Published:Updated:

நேர்மையைத் தொலைத்த வியாபாரம்..!

ஆர்.ஷபி முன்னாஓவியம் : ஹாசிப் கான்

நேர்மையைத் தொலைத்த வியாபாரம்..!

ஆர்.ஷபி முன்னாஓவியம் : ஹாசிப் கான்

Published:Updated:
##~##

கோடிகள் அந்த குடும்பத்துக்குச் சாதாரணம்... ஆனால், பிஸினஸுக்கு அதி அவசியமான ஒற்றுமை மட்டும் அவர்களிடம் இல்லை. விளைவு,  பண்ணை வீட்டில் பரஸ்பரம் குண்டுகள் பாய்ச்சி... அண்ணனும் தம்பியும் அநியாயமாக செத்துப் போனார்கள். இந்தி சினிமாக்களை மிஞ்சும் இந்த பகீர் கொலைகளுக்கு வேறு எதுவும் பின்னணி உண்டா என்று போலீஸ் விசாரித்து வரும் நிலையில்... இந்த பிஸினஸ் சாம்ராஜ்யம் வளர்ந்த வழியைப் பார்த்தால்... அது இன்னொரு மர்மச் சுரங்கமாக இருக்கிறது! 'நேர்மைதான் வெற்றியின் ரகசியம்' என்று முழுமூச்சாக நம்பி, தங்கள் வியாபாரத்துக்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்து... படிப்படியாக முன்னேறும் நல்ல உள்ளங்களும், இந்த குறுக்கு வழி சாம்ராஜ்யத்தைப் பற்றி தெரிந்துகொண்டால் தப்பில்லை!

 செத்துப்போன 'சத்தா' சகோதரர்களின் தந்தை குல்வீந்தர்சிங் சத்தா... இவருடைய அப்பா இந்திய-பாகிஸ்தான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேர்மையைத் தொலைத்த வியாபாரம்..!

பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தவர். குல்வீந்தரின் மூத்த மகன் குர்தீப்சிங் சத்தா என்கிற போன்ட்டி சத்தா; இரண்டாவது மகன் ராஜேந்தர்சிங் சத்தா; மூன்றாவது மகன் மற்றும் கடைக்குட்டிதான் ஹர்தீப்சிங் சத்தா.

முதலில் உ.பி.யின் நைனிதாலில் ஒரு தாபாவில் வேலை செய்த குல்வீந்தர், அருகிலுள்ள ராம்நகருக்கு மாறினார். அங்கு சர்க்கரை ஆலைகளுக்கு மெஷின் மூலம் கரும்பை கூலிக்கு பிழிந்து தரும் வேலையை 1963-ல் செய்து வந்தார். பிறகு முராதாபாத்தில் மதுக்கடைக்கு எதிரே நொறுக்குத் தீனியை விற்றார். இதில் பார்ட் டைமாக வேலை பார்த்து தன் தந்தைக்கு உதவினார் போன்ட்டி.

பின்பு கள்ளச்சாராயத்தையும் விற்பனை செய்யத் துவங்கியவர்களுக்கு ஏறுமுகம். 1970-ல் உ.பி. அரசின் அபின் மற்றும் பங்க் கடையை முராதாபாத்தில் ஏலம் எடுத்தனர். அடுத்த பத்து வருடத்தில் கங்கையின் கரைகளில் மணல் அள்ளும் ஏலம். அப்போது, தந்தை குல்வீந்தருக்கு துணையாக முழுவீச்சில் களம் இறங்கிய மகன் போன்ட்டி சத்தாவை பற்றி அவரது நண்பர்கள் வட்டாரத்தில் பேசினோம்.

''பத்தாவது படித்துக் கொண்டிருந்தபோது போன்ட்டிக்கு ஏற்பட்ட ஒரு விபத்தால் அத்துடன் தனது படிப்பை முடித்து கொண்டார். சின்ன வயதில் பட்டம் விடும்போது கை தவறி, மின்சாரக் கம்பி மீது பட, சத்தாவின் இரண்டு விரல்களும் நிரந்தரமாக பாதிப்படைந்தது. விளையாட்டில் இருந்த வெறி போன்ட்டிக்கு பிஸினஸ் செய்வதிலும் இருந்தது. தொழிலில் தன் தந்தையை மிஞ்சியவர் பேப்பர் மில்லையும் துவங்கினார்.

நேர்மையைத் தொலைத்த வியாபாரம்..!

காஸ்ட்லியான பொருட்களை நினைவுப் பரிசாக தரும் போன்ட்டி சத்தாவுக்கு உ.பி. மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசியல்வாதிகள் மிகவும் நெருக்கமானார்கள். குறிப்பாக, சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங்கின் ஆத்ம நண்பராகவே, 2000-ல் தனது குடும்பத்தை முராதாபாத்திலிருந்து டெல்லிக்கு மாற்றினார். அங்கு, 'வேவ் இன்ஃபோ கார்ப்பரேஷன்’ என்ற பெயரில் டிஸ்ட்டில்லரிஸ், பாட்லிங் பிளான்ட், ரியல் எஸ்டேட், மால், சினிமா தியேட்டர், பட விநியோகம் மற்றும் ஃபைனான்ஸ் என வளர்ந்து 'ஜோ போலே ஷோ நிஹால்’ எனும் இந்திப் படத்தை சன்னி தியோலை வைத்து எடுத்தார். உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் அரசியல்வாதிகளிடமும் இருந்த நெருக்கம் அவரை 8,300 மற்றும் 7,500 மெகா வாட்டில் தெர்மல் பவர் ஸ்டேஷன்களை துவங்க வைத்தது'' எனக் கூறுகிறார்கள்.

சத்தா குரூப்பின் பிஸினஸ் டேர்னோவர் 25 ஆயிரம் கோடி என்கிறார்கள் சிலர். ''அவ்வளவெல்லாம் இல்லை, வெறும் 6,000 கோடி தான்'' என்று அதையே ஒரு ஜுஜுபி தொகை போல சொல்கிறார்கள் வேறு சிலர்.

நேர்மையைத் தொலைத்த வியாபாரம்..!

2007-ல் வந்த மாயாவதி ஆட்சியில் அவருடனும் நெருக்கமாகி, உ.பி. மாநிலம் முழுவதும் சாராயக் கடைகளை ஏலம் எடுத்து நடத்தினார் போன்ட்டி. இந்தியா முழுக்க எந்த ஒரு மாநிலத்திலும் அரசு மதுக் கடைகள் முழுவதும் ஒரே நபருக்குத் தரப்பட்டதில்லை என்பதால், முதன் முறையாக சர்ச்சைக்குள்ளானார். உ.பி.யில் அவருக்கு இருந்த ஆதிக்கம் பற்றி அங்கு உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த ஒருவருடன் பேசினோம்.

''உ.பி.யில் வருடத்திற்கு 14,000 கோடி ரூபாய் விற்பனையாகும் மது வியாபாரத்தில் சத்தாவின் முழு ஆதிக்கம் இருந்தது. இந்த கடைகளில் தன் சொந்தத் தயாரிப்பான டைகர் பீரை விற்பனை செய்யத் தொடங்கி னார். மேலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் சிறப்புக் கட்டணமாக பில் இல்லாமல் ரூபாய் ஐந்தை வசூலித்தார். இது 'மாயாவதி டாக்ஸ்’ என்றே கிண்டலாக அழைக்கப்பட்டது. இந்த ஷேர் முழுவதும் மாயாவதிக்குச் சென்றதாகப் பேசப்பட்டது.

தலைநகரான லக்னோவில் மட்டும், நாள் ஒன்றுக்கு சுமார் ஐம்பதாயிரம் லிட்டர் மது  விற்பனையாகிறது எனில் எவ்வளவு வசூல் எனக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதற்காகவே போன்ட்டி, உ.பி. அரசுக்கு இணையாக மது ஆயத்தீர்வுத் துறையை துவக்கி உ.பி.யில் நடத்தி வந்தார். இதில், மாவட்டம் மற்றும் நகரங்களுக்கு அதிகாரிகளை நியமித்தார். அரசு மதுக்கடைகளில் இவர்களின் சர்ப்ரைஸ் செக்கிங் வேறு. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ, போன்ட்டிக்குச் சொந்தமான 13 இடங்களில் ரெய்டு நடத்தி ரூபாய் 200 கோடிகளை கைப்பற்றியது.

தவிர, நஷ்டத்தில் இயங்குவதாக உ.பி. கரும்பு கார்ப்பரேஷன் லிமிடெட்டிற்குச் சொந்தமான 13 சர்க்கரை ஆலைகளில் ஐந்து ஆலைகளை வெறும் சில கோடி ரூபாய்க்கு விற்றது மாயாவதி அரசு. இதனால் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியாவின் அறிக்கையில் வெளியானது. இதுகுறித்து உ.பி.யில் முதல்வராக பதவி ஏற்ற அகிலேஷ்சிங்கும் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள் ளார்'' என விவரித்தார்.

2011-ல் அவரது தந்தை இறந்தபின் குடும்பத்தின் தலைமையை போன்ட்டி ஏற்றார். ஆனால், ஐந்து வருடங்களுக்கு முன் இந்த மூன்று சகோதரர்களுக்கும் இடையே பாகப் பிரிவினை முடிந்துவிட்டது. எனினும், சம்பவம் நடந்த சத்தர்பூரின் பண்ணை வீட்டின் மீது போன்ட்டிக்கு ஒரு கண். காரணம், அதன் மதிப்பு மட்டுமே 500 கோடி ரூபாய். தவிர, தனது நலன் விரும்பிகளுக்குப் பிடித்த பங்களா அது.

துப்பாக்கிச் சண்டை சத்தாவின் குடும்பத்திற்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் 5-ல் முராதாபாத்தின் வீட்டில் நடந்தது அப்படியே அமுக்கப்பட்டுவிட்டது. அன்றைக்கே உ.பி. போலீசார் இதை விசாரித்திருந்தால், இந்த கொலையே நடந்திருக்காது என்கிறார்கள்.

நேர்மையைத் தொலைத்த வியாபாரம்..!

ஏராளமான 'பவர் புரோக்கர்’களை தன்னருகில் வைத்துக்கொண்டு, அரசியல்வாதிகளிடம் தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொள்வதில் கில்லாடியாக இருந்திருக்கிறார் அண்ணன் சத்தா.  இவருடைய வேக வேகமான வளர்ச்சி பலரின் பொறாமையையும் பகையையும் அதிகரித்தது. இப்போது நடக்கும் போலீஸ் விசாரணையில் அந்த பகையின் பின்புலம் பற்றியும் தகவல்கள் திரட்டப் பட்டு வருகிறதாம்.

அண்மைக் காலமாகவே அரசாங்கத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் பல லைசென்ஸ்களிலும், மிக முக்கியமான பகுதியில் உள்ள நிலங்களிலும் பிரமாண்டமான பிஸினஸ் புள்ளிகள் காட்டிவரும் அசூரத்தனமான ஈடுபாடு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகளுடன் இவர்கள் கையைக் கோத்துக்கொண்டு செயல்படுவதால்... நேர்மையாக வியாபாரம் செய்ய நினைக்கும் பலர் இந்த ஆரோக்கியமற்ற போட்டியில் ஈடுகொடுக்க முடியாமல் வீழ்த்தப்படுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைகள்தான் ஒரே ஆறுதல்! இந்த சகோதரர்கள் மரண விவகாரத்திலும் முழுமையான உண்மைகளை போலீஸ் வெளியில் கொண்டு வருமா என்ற சந்தேகம் டெல்லி மற்றும் உ.பி. வட்டாரத்தில் நிலவுகிறது. காரணம், மிகப் பெரிய அரசியல்வாதிகளுக்கு இந்த குடும்பத்துடன் இருந்த தொடர்புதான்.

செய்யும் தொழிலில் நேர்மை வேண்டும் என்கிற அவசியத்தைதான் சத்தா சகோதரர்களின் மரணம் நமக்குச் சொல்கிறது!

- ஆர்.ஷபி முன்னா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism