய நிலையில் இந்தியாவில் விளையும் அனைத்து வேளாண் பொருட்களையும் தாராளமாக ஏற்றுமதி செய்ய முடியும். அதே நேரத்தில், பல பொருட்களுக்கு இவ்வளவுதான் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிற அளவுகோல் இருக்கிறது. ஏற்றுமதியால் உள்நாட்டில் அந்த பொருளின் விலை மிகவும் அதிகரிக்காமல் இருப்பது மிக அவசியம். மேலும், உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும்போது குறிப்பிட்ட பொருளுக்கு ஏற்றுமதி தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டில் உள்நாட்டில் வெங்காயம் விலை மிகவும் அதிகரித்ததால் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வது போல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏதாவது ஒரு பொருளுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் மற்ற பொருட்களைக் கொண்டு சமாளிக்க முடியும்.''

நாணயம் மேடை

இந்தியாவிலிருந்து எந்தெந்த நாடுகளுக்கு எல்லாம் வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும்?

- அல்போன்ஸ், கல்லிடைக்குறிச்சி.  

''இந்திய அரசு ஏற்றுமதியை மிகவும் ஊக்கப்படுத்துகிறது. அந்த வகையில் ஏற்றுமதிக்கு எந்தவிதமான வரியும் இல்லை. அதே நேரத்தில், ஏற்றுமதி செய்யும் வகையில் ஏதாவது வரி செலுத்தியிருந்தால் அதனை ஏற்றுமதி செய்தபிறகு திரும்பக் கோரி பெற முடியும்.''

முறுக்கு, சீடை, ரவா லட்டு போன்ற நம்மூர் உணவுப் பொருட்களை எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்?  

ராமமூர்த்தி, திருநெல்வேலி.

''இந்தியர்கள் எங்கெல்லாம் அதிகம் வசிக்கிறார்களோ, அங்கெல்லாம் நீங்கள் குறிப்பிட்டுள்ள பலகாரங்களுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், சவுதி அரேபியா, அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் சம்பாதிக்கலாம்.''

தொகுப்பு: சி.சரவணன்,
படம்: ஜெ.வேங்கடராஜ்.

நாணயம் மேடை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு