Published:Updated:

பிஸினஸ் சமூகம் - டி.எஸ்.நாராயணசாமி!

பிஸினஸ் வரலாறு - பிராமணர்கள்!

பிரீமியம் ஸ்டோரி

டி.எஸ்.நாராயணசாமி!

பிஸினஸ் சமூகம் - டி.எஸ்.நாராயணசாமி!

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை தொடங்கிய சில ஆண்டுகளுக்குள்ளேயே அகில இந்திய அளவில் மிக முக்கியமான தொழிலதிபர் ஆனார் டி.எஸ்.நாராயணசாமி.

##~##
பி
ராமண சமூகத்தினர் அதிக அளவில் வசித்தது தஞ்சை மாவட்டத்தில்தான். கலாசார வளர்ச்சிக்கு தஞ்சை பிராமணர்களின் பங்களிப்பு மிகப் பெரிது. இசையாகட்டும், இலக்கியமாகட்டும் தமிழகமே மெச்சிக்கொள்கிற அளவுக்கு முன்னணியில் இருந்தவர்கள் தஞ்சை பிராமணர்கள்.

தஞ்சைக்கு அடுத்தபடியாக குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்கு பிராமணர்கள் வாழ்ந்தது திருநெல்வேலி மாவட்டத்தில். இந்த மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்த பிராமணர்கள் புதிய முயற்சிகளுக்கு முதலில் தம்மை உட்படுத்திக்கொள்கிறவர்களாக இருந்தார்கள். இசை, இலக்கியம் போன்றவற்றுக்கு கல்லிடைக்குறிச்சி பிராமணர்கள், தஞ்சை பிராமணர்கள் அளவுக்குப் பெரிய பங்களிக்கவில்லை என்றாலும், தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அவர்கள் செய்த பங்களிப்பு மிகப் பெரிது. டி.வி.சுந்தரம் அய்யங்கார், சிம்சன் அனந்தராமகிருஷ்ணன் என அந்த வரிசையில் இடம் பெறுகிற தொழிலதிபர்கள் பலர். அந்த வரிசையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய     டி.எஸ்.நாராயணசாமிக்கும் முக்கியமான இடமுண்டு.

1911-ம் ஆண்டில் திருநெல்வேலியில் பிறந்தார் டி.எஸ்.நாராயணசாமி. அவரது குடும்பம் அந்த காலத்திலேயே செல்வச் செழிப்பில் திளைத்தக் குடும்பம். அப்பா    டி.எஸ்.ஸ்ரீநிவாச அய்யரும், தாத்தா தருமபுரம் சுப்பராய அய்யரும், பெரும் பணத்தோடு பல்வேறு தொழில்களைச் செய்து வாழ்ந்தவர்கள்.

ஸ்ரீநிவாச அய்யரின் செல்ல மகனான நாராயணசாமி பள்ளி, கல்லூரிப் படிப்பை திருநெல்வேலியிலே முடித்தார். படித்து முடித்த கையோடு இந்தோ கமர்ஷியல் பேங்கில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவரைப் போன்ற இளைஞர்கள் எத்தனையோ பேர் இருந்தனர். ஆனால், அவரிடமிருந்த பல தனிப்பட்ட குணங்கள் அவரை மற்ற இளைஞர்களிடமிருந்து தனித்துக் காட்டின. வங்கிகளின் கணக்குவழக்கு விஷயத்தில் கச்சிதமாக இருந்தார். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான நிதி உதவியை செய்து தருவதில் அலாதியான கவனம் செலுத்தினார். வெள்ளை வேஷ்டியும், ஜிப்பாவும் அணிந்து சிரித்த முகத்தோடு எப்போது காணப்பட்ட நாராயணசாமியின் மீது எல்லோரும் வைத்தது அபரிமிதமான நம்பிக்கையை. அந்த நம்பிக்கைக்கு அவர் ஒருநாளும் பங்கம் வைத்ததில்லை.

ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் அவர் சில ஆண்டுகள் வேலை பார்த்தார். அங்கிருந்த பெரும் பணக்காரர்கள், ஜமீன்தார்கள் என பலரும் நாராயணசாமியுடன் பிஸினஸ் உள்பட பல்வேறு விஷயங்களைப் பேசி ஆலோசனை கேட்டார்கள். தெலுங்கும் இந்தியும் அவருக்குச் சரளமாக வரும் என்பதால் அவர்களுக்கு எளிதில் புரியக்கூடிய மொழியில் பேசி, பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார் நாராயணசாமி. அதனால் அவரோடு உறவு வைத்திருந்தவர்கள் மீண்டும் மீண்டும் அவரைத் தேடி வந்தார்கள்.

அவருக்கு முப்பது வயதானபோது வங்கியின் பல்வேறு காரியங்கள் தொடர்பாக அரசு  அதிகாரிகளை அடிக்கடி சந்தித்தார். அந்த சமயத்தில்தான் நம் நாட்டில் தொழில் முயற்சிகளுக்கான வாய்ப்பு கொட்டிக் கிடப்பதை நேரடியாகப் புரிந்துகொண்டார். எக்கச்சக்கமான இயற்கை வளம், சரளமாக கிடைத்த நிதி உதவி, தொழில் வளர்ச்சியை ஊக்குவித்த அரசாங்கம் என பல சாதகமான அம்சங்கள் அப்போது இருக்கவே, வங்கி வேலையை விட்டு விட்டு, சொந்தமாகத் தொழில் தொடங்க முடிவு செய்தார் நாராயணசாமி. 1945-ல் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் தொடங்கியது இப்படித்தான்.

சிமென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை திருநெல்வேலியில் தொடங்க முடிவு செய்தார். சிமென்ட் தயாரிக்கத் தேவையான சுண்ணாம்புக்கல் திருநெல்வேலி பகுதியில் கிடைத்ததே அங்கு தொழிற்சாலைத் தொடங்க முக்கிய காரணம். தொழிற்சாலை அமைக்கும் நாராயணசாமியின் முயற்சிக்கு துணை நின்றவர்கள் இருவர். சங்கரலிங்க அய்யர் தொழிற்சாலை அமைக்கத் தேவையான அத்தனை வேலைகளையும் களத்தில் இருந்தபடி செய்தார். தொழிற்சாலை அமைக்கத் தேவையான நிதியை தேடிப் பிடிப்பதில் பக்க துணையாக நின்றார் லட்சுமணன். பணத்தை ஏற்பாடு செய்ததோடு, தொழிற்சாலைக்கான அனுமதியை அரசிடமிருந்து வாங்குவது தொடர்பான அத்தனை வேலைகளையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார் நாராயணசாமி. 1945-ல் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் மக்களிடம் பணம் கேட்டு வந்தபோது, எதிர்பார்த்ததைவிட அதிகமான பணம் கிடைத்தது.

பிஸினஸ் சமூகம் - டி.எஸ்.நாராயணசாமி!

திருநெல்வேலியில் சங்கர் சிமென்ட் தொழிற்சாலை 1949-ல் ஒரு யூனிட் மூலமாக ஒரு நாளைக்கு 350 டன் சிமென்டை உற்பத்தி செய்தது. 1956-ல் இரண்டாவது யூனிட் தொடங்கப்பட்டு அதன் மூலம் 400 டன் சிமென்ட் உற்பத்தியானது. அடுத்த சில ஆண்டுகளில் மூன்றாவது யூனிட்டும் தொடங்கப்பட, 1964-ல் அத்தொழிற் சாலையிலிருந்து மட்டும் ஆண்டொன்றுக்கு பல லட்சம் டன் சிமென்ட் தயாரானது.

இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது நாராயணசாமியின் நிர்வாகத் திறமைதான். உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே தனது நிறுவனத்தை இன்னும் பெரிதாக வளர்த்தெடுக்க முடியும் என்று நினைத்தார் அவர். அதை நிஜத்தில் செய்தும் காட்டினார்.

எனினும், சிமென்ட் தொழிலோடு அவர் நின்றுவிடவில்லை. கப்பல் போக்குவரத்து தொழிலிலும் துணிந்து இறங்கினார். 1964-ல் சிஸ்கோ (சவுத் இந்தியா ஷிப்பிங் கார்ப்பரேஷன்) என்கிற பெயரில் புதிய கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கி, அடுத்த இரண்டாண்டுகளில் ஐந்து பெரிய கப்பல்களை வாங்கினார்.  

நாராயணசாமிக்கு ஆரம்பம் முதலே அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய உறவு இருந்தது. 1959-ல் பிரதமர் நேருவை தனது சங்கர் நகர் தொழிற்சாலைக்கு அழைத்து வந்தார். தமிழக முதல்வர்களாக இருந்த காமராஜரும், அண்ணாவும் அவருக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். என்றாலும், அவர் எந்த அரசியல் கட்சியிலும் இருந்ததில்லை. எப்போதும் வேலை, வேலை என்று அலைந்து கொண்டிருந்தார்.  அமெரிக்கா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

இதனால் அவருடைய அணுகுமுறை உலகளாவியதாக இருந்தது. தொழிற்சாலை தொடங்கிய பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குள்ளேயே அகில இந்திய அளவிலான, சிமென்ட் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களிடையே மிக முக்கியமானவராக மாறினார். ஆனால், எதிர்பாராதவிதமாக 1968-ல் தனது 57-வது வயதில் திடீரென காலமானார் டி.எஸ்.நாராயணசாமி.

அவருக்குப் பிறகு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனமாக மாற்றிக் காட்டியிருக்கிறார் நாராயணசாமியின் இரண்டாவது மகனான ஸ்ரீநிவாசன். ஒரே ஒரு சிமென்ட் தொழிற்சாலையுடன் தொடங்கிய இந்நிறுவனம் இன்றைக்கு ஏழு தொழிற்சாலைகளாக உயர்ந்திருக்கிறது. சென்னை ஜெயம், சென்னை பெருமை என்கிற இரண்டு பெரிய கப்பல்களையும் வாங்கி, தன் தந்தையின் கனவான கப்பல் கம்பெனியை இன்றும் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் கால் பதித்து வளர்ந்து வரும் இந்நிறுவனம் காலம் தாண்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

(அறிவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு