Published:Updated:

பிளாஸ்டிக் ஜாம்பவான்!

கம்பெனி ரிசர்ச்/ நீல்கமல்நாணயம் டீம்

பிளாஸ்டிக் ஜாம்பவான்!

கம்பெனி ரிசர்ச்/ நீல்கமல்நாணயம் டீம்

Published:Updated:
##~##

பிளாஸ்டிக் ஃபர்னிச்சர் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நீல்கமலை பற்றிதான் இந்த வாரம் நாம் அலசப் போகிறோம்.

 துறை எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாற்காலிகளைப் பொறுத்தவரை, பிளாஸ்டிக்கினால் தயாரான நாற்காலிகளையே நாம் அதிகம்  பயன்படுத்தி வருகிறோம். ஆனால், பிளாஸ்டிக் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பேக்கேஜிங், இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கன்ஸ்யூமர் டியூரபிள், விவசாயம், மருத்துவத் துறை உள்ளிட்ட பல துறைகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இருந்து வருகிறது. இந்த அனைத்துத் துறைகளின் வளர்ச்சியில் மறைமுகமாக இந்தத் துறை பங்களிக்கிறது. இப்போதைக்கு உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 1.5 சதவிகிதம்தான். வரும் வருடங்களில் இந்த எண்கள் இரட்டிப்பாகும் என்று தெரிகிறது. பிளாஸ்டிக்கின் இன்னொரு கவர்ச்சிகரமான அம்சம், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். இது மட்டுமே 9,200 கோடி ரூபாய் புழங்கும் துறையாகும்.

இப்போது பிளாஸ்டிக்கை பயன்படுத்தி சாலைகள் (இதன் மூலம் 5 முதல் 10 சதவிகிதம் வரை செலவு குறையும்) அமைக்கப்பட்டு வருவதால் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் தனிநபர் பிளாஸ்டிக் நுகர்வு வருடத்துக்கு 5 கிலோதான். ஆனால், உலக சராசரி 25 கிலோ. தற்போது 7.5 மில்லியன் டன் ஆக இருக்கும் இந்தியாவின் நுகர்வு, 2015-ல் 15 மில்லியன் டன் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கும் பிளாஸ்டிக் துறை வரும் காலத்தில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளாஸ்டிக் ஜாம்பவான்!

நிறுவனம் எப்படி?

1985-ம் ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் நாற்காலிகளை நாம் அதிகம் பயன்படுத்தி இருப்பதால், அது மட்டுமே அந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்று நினைக்கிறோம். ஆனால், இந்த நிறுவனம் சாதனங்களை கையாள்வதற்கு பொருட்கள், ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்து வருகிறது. மொத்தமாக, மெட்டீரியல் ஹேண்ட்லிங் மற்றும் ஃபர்னிச்சர் என்று சொல்லி இருந்தாலும் இந்த நிறுவனம் பல பொருட்களை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் பிளாஸ்டிக் பிஸினஸ் சந்தையில் 38 சதவிகிதத்தை வைத்திருக்கிறது. மேலும், 2005-ம் ஆண்டு முதல் அட் ஹோம் (@home) என்ற பெயரில் ரீடெய்ல் கடைகளை நடத்தி வருகிறது. இப்போதைக்கு 25,000 சதுர அடியில் 16 கடைகள் இந்தியாவில் இருக்கிறது. இப்போது இந்த பிஸினஸ் பிரேக் ஈவன் அடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டுக்குள் இன்னும் 30 கடைகளை திறக்க முடிவு செய்திருக்கிறது இந்த நிறுவனம்.

இந்தியா முழுவதும் ஏழு இடங்களில் தொழிற்சாலைகள் இருக்கிறது. 50 விற்பனை அலுவலகங்கள், 60 கிடங்குகளும் இருக்கிறது. மேலும், இந்த நிறுவனம் இலங்கை நிறுவனமான மோல்டட் ஃபர்னிச்சர் (Moulded Furniture.) நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இது தவிர, பல நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போட்டு வியாபாரம் செய்து வருகிறது. சமீபத்தில் மெத்தைகள் தயாரித்து விற்கும் வேலையையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது. மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மட்டுமே இந்த விற்பனையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விற்பனையும் நன்றாக இருக்கிறது.

நிதி நிலைமை!

இந்நிறுவனத்தின் வருமானம் கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது. மேலும், இந்நிறுவனத்தின் பி.இ. விகிதம் இந்த துறையின் பி.இ. விகிதத்தில் பாதிதான் இருக்கிறது. தற்போதைய நிலையில் புத்தக மதிப்புக்கு கீழே வர்த்தகமாகிறது. இந்நிறுவனத்தின் டிவிடெண்ட் அதிகமில்லை, என்றா லும், தொடர்ந்து டிவிடெண்ட் தந்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட புத்தக மதிப்புக்கு கீழேதான் இந்த பங்கு வர்த்தகமாகும் என்று முன்னணி புரோக்கிங் நிறுவனம் சொல்லி இருக்கிறது. அதாவது, இந்நிறுவனத்தின் புத்தக மதிப்பு 2014-ம் ஆண்டு 350 ரூபாய்க்கு மேல் இருக்க வாய்ப்பு என்று அந்த நிறுவனம் சொல்லி இருக்கிறது. அதேபோல, முக்கியமான விகிதமான கடனுக்கும் மூலதனத்துக்குமான விகிதம்கூட 1-க்கு கீழேதான் இருக்கிறது. மேலும், 2013-ம் நிதியாண்டில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்கப் பணிகளில் இந்த நிறுவனம் ஈடுபட இருக்கிறது. தற்போது சுமார் 1,430 கோடி ரூபாயாக இருக்கும் வருமானம், 2014-ம் ஆண்டு சுமார் 1,900 கோடி ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஆண்டுக்கு சுமார் 15 சதவிகித வளர்ச்சி எதிர்பார்க்க முடியும்.

இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசம் 62 சதவிகித பங்குகள் இருக்கிறது. இது இந்த பிஸினஸில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காண்பிக்கிறது. மேலும், இந்நிறுவனத்தின் புரமோட்டர்கள் பங்குகள் ஏதும் அடமானத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இந்த நிறுவனத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு ஏதும் இல்லை என்பதால் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்பு இல்லை.

பிளாஸ்டிக் ஜாம்பவான்!

வாய்ப்புகள்?

என்னதான் பெரிய அளவில் உற்பத்தி செய்தாலும், டீலர்கள் மூலம்தான் விற்பனை செய்ய வேண்டி இருக்கும். இப்போது இந்த நிறுவனமே நேரடியாக ரீடெய்ல் விற்பனை ஆரம்பித்திருப்பது நல்ல யுக்தி. மேலும், இதுபோல பல கடைகளை துவங்குவதன் மூலம் நேரடியாக லாபத்தைப் பெறலாம். தவிர, இந்நிறுவனத்தின் பொருட்கள் மக்களுக்கு அவசியமானவை.  நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய நிலையில் இருப்பதால் விற்பனை அதிகரிக்கவே வாய்ப்பு இருக்கிறது. இப்போது புதிதாக மெத்தைகள் பிஸினஸை ஆரம்பித்தி ருக்கிறது. அதற்கு நல்ல டிமாண்ட் இருப்பதாகவே தெரிகிறது. இப்போது 35 கோடி ரூபாயில் நடக்கும் இந்த பிஸினஸ் அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளில் 200 கோடி ரூபாய் என்ற நிலைக்கு வரும் என்று நிர்வாகம் நினைக்கிறது.

ரிஸ்க் என்ன?

இந்திய பொருட்களைவிட சீனப் பொருட்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதியைவிட சீனாவின் ஏற்றுமதி 24 மடங்கு அதிகம். மேலும், குரூட் ஆயில் விலை உயர்வால் இந்நிறுவனத்தின் லாபம் குறைய வாய்ப்பு உண்டு. அதே சமயத்தில் ரூபாய் சரிவு காரணமாக, அதிக விலை தந்து  இறக்குமதி செய்யவேண்டி இருக்கும். இதன் காரணமாக 10 சதவிகிதம் வரை அதிகமாகச் செலவாகும். இதைவிட முக்கியமாக, சுற்றுச்சுழல் துறையுடன் இந்த நிறுவனம் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதால், சுற்றுச்சூழல் கொள்கைகளால் பாதிப்பு வரலாம். இதை தாண்டியும் மண்டல வாரியாக இருக்கும் சிறு சிறு நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

இருந்தாலும், இந்த நிறுவனத்தின் நிதிநிலைமை, புதிய பொருட்களை அறிமுகப்படுத்துவது, எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்த பங்கினை உங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism