பிரீமியம் ஸ்டோரி
எடக்கு மடக்கு!
##~##
'ஏ
காம்பரம், ஒரு மாசமா வீட்டுல பைப் லீக் ஆயிகிட்டு இருக்கு. யாராவது ஒரு பிளம்பரைக் கூட்டி வந்து சரி பண்ணனும்னு ஒனக்கு ஏன் தோண மாட்டேங்குது?’ - இன்று ஆபீஸ் கிளம்பும்போதே என்னை கடித்தார் அம்மா. நானும் எங்கெங்கேயோ தேடிப் பார்த்துட்டேன், பிளம்பிங் வேலையைச் செய்ற ஒரு ஆளைப் பார்க்க முடியலே. பொருளாதாரம் மங்கலா இருக்குன்னு பேப்பரில படிக்கிறோம். ஆனா, எந்த வேலைக்கும் ஆள் கிடைக்க மாட்டேங்குறாங்களே! ஏன், என்ன பிரச்னை?ன்னு ஆபீஸ்ல உக்காந்துகிட்டு யோசிச்சுகிட்டிருந்தேன். அப்ப பார்த்து, எங்க கம்பெனி டைரக்டரு என் ரூமுக்குள்ள நுழைஞ்சு, 'என்ன ஏகாம்பரம், ஹெவி யோசனையா இருக்கே? அடுத்த அமெரிக்கன் எலெக்ஷனில நிக்கலாமான்னு பாக்குறியா?’ன்னு கலாய்ச்சாரு. அவர்கிட்ட என் பிரச்னையைச் சொன்னேன். 'அட, இதுதான் உன் பிரச்னையா?’ன்னு அசால்ட்டா பார்த்துட்டு, 'என் ரூமுக்கு வா, கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா பேசுவோம்’னு கூட்டிகிட்டுப் போனாரு.

'ஏகாம்பரம், ஏன் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டேங்குறாங்க? அதுக்கு யாரு காரணம்ங்கிறதுதானே உன் கேள்வி?’ என்று கேட்டதற்கு, ஆமா என்று தலையாட்டினேன். 'வேற யாரு, அரசாங்கம்தான்’ என்று எடுத்த எடுப்பிலேயே விளாசித் தள்ளினார். 'நம்ம ஊரு மக்கள் தொகைக்கு அரசாங்கம் சரியான முறையில திட்டமிட்டா ஒண்ணுக்கு ரெண்டா போட்டி போட்டுட்டு பிளம்பருங்க உன்னைத் தேடி வரதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா, அரசாங்கம் வேற மாதிரி யோசிக்கிறதால, வேலை பாக்குறவனெல்லாம் சுணங்கிடறான்’ என்றார். 'புரியலையே..!’ என்றேன்.

'ஏகாம்பரம், நீ போன வாரம் என்ன சொன்னே? கிராமத்துல இருந்து நகரத்துக்கு ஜனங்க வேலைவாய்ப்பைத் தேடி ஓடியாறாங்க. அதனால நகரத்துல ஜனநெரிசல். மூச்சு முட்டுதுன்னே. ஆனாலும் வேலைக்கு ஆள் இல்லேங்குற. கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாரு. பல வருஷமா நீயும் நானும் இதே சிட்டியிலதான் இருக்கோம். ஆனா, கடந்த அஞ்சாறு வருஷமாத்தான் இந்த வேலைக்கெல்லாம் ஆள் கிடைக்க மாட்டேங்குது. முன்னாடி இந்த வேலைக்கெல்லாம் கொஞ்சம் தாமதமானாலும் ஆள் கிடைச்சுடும். ஆனா, இப்ப நிலைமை எப்படி இருக்கு தெரியுமா?’ன்னு கேட்டார். 'தெரியல்ல, நீங்களே சொல்லுங்க’ என்றேன் நான்.

'2005-2010 வருஷத்துல நாட்டுல உருவான மொத்த வேலைங்களோட அளவும், நாட்டுல செல்ப்-எம்ப்ளாய்டா இருந்தவங்க குறைஞ்ச அளவும் கிட்டத்தட்ட சரியா இருக்கு’ன்னார். 'அய்யோ, அப்படீன்னா எல்லோரும் வேலைக்குப் போகத்தான் பிரியப்படறாங்களா? அதனாலதான் பிளம்பர், எலெக்ட்ரீஷியன்னு எல்லோருக்கும் டிமாண்ட் அதிகமாயிடுச்சா?’ன்னு கேட்டேன்.

'முழுசாக் கேளு. அரசாங்கம் கிராமத்துல வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க ஸ்கீம் போடுது. அதனால விவசாய வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டேங்குது. விவசாயம் செய்யறவங்க மெஷினை உபயோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கிராமத்துல அரசாங்க ஸ்கீமில வேலைவாய்ப்பு கிடைக்கிறதால அக்கடான்னு கையைக் காலை நீட்டி முழக்கி கிராமத்துலேயே வாழ்ந்துடலாமுன்னு ஜனங்க நினைச்சுடறாங்க. அதனால நகரத்துக்குக் கிடைக்க வேண்டிய தொழிலாளர்கள் கிடைக்காமப் போயிடுது. அப்ப  அதிக கூலி தந்து ஆளை கூட்டிக்கிட்டு வரவேண்டியிருக்கு. ஆளு படைய வச்சு தொழில் நடத்தணுமின்னா தொழிலாளர் சட்டத்துக்கு உட்பட்டு தொழில் நடத்த வேண்டியிருக்கு. அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிற கம்பெனிங்க கான்ட்ராக்ட் லேபருன்னு ஒரு கூட்டத்தை உருவாக்குது. ஏன்னா, இவங்களை வேலைக்குச் சேக்குறதும் நிறுத்தறதும் ரொம்ப சுலபம். ஒரு நிரந்தர ஊழியனுக்குத் தர்ற சம்பளத்துல மூணுல ஒரு பங்கு பணம் கான்ட்ராக்ட் ஊழியருக்குத் தந்தா போதும், மாடு மாதிரி வேலை பார்ப்பான். கான்ட்ராக்ட் ஊழியர்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கிறப்ப தொழிற்சாலைக்குள்ள சண்டை வருது. இதைத் தவிர்க்க, ஒரேயடியா மெஷின்களை கொண்டு வந்து எறக்கிடுறாங்க முதலாளிங்க’ என்றார்.

எடக்கு மடக்கு!

'இதுக்கு என்னதான் தீர்வு?’ன்னு கேட்டேன். 'தொழிலாளர் நலச் சட்டத்தைத் திருத்தணும். திருத்தப்பட்டா வேலைக்கு எடுக்கறதும் நிறுத்தறதும் சுலபமாகும். அப்ப சம்பளங்கள் உயரும். கான்ட்ராக்ட் லேபர் கலாசாரம் குறையும். கிராமத்துல அரசாங்க ஸ்கீம்ல கிடைக்கிற சம்பளத்துக்கும் தொழிற்சாலையில கான்ட்ராக்ட் லேபரா கிடைக்கிற உத்தரவாதமில்லாதச் சம்பளத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் பெரிசா இல்லாததால ஒருத்தரும் கிராமத்தை விட்டு கிளம்ப மாட்டேங்குறாங்க. ஒரு பொருளாதாரம் வேகமா வளரணும்னா தொழிலாளர்கள் உலகியலுக்குத் தக்கவாறு நடந்துகொள்பவர்களாக இருக்கணும். அதற்கு அவர்களுக்குத் தேடல்கள் இருக்கற மாதிரி வேலைவாய்ப்புகளும் சம்பளமும் இருக்கணும். வேலைவாய்ப்புகள் அளிக்கத் தயங்கற மாதிரி சட்டங்கள் தடையாகவும், இருக்கற இடத்தை விட்டு கிளம்பாத மாதிரி அரசாங்க ஸ்கீமில சம்பளமும் கிடைச்சுட்டா வேலைவாய்ப்பு அதிகரிக்காமத்தான் போகும்’னு சொன்னார். அவர் பேசப் பேச அடிப்படையிலயே தவறு இருக்கிறது எனக்குப் புரிய ஆரம்பிச்சுது.

'சட்டம் கடுமைங்கிறீங்க. அப்படி இல்லாட்டி தொழிலாளிங்களை முதலாளிங்க முழுங்கிட மாட்டாங்களா? என்றேன். 'ஏகாம்பரம், இப்ப என்ன நடக்குது? சட்டத்தை விட்டு வெளியே கான்ட்ராக்ட் லேபர் மூலம் எல்லாமே     செஞ்சுக்கிறாங்களே! பிராக்டிக்கலாப் பார்த்தா, சட்டம்ங்கிறது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது பண்ண உதவணும். பைபாஸ் பண்ண ரூட் எல்லாருக்கும் தெரிஞ்சே இருக்கற சட்டம் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன! இதுல பாதிக்கப்படறது யாரு, அதே தொழிலாளிகள்தானே?’ என்றார்.

அவர் சொன்னது நியாயமாகத்தான் பட்டது. 'சுருக்கமா என்னதான் சொல்ல வர்றீங்க’ன்னு கேட்டேன்.

'இன்றையச் சூழ்நிலையில பிளம்பிங், எலெக்ட்ரீஷியன் போன்ற ஸ்கில்ட் செல்ப் எம்ப்ளாய்டு ஆட்கள் குறைஞ்சுகிட்டே வர்றாங்க. ஏன்னா கிராமத்துல இருந்து சப்ளை இல்லை. ஸ்கில்ட் ஆட்களுக்கு கம்பெனிகளில சம்பளம் பறக்குது. அதனால வேலைக்குப் போற மனப்பான்மை வருது. ஒருபக்கம் வேலைவாய்ப்பு உருவாகறதில்லை. அப்படி உருவாகிற வேலைவாய்ப்பையும் செல்ப் எம்ப்ளாய்ட் பண்ணிக்க தகுதியிருக்கறவங்க எடுத்துக்கிடறாங்க. கிராமத்துல இருக்கறவங்க பெரிய ஸ்கில் தேவைப்படாத அரசாங்க ஸ்கீம் வேலைகளிலே லயிச்சு இருந்தடறாங்க. திறமை அதிகம் தேவைப்படுற வேலைகள் அதிகமா உருவானாத்தான் அதிகமாச் சம்பாதிக்க முடியும். அதிகமாச் சம்பாதிச்சாதான் பொருளாதாரம் வளரும். அப்படி இல்லாம உன்னை மாதிரியே பத்து வருஷமா ஒரே சீட்டுல இருந்துகிட்டு எடக்கு மடக்கு பேசிக்கிட்டு இருந்தா நாடு எப்படி முன்னேறும்?’ன்னு ஒரு போடு போட்டவர், 'ஏட்ரியன் பியர்ஸ் ரோஜர்ஸ்னு (Adrian Pierce Rogers) ஒரு அமெரிக்க பாதிரியாரு சொன்ன விஷயத்தை அப்படியே சொல்றேன்...

''சுதந்திரமாகச் செயல்பட முடியாதபடி சட்டம் போடுவதன் மூலம் ஏழை எளிய மக்களைச் சுதந்திரமாக்கிவிட இயலாது. செல்வங்களைப் பங்கிடுவதன் மூலம் அதை இரட்டிப்பாக்க முடியாது. யாரிடமிருந்தாவது எடுக்காமல் அரசாங்கம் எந்த ஒன்றையும் யாருக்கும் தர முடியாது. எப்போதெல்லாம் சிலர் பாடுபடாமலே சிலவற்றைப் பெறுகிறார்களோ, அப்போதெல்லாம் அவற்றைப் பெறாத வேறு சிலர் அதற்காக உழைக்க வேண்டியிருக்கிறது. 'வேறு சிலர் பாடுபடுவார்கள்; எனவே, நாம் அதற்காக உழைக்க வேண்டியதில்லை’ என்கிற யோசனை, மக்களில் பாதிப் பேருக்கும், மீதிப் பாதிப் பேருக்கு, 'உழைப்பதால் ஒரு பலனும் இல்லை. காரணம், உழைப்பினால் எந்த ஆதாயமும் நமக்குக் கிடைக்கப்போவது இல்லையே!’ என்கிற யோசனையும்    வருமானால், அதுவே நாட்டுக்கு ஏற்படும் மிக மோசமான விஷயமாகும்.''

அரசாங்கம் இதைப் புரிஞ்சுகிட்டு நடந்தா, ஜனங்க சௌகரியத்தை விட்டுட்டு நாட்டு முன்னேற்றத்துக்காகப் பாடுபடற வழியில போக ஆரம்பிப்பாங்க. இல்லீங்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு