Published:Updated:

விப்ரோவின் வினோத பிளான்... முதலீட்டாளர்களின் சாய்ஸ் என்ன?

விப்ரோவின் வினோத பிளான்... முதலீட்டாளர்களின் சாய்ஸ் என்ன?

பிரீமியம் ஸ்டோரி
விப்ரோவின் வினோத பிளான்... முதலீட்டாளர்களின் சாய்ஸ் என்ன?

விப்ரோ, இந்தியாவின் மூன்றாவது ஐ.டி. நிறுவனமாகத்தான் நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். ஆனால், விப்ரோ நிறுவனத்திற்கு கன்ஸ்யூமர் கேர், லைட்டிங், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இன்ஜினீயரிங், மெடிக்கல் புராடக்ட்கள் மற்றும் சேவை பிஸினஸ்கள் என பல முகங்கள் இருக்கிறது. ஆனால், இந்த அனைத்து பிஸினஸ்களும் விப்ரோவின் வருமானத்தில் 14 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. 14 சதவிகிதம் என்பது சிறியதாகத் தெரிந்தாலும், சுமார்

476 கோடி ரூபாய் அளவுக்கு இதர துறைகளில் இருந்து வருமானம் வருகிறது. இப்போது இந்த பிஸினஸ்களை மட்டும் தனியாகப் பிரித்து விப்ரோ என்டர்பிரைசஸ் என்ற பட்டியலிடப்படாத நிறுவனமாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது.

இப்படி ஒரு முடிவு எடுக்கும்பட்சத்தில், ஐ.டி. நிறுவனத்துக்கும் தனியாக முக்கியத்துவம் தர முடியும். அதன் மூலம் இன்னும் பெரிய அளவில் வளர்ந்து முன்னணிக்கு வரமுடியும் என்று நினைக்கிறது விப்ரோ நிறுவனம். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக எஃப்.எம்.சி.ஜி. துறையின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. ஆனால், அதற்கு கிடைக்க வேண்டிய மதிப்பு இரண்டு நிறுவனங்களும் ஒன்றாக இருப்பதினால் விப்ரோவின் மதிப்பில் பெரிதாக உயரவில்லை. அதனால் எஃப்.எம்.சி.ஜி. நிறுவனத்தை தனியாகப் பிரித்து அதற்கு ஒரு மதிப்பை உருவாக்க நினைத்திருக்கலாம் என்பது சந்தையில் இருக்கும் முக்கிய நபர்களின் கருத்து.

##~##
நிறுவனத்தை இரண்டாகப் பிரிப்பதால், விப்ரோவின் முதலீட்டாளர்களுக்கு மூன்று வாய்ப்புகளைத் தருகிறது அந்நிறுவனம். முதலாவது, 5 விப்ரோ பங்குகளுக்கு 1 விப்ரோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒரு வருடத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய முன்னுரிமை பங்குகளை வாங்கிக்கொள்ளலாம்.      

235.20 ரூபாய் மதிப்புள்ள இந்த பங்குகள் ஒரு வருடத்துக்குப் பிறகு 7% வட்டியுடன் (முக மதிப்பில்) சேர்த்து ரொக்கமாகக் கிடைக்கும். இரண்டாவது, 5 விப்ரோ பங்குகளுக்கு                    1 விப்ரோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

மூன்றாவதாக 1.65 விப்ரோ என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகளை தந்து 1 விப்ரோ பங்கினை வாங்கிக்கொள்ளலாம். மீதம் இருக்கும்  துண்டுப் பங்குகளுக்குப் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது விப்ரோ நிறுவனம்.

இப்போது முதலீட்டாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் மூன்று வாய்ப்புகளில் எந்த வாய்ப்பை பயன்படுத்தினால் அதிக நன்மை தருவதாக இருக்கும் என பங்குச் சந்தை ஆலோசகர் நாகப்பனிடம் கேட்டோம். நமக்கு விளக்கமாகப் பதில் அளித்தார்.

விப்ரோவின் வினோத பிளான்... முதலீட்டாளர்களின் சாய்ஸ் என்ன?
விப்ரோவின் வினோத பிளான்... முதலீட்டாளர்களின் சாய்ஸ் என்ன?

''ஒவ்வொரு வாய்ப்பாகப் பார்ப்போம். முதல் வாய்ப்பில் ஒரு வருடத்துக்குப் பிறகு மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள் நமக்கு கிடைக்கிறது. இதில் அந்த ஒரு பங்கின் விலை எவ்வளவு என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நிச்சய வருமானம் கிடைக்கும். அதேசமயம், 7 சதவிகிதம் டிவிடெண்ட் என்பது கொஞ்சம் குறைவான தொகையாகவே தெரிகிறது. இதற்கு வங்கி டெபாசிட்களிலேயே போட்டுக்கொள்ளலாம். மேலும், பங்குச் சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் நிச்சய வருமானத்துக்காக வந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதனால் அந்த வாய்ப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன்.

இரண்டாவது வாய்ப்பு, மிகவும் சிம்பிளானது. 10 விப்ரோ பங்குகளுக்கு இரண்டு விப்ரோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கினை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், விப்ரோ என்டர்பிரைசஸ் இன்னும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லை. எப்போது பட்டியலிடுவார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. விப்ரோ என்டர்பிரைசஸ் நல்ல நிறுவனம்; நீண்டகாலமாக இருக்கிறது; ஆனாலும் சந்தையில் இப்போது விற்க முடியாது; எனவே, பட்டியலிடப்படும்வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். காத்திருக்கத் தயார் என்று நினைக்கிறவர்கள் இந்த வாய்ப்பினை தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பட்டியலிடப்படாதப் பங்குகளை வெளியில் விற்க முடியும் என்றாலும் சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த வாய்ப்பில் நிச்சயமற்றதன்மை அதிகம்.

மூன்றாவது, 10 பங்குகளுக்கு இரண்டு விப்ரோ என்டர்பிரைசஸ் பங்கு கிடைக்கும். அதில் இருந்து 1.65 விப்ரோ எண்டர்பிரைசஸ் பங்குக்கு ஒரு விப்ரோ பங்கு வாங்கிக்கொள்ள முடியும். மீதம் இருக்கும் 0.35 பங்குக்கு பணத்தை வாங்கிக்கொள்ள முடியும். இதில் மூன்றாவது வாய்ப்புதான் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது என்று நான் நினைக்கிறேன். காரணம், இப்போது சந்தையில் இருக்கும் விப்ரோவின் ஒரு பங்கு கிடைத்துவிடுகிறது; மேலும் எந்தவிதமான சிக்கலும் இந்த வாய்ப்பில் இல்லை. அதனால் மூன்றாவது வாய்ப்பையே சிறுமுதலீட்டாளர்கள் தேர்ந்தெடுப்பது நல்லது'' என்றவர், மேலும் தொடர்ந்தார்.

விப்ரோவின் வினோத பிளான்... முதலீட்டாளர்களின் சாய்ஸ் என்ன?

''கூடுதலான இந்த ஒரு பங்கினை விப்ரோ நிறுவனம் தன்னுடைய புரமோட்டர் பங்கில் இருந்து எடுத்துத் தருகிறது. இப்போதைக்கு புரமோட்டர்கள் வசம் 78.31% இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் புரமோட்டர்களின் பங்கினை 75 சதவிகிதத்துக்குள் குறைக்க வேண்டும் என செபி சொல்லி இருக்கிறது. அதனால் பல விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டே விப்ரோ இந்த முடிவை எடுத்திருக்கிறது'' என்று முடித்தார்.

ஆக, மொத்தத்தில் விப்ரோ நிறுவனத்தின் பிரிப்பு நடவடிக்கையையட்டி முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டோம். இனி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்!

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு