Published:Updated:

வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்!

வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்!

வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்!

வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்!

Published:Updated:
##~##

''ஹேப்பி பர்த்டே! எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாணயம் விகடனுக்கு என் இனிய வாழ்த்துக்கள்!'' என்றபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். ''நன்றி, சிறப்பிதழ் தயாரிப்பு பணி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது''  என்றோம்.

 ''உம் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. நேராக செய்திக்கு வருகிறேன். பட்ட காலிலே படும் என்பது போல தனலஷ்மி வங்கி தொடர்ந்து நான்காவது காலாண்டாக நெகட்டிவ் ரிசல்ட் தந்து வருகிறது. அதன் தலைவர் ராஜினாமா செய்தது, ஊழியர்கள் பிரச்னை என ஏகப்பட்ட சிக்கல்கள்  அந்த வங்கியில். ஆனாலும், இதை தவிரவும் வேறு ஏதோ பிரச்னை இருப்பதாகவே சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அந்த வங்கியை வேறு வங்கியுடன் இணைக்கப் போவதாகவும் அதிரடி புதிரடியாக மும்பை புரோக்கர்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த பாசிட்டிவ்வான செய்தியால் அந்த பங்கின் விலை கொஞ்சம் உயரவே செய்திருக்கிறது!'' என்றவரிடம், இரு பெரும் நிறுவனங்களை இணைக்கும் பேச்சு பற்றி கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்!

''ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தை ஹெச்.டி.எஃப்.சி. வங்கியுடன் இணைக்கலாம் என்று அதன் நிர்வாகம் நினைப்பதாக முன்னணி புரோக்கிங் நிறுவனம் ஒன்று சொல்லி இருக்கிறது. ஆனாலும், விதிமுறையில் நிறைய மாற்றங்கள் கொண்டுவர வேண்டி இருக்கிறது. அதற்கு நிறைய காலம் ஆகலாம். அப்படி இணைந்தால் ஹெச்.டி.எஃப்.சி. பங்கின் விலை சுமார் 35 சதவிகிதத்துக்கு மேலே சரிய வாய்ப்பு இருப்பதாக அதே நிறுவனம் சொல்லியுள்ளது. தகவலை சொல்லிவிட்டேன், முடிவு செய்ய வேண்டியது முதலீட்டாளர்கள்தான்'' என்றவருக்கு முந்திரி பக்கோடா தந்தோம். ஒரே ஒரு துண்டை எடுத்துச் சாப்பிட்டார்.

''ஹிந்து காப்பர் நிறுவனத்தின் பங்கு ஏல விற்பனை எப்படி போச்சு?'' என்றோம்.

''ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் 3,70,07,720 பங்குகளை (மொத்த பங்கு மூலதனத்தில் 4 சதவிகிதம்) ஏல முறையில் விற்பனை செய்யத் திட்டமிட்டது. இந்நிலையில் பங்கு ஒன்றின் விலை ரூ.155 என வியாழக்கிழமை அன்று நிர்ணயம் செய்தது. இது அதன் சந்தை விலையிலிருந்து சுமார் 42 சதவிகிதம் குறைவு. அதே நேரத்தில், அன்றைய வர்த்தகத்தின் இடையே பங்கின் விலை 15.60% அதிகரித்தது. ஆனால், அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அன்றே அந்த பங்கின் ஏல விற்பனை சில மணி நேரத்தில் 10 சதவிகிதத்திற்கு மேல் குறைந்தது. அன்றைய தினம் வர்த்தக முடிவில் அந்த பங்கின் விலை 20 சதவிகிதம் விலை வீழ்ச்சி கண்டது. இந்நிறுவனப் பங்குகளை எல்.ஐ.சி., பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்.பி.ஐ. போன்றவை போட்டி போட்டு வாங்கி ஏல விற்பனையை முடித்து வைத்தன.  

ஹிந்துஸ்தான் காப்பருக்கு அடுத்தபடியாக,  என்.டி.பி.சி., என்.எம்.டி.சி. போன்ற நிறுவனங்களின்  பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு. அதன்பிறகு, செயில் உள்பட ஒரு டஜன் நிறுவனங்களிலாவது தன் பங்கு மூலதனத்தை இந்த நிதி ஆண்டுக்குள் குறைத்து, நிதி பற்றாக்குறையைப் போக்க 30,000 கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது! எல்.ஐ.சி.யும் இந்த நிதியாண்டுக்குள் இன்னும் 25,000 கோடி ரூபாய் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோம் என்பதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்!'' என்றார்.  

''தனியார் நிறுவனங்களும் வரிசையாக ஐ.பி.ஓ. வரும் போலிருக்கிறதே?'' என்றோம்.

''உண்மைதான். பார்தி ஏர்டெல் குழுமத்தின் பார்தி இன்ஃப்ராடெல், வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில்  ஐ.பி.ஓ. வரத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ.4,500-5,000 கோடி திரட்ட இருக்கிறது. சந்தை அப்படியும் இப்படியுமாக இருந்தாலும், இது நிதி திரட்டும் காலம் போல'' என்றவருக்கு சுடச்சுட டீ தந்தோம். ரசித்துக் குடித்தவர், அடுத்த செய்தியை சொல்லத் தயாரானார்.

''உலக அளவில் சில்லரை வணிகத்தில் ஜாம்பவானாகத் திகழும் வால்மார்ட் நிறுவனம், பார்தி குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே அந்த நிறுவனத் துக்கு தொடர்ச்சியாக பல சிக்கல்கள். இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும் முன்னரே பார்தி குழுமத்தில் வால்மார்ட் முதலீடு செய்துள்ளது என்கிற பிரச்னை கிளப்பப்பட்டு, அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் பார்தி வால்மார்ட் அதன் முதன்மை நிதி அதிகாரி மற்றும் ஒட்டுமொத்த லீகல் டீமை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பிரச்னை குறித்த விசாரணை முடியும் வரை இவர்கள் அலுவலகம் பக்கமே வரக்கூடாது என்றும் உத்தரவு போட்டிருக்கிறது!'' என்றார்.  

''சஹாரா - செபி மோதல் தீவிரமாகிக்கொண்டே போகிறதே?'' என்று வினவினோம்.

''சட்ட விரோதமாக டெபாசிட் திரட்டிவிட்டு, அதனை முதலீட்டாளர்களுக்குத் திருப்பித் தருவதில் சஹாரா குழுமம் பெரிய அளவில் காலதாமதம் செய்து வருகிறது. இந்நிலையில், சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் செபி வழக்கு தொடர்ந்துள்ளது. செபி கேட்கும் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் சஹாராவின் நிலைமை இன்னும் மோசமாகும்!'' என்றார்.  

''ஐ.ஆர்.டி.ஏ. அமைப்பின் தலைவர் பதவி காலியாகிறதே, புதிதாக யாரை போடப் போகிறார்கள்?'' என்று காதைக் கடித்தோம்.

வரிசை கட்டும் அரசு நிறுவனங்கள்!

''ஐ.ஆர்.டி.ஏ.வின் தற்போதைய தலைவர் ஹரி நாராயண், 2013 பிப்ரவரியில் பதவி ஓய்வு பெறுகிறார். ஹரி நாராயண், தனது பதவிக் காலத்தில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல் இருந்தார். எல்.ஐ.சி. உள்பட அத்தனை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் தண்ணி காட்டினார். அப்பேர்பட்டவர் ஓய்வு பெறுவதை நினைத்து மத்திய அரசுக்கு உள்ளூற சந்தோஷம்தான். ஆனால், அடுத்து வரப் போகிறவராவது, தன் பேச்சுக்குத் தலையாட்டுகிறவராக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறது. அந்தப் பதவிக்கு எல்.ஐ.சி. முன்னாள் சேர்மன் டி.எஸ்.விஜயன் உள்ளிட்ட

30 பேரிடமிருந்து மத்திய அரசுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. விஜயன் தலைவராகத் தேர்வானாலும் ஆச்சரியமில்லை. காரணம், அவர் ஏற்கெனவே எல்.ஐ.சி.யில் இருந்தவர். அரசாங்கத்தின் கோரிக்கை தெரிந்து நடந்தவர். அவரே ஐ.ஆர்.டி.ஏ.வின் தலைவராகிவிட்டால், நன்றாக இருக்குமே என்கிறது மத்திய அரசு. என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!'' என்றார்.

''வேறு என்ன சேதி..?'' என்றோம்.

''எஃப் அண்ட் ஓ மினி கான்ட்ராக்ட் வர்த்தகத்தை நிறுத்தும்படி என்.எஸ்.இ. மற்றும் பி.எஸ்.இ. பங்குச் சந்தைகளுக்கு செபி அமைப்பு அண்மையில் சொல்லியிருக்கிறது. இந்த வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதிகம் விவரம் தெரியாத சிறு முதலீட்டாளர்களை இழப்பி லிருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். புது மினி கான்ட்ராக்ட்களை இனி அனுமதிக்கக்கூடாது. ஏற்கெனவே உள்ள கான்ட்ராக்ட்களை அதன் முதிர்வுத் தேதியுடன் நிறைவு செய்ய செபி சொல்லி இருப்பது நல்ல விஷயம்தான். முதலீடு பெருகினால்தான் சந்தை வளருமே ஒழிய, இந்த விளையாட்டுகளினால் டிரேடர்களுக்கு மட்டுமே நன்மை'' என்றார்.

''எல்லாம் சரி, அடுத்து சந்தை எப்படி இருக்கும் என்று சொல்லவில்லையே!'' என்றோம்.

''இன்ஷூரன்ஸ், பென்ஷன், பேங்கிங் உள்ளிட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில் எல்.ஐ.சி. முதலீட்டு உச்சவரம்பு 10%லிருந்து 30% ஆக அதிகரிக்க அனுமதி போன்ற வற்றால் குறுகிய காலத்தில் பங்குச் சந்தை ஏற்றம் காண அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே என் அனலிஸ்ட் நண்பர்கள் சொல்கிறார்கள்'' என்றவர் புறப்பட, ''இந்த வாரமும் ஷேர்டிப்ஸ் இல்லையா?'' என்றோம்.

''வரும் வியாழக்கிழமை எஃப்  அண்ட் ஓ எக்ஸ்பைரி. நாடாளுமன்றம் வேறு அமளிதுமளிப்படுகிறது. எதற்கு வம்பு? இந்த வாரம் ஷேர்டிப்ஸ் இல்லை'' என்று கையை விரித்தவர், 'பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்லிவிட்டு, புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism