Published:Updated:

ஸ்விட்சுங் சூட்சுமம்; லாபமாக்கும் ரகசியம்!

ஸ்விட்சுங் சூட்சுமம்; லாபமாக்கும் ரகசியம்!

ஸ்விட்சுங் சூட்சுமம்; லாபமாக்கும் ரகசியம்!

ஸ்விட்சுங் சூட்சுமம்; லாபமாக்கும் ரகசியம்!

Published:Updated:
##~##

யூலிப் பாலிசி பற்றி எதுவும் தெரியாமலே அதை எடுத்தவர்கள்தான் நம்மில் பலர். ஏஜென்ட் சொன்னார், நண்பர் சொன்னார், உறவினர் சொன்னார் என்பதற்காக யூலிப் பாலிசியை எடுத்துவிட்டு, சந்தை சரிந்ததும் இவ்வளவு நஷ்டம் வந்துவிட்டதே என்று அதிர்ச்சியில் தவிக்கிறோம். சரியோ, தவறோ, போனது போகட்டும்; ஏற்கெனவே எடுத்த யூலிப் பாலிசியை அல்லது பாலிசிகளை இனி நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில்தான் நம் புத்திசாலித்தனம் இருக்கிறது.

 மேலை நாடுகளில் பங்குச் சந்தை சார்ந்த இன்ஷூரன்ஸ் பாலிசியான யூலிப் (Unit Linked Insurance Plan) அனைவராலும் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திட்டமாகத் திகழ்கிறது. இதில், காப்பீடு மற்றும் முதலீடு என்ற இரு அம்சமும் ஒருசேர இருப்பதால் பலரும் இதை விரும்புகிறார்கள். யூலிப் பாலிசியைக் குறுகிய காலம் மற்றும் நீண்ட காலத் திட்டமாகப் பயன்படுத்துகின்றனர். இடையில் பகுதித் தொகையை எடுத்துக்கொள்ளும் வசதியும் உள்ளதால் மேலை நாடுகளில் இது ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் திட்டம் இந்தியாவில் 2000-ம் ஆண்டில்தான் முதன் முதலில் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மியூச்சுவல் ஃபண்டை ஓரளவு அறிந்தவர்கள் தாமாகவே முன்வந்து யூலிப் பாலிசிகளில் முதலீடு செய்தனர். பங்குச் சந்தை ஏற்றத்தில் இருந்ததால் யூனிட்களின் மதிப்பு உயர்ந்து லாபத்தில் இருந்தது. இடையில் பணத்தை எடுக்க முடியும் என்பதால் பலரும் லாபத்தை அனுபவித்தனர் என்றே சொல்ல வேண்டும்.  

ஸ்விட்சுங் சூட்சுமம்; லாபமாக்கும் ரகசியம்!

2007-ம் ஆண்டில் சந்தை, சர்வதேச காரணங்களால் சரிந்தபோதுதான் பலரும் கையைச் சுட்டுக்கொண்டனர். அதுவும், முதலீடு செய்து சில ஆண்டுகளானவர்களுக்கு இழப்பு அதிகமானது. காரணம், யூலிப் பாலிசிகளில் முதல் இரு ஆண்டுகளில் கமிஷன், நிர்வாகக் கட்டணம், ஃபண்ட் மேனேஜ்மென்ட் கட்டணம், காப்பீடு கவரேஜுக்கான கட்டணம் என முதலீட்டு தொகையில் சுமார் 30 சதவிகிதம் போய்விட்டதால் முதலீட்டுக்குச் சென்றது குறைவுதான். மார்க்கெட் தொடர்ந்து அடி வாங்கியபிறகு (சென்செக்ஸ் 21000 புள்ளிகளிலிருந்து இருந்து 8000) மார்க்கெட் சார்ந்த யூலிப் பாலிசிகள் என்றாலே எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.  ஏற்கெனவே பாலிசி எடுத்தவர்கள் யூனிட் மதிப்பு குறைந்ததால் கவலைக்குள்ளானார்கள்.

கடல் ஆழமானதுதான்; ஆபத்தானதுதான். என்றாலும், அதில்தான் விலை உயர்ந்த முத்துக்கள் கிடைக்கின்றன. ஆழ்கடலில்தான் அரியவகைப் பொருட்கள் நமக்குக் கிடைக்கிறது. கடலில் மீன் பிடிப்பதற்கும் முத்து எடுப்பதற்கும் கடல் பற்றிய பொதுவான அறிவும் அனுபவமும் தேவை. அதுபோல் யூலிப் பாலிசி பற்றி முழுமையாக அறிந்துகொள்ள அறிவும் அனுபவமும் அவசியம்.

யூலிப் முதலீடு: கவனிக்க வேண்டியவை!

யூலிப்-ல் முதலீடு செய்யும்போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை கட்டணங்கள்தான்.

1. ஃபண்ட் ஒதுக்கீடுக் கட்டணம்,

2. ஃபண்ட் நிர்வாகக் கட்டணம்,

3. பாலிசி நிர்வாகக் கட்டணம்,

4. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கட்டணம்,

5. விபத்துக் காப்பீடு பலன் கட்டணம்,

6. ஃபண்ட் ஸ்விட்ச் கட்டணம் போன்ற பலவிதமான கட்டணங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானவை, முதலில் இருக்கும் மூன்று கட்டணங்கள். இவை கம்பெனிக்கு கம்பெனி வேறுபடும்; இதில் எது குறைவாக உள்ளது என்பதைப் பார்த்து பாலிசியைத் தேர்வு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஃபண்ட் மேனேஜர் என ஒருவர் இருப்பார். அவர், பங்குகளை முதலீட்டுக்காகத் தேர்வு செய்யும்போது, அதிலுள்ள ரிஸ்க், ஒரு பங்கு வருமானம் (இ.பி.எஸ்.), டிவிடெண்ட் மற்றும் பல காரணிகளை ஆராய்ந்து அதற்கேற்ப பங்குகளை வாங்குவார். அந்த பங்குகளின் வளர்ச்சியைப் பொறுத்து மியூச்சுவல் ஃபண்டின் வளர்ச்சி இருக்கும். இடையில் தேவைப் பட்டால், பங்கின் விலை தொடர்ந்து குறைந்து வரும்போது, பங்குகளை விற்றுவிட்டு, அதனைவிட குறைந்தபிறகு மீண்டும் வாங்கிக்கொள்வார்.

ஆனால், யூலிப் பாலிசிகளில் ஃபண்ட் நிர்வாகத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் அளவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. யூலிப் பாலிசிகள் கிட்டத்தட்ட ஒரு இண்டெக்ஸ் ஃபண்ட் போலவே செயல்படுகிறது. கடலில் மிதக்கும் பொருள் எவ்வாறு அலையின் அசைவுக்கு இசைபடுகிறதோ, அதுபோல் அது முழுக்க முழுக்க மார்க்கெட்டையே நம்பி இருக்கிறது.

யூலிப் பாலிசியில் பாமரன் முதல் படித்தவர்கள் வரை கோடிக்கணக்கானோர் முதலீடு செய்கிறார்கள். ஆனால், இதில் ஃபண்ட் மேனேஜராக செயல்பட வேண்டிய முகவர் களுக்கும், வளர்ச்சி அதிகாரி மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் அதுபற்றிய பயிற்சி அளிக்காததே, யூலிப் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட முக்கிய காரண மாக இருக்கிறது.

யூலிப் பாலிசிகளில் முதல் மூன்று ஆண்டு களில் கட்டணமாகப் பெருந்தொகை போய்விடுவதால் அந்தக் காலகட்டத்தில் முதலீடு மீதான லாபத்தை அதிகம் எதிர்பார்க்க முடியாது. அதேநேரத்தில், அடுத்து வரும் ஆண்டுகளில், பிரீமியத்தில் பெரும்பகுதி (சுமார் 90-95%) முதலீட்டுக்குச் செல்வதால் அதிக யூனிட்கள் கணக்கில் வரவாகும். இப்படியே குறைந்தது

10 ஆண்டுகள் தொடர்ந்தால் ஆயுள் காப்பீடு உடன் சுமார் 12% முதல் 15% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

யூலிப் பாலிசியில் பாண்ட் ஃபண்ட், செக்யூர்ட் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட், குரோத் ஃபண்ட் என நான்கு வகைகளிலும் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதில், பாண்ட் ஃபண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால், தற்போதைய வட்டி விகிதப்படி குறைந்தது 8% லாபம் கிடைத்திருக்கும். இது மற்ற எண்டோவ்மென்ட் ரக பாலிசிகளில் கிடைக்கும் வருமானத்தைவிட (சுமார் 6%) அதிகமே. இதேபோல் செக்யூர்ட் ஃபண்ட் ஆப்ஷனில் முதலீடு, கடன் பத்திரங்கள், ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிஸ்க் இல்லாத நிதிச் சார்ந்த ஆவணங்களில் செய்யப்பட்டிருக்கும்.

அடுத்து, பேலன்ஸ்டு ஃபண்ட் ஆப்ஷன். இதில் நிதியானது கடன் பத்திரங்களில் அதிகமாகவும் நிறுவனப் பங்குகளில் குறைவாகவும் பிரித்து முதலீடு செய்யப்படும்.

கடைசியாக, குரோத் ஃபண்ட் ஆப்ஷன். இதில், முழுத் தொகையும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப இந்த குரோத் ஃபண்ட் ஆப்ஷனில் யூனிட்களின் மதிப்பு ஏறி இறங்கும். இதை தவிர்ப்பதற்குத்தான் யூலிப் பாலிசிகளில் ஃபண்ட் மேனேஜருக்கு மாறாக 'ஸ்விட்சிங் ஆப்ஷன்’ என்ற ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப யூலிப் பாலிசியின் லாபம் வளரவும், பாதுகாப்பாக வைக்கவும் முடியும்.

ஸ்விட்சிங் ஆப்ஷனை ஒரு வருடத்திற்கு நான்கு முறை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு முறையாக ஸ்விட்ச் செய்து இருந்தால் யாருக்கும் பெரிதாக நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. ஓராண்டில்  நான்கு முறை ஸ்விட்சிங் ஆப்ஷன் மூலம் நம் முதலீட்டை மாற்றிக்கொள்வது போதுமானதாகவே இருக்கும். அதற்குமேல் என்றால், ஒருமுறை மாற்ற 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  

யூலிப்களில் சந்தை தொடர்ந்து இறக்கத்தில் இருக்கிறது என்றால் முதலீட்டை ஈக்விட்டி சார்ந்த குரோத் ஆப்ஷனில் இருந்து பேலன்ஸ்டு அல்லது பாண்ட் ஃபண்டுக்கு மாற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது ஒரு முறை. சந்தை நிலைமை சீரானதும் மீண்டும் பழைய ஆப்ஷனுக்கு மாற்றிக்கொள்ளலாம். இம்முறையில் மூலதனத்தைப் பாதுகாக்க முடியும் என்பதோடு ஓரளவு வருமானத் துக்கும் உத்தரவாதம் இருக்கிறது.

அடுத்து, ரிஸ்க் எடுக்கத் தயார், அதிக வருமானம் வேண்டும் என்பவர்கள், சந்தை இறக்கத்தில் இருக்கும்போது டாப் அப் செய்துகொள்ளலாம். அப்போது யூனிட்களின் மதிப்பு குறைவாக இருக்கும் என்பதால் அதிக யூனிட்கள் ஒதுக்கப்படும். பிற்காலத்தில் சந்தை மேலேறும்போது அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

தற்போது கைவசம் பணமில்லை; ஆனால், ரிஸ்க் எடுக்க தயார் என அதிக லாபம் எதிர்பார்ப் பவர்களுக்கு சந்தை இறங்குமுகமாக இருக்கும் நிலையில் பேலன்ஸ்டு ஆப்ஷன் அல்லது பாண்ட் ஆப்ஷனிலிருந்து குரோத் ஆப்ஷனுக்கு மாற்றிக் கொண்டால், சந்தை பின்னர் ஏறும்போது அதிக லாபம் கிடைக்கக்கூடும்.

யூலிப் பாலிசியின் வருமானத்தில் அதனை எடுத்தவருக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்தால், அதை நிச்சயம் லாபகரமானதாக மாற்றிவிட முடியும். இனியாவது ஸ்விட்சிங் ஆப்ஷனை பயன்படுத்தி, நமது நஷ்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism