இரா.ரூபாவதி.
##~## |
படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்பது பல பெண்களின் கனவாக இருக்கிறது. அதற்காக பல தகுதிகளையும் வளர்த்துக்கொள்கிறார்கள். பல தடங்கல்களைக் கடந்து, போராட்டங்களை சந்தித்துத்தான் ஒரு நல்ல வேலையில் அமர்கிறார்கள். ஆனால், திருமணம், குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பெண்களை வேலைக்குச் செல்வதையே கேள்விக்கு உள்ளாக்கிவிடுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைச் சமாளித்து வெற்றி பெறுவது எப்படி என்று விளக்குகிறார் அவதார் ஐ-வின் நிறுவனத்தை நடத்தும் சௌந்தர்யா.
''புதிதாக வேலைக்குச் சேருகிறவர்களில் 48 சதவிகிதம் பேர் இளம் பெண்கள்தான். ஆனால், பத்தாண்டு கழித்து இவர்கள் பெரும்பாலும் வேலையில் இருப்பதில்லை. இவர்களைச் சுற்றி பல பிரச்னைகள் நாள்தோறும் எழுகிறது. திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற தவிர்க்க இயலாத காரணங்களைத் தவிர, பாலியல் தொல்லைகள், அதிக வேலைச்சுமை உள்ளிட்ட பல காரணங்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை சமாளித்து வேலையில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சுலபமில்லை.

பெண்கள் வேலைக்குச் சேர்ந்தவுடன் செய்யவேண்டிய முக்கியமான விஷயம், உங்களை அலுவலகத்தில் எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள போகிறீர்கள் என்பதுதான். வேலைக்குப் போகும் இடத்தில் பெண் என்பதற்காக நீங்கள் எந்த சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது. நீங்களும் ஒரு பணியாளர் என்ற மனநிலையில் செயல்படுவது அவசியம். வேலைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்வதும் உங்களின் கடமை. எப்போதும் போட்டிகளைக் கண்டு அஞ்சாமல், அதை சமாளிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக, வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை, பாலியல் தொல்லைகள். அதோடு ஆண்-பெண் நட்பு குறித்த சர்ச்சைகளில் இருந்தும் மீள வேண்டியிருக்கும். பாலியல் தொல்லை தருபவர்களிடம் இருந்து விலகியிருந்தோ அல்லது தொல்லை தருபவருக்குத் தக்க பதிலடி கொடுத்தோ, முடிந்தவரை நீங்களே சமாளித்துவிடுவது நல்லது. ஏனெனில், இதுபோன்ற பிரச்னைகளை மேலிடத்திற்கு அடிக்கடி எடுத்துச் சென்றால் இனிமேல் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற எண்ணம் உருவாகிவிடும். அதோடு, உங்களின் திறமையும் மதிக்கப்படாமல் போய்விடும்.
ஆண், பெண் நட்பு என்பது பணியிடத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. அதை எப்போதும் ஒரு எல்லைக்குள் வைத்துக்கொண்டால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். அதாவது, தொட்டுப் பேசுதல், அடிக்கடி ஒருவரிடம் அதிக நெருக்கமாகப் பேசுவது போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். அலுவலக நட்பை அலுவலகத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அடிக்கடி போனில் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்வதால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அதை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடமும் பகிர்ந்துகொள்வது நல்லது. குழந்தை பிறந்த பிறகு வேலைக்குப் போக போகிறீர்கள் என்றால் குழந்தையை யார் பார்த்துக்கொள்வார்கள், அதில் இருக்கும் சிக்கல் என்ன என்பதையெல்லாம் திட்டமிடுங்கள். அதோடு வேலையையும், குடும்பத்தையும் சேர்த்து சமாளிக்கக்கூடிய சூட்சுமங்களை கண்டறிந்து பின்பற்ற வேண்டும். வேறு வழியே இல்லையென்றால் மட்டுமே வேலையை விடவேண்டும். ஆனால், அந்த முடிவில் தெளிவாக இருப்பது அவசியம். முடிவு எடுத்தபிறகு புலம்பக்கூடாது.
வேலையை விட்டபிறகு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க என்னென்ன செய்யப் போகிறீர்கள்? செய்துவரும் வேலையை வீட்டிலிருந்தே செய்ய முடியுமா என்பதை அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கான வாய்ப்பு ஒருவேளை உங்களுக்கு அமைந்தால் நல்லதுதானே! பொதுவாக குடும்பம், குழந்தைகள், வேலை என அத்தனையையும் ஒருசேர சமாளிக்க உடலுக்கும் மனதுக்கும் சக்தி தேவைதான். மனதில் ஆர்வமும், உற்சாகமும் எப்போதும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் சமாளிக்கலாம். யோகாசனம், தியானம் போன்றவைகளும் உங்களுக்கு கை கொடுக்கும்.
திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என எதையும் பிரிக்காமல், அதற்கான புரிதலோடு உங்களின் வேலையைச் செய்ய பழகிக்கொண்டால் நிச்சயம் வெற்றிதான்''.