Published:Updated:

நடப்பதெல்லாம் தெரிந்துவிட்டால் லாபம் ஏதும் இல்லை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

நடப்பதெல்லாம் தெரிந்துவிட்டால் லாபம் ஏதும் இல்லை!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

வேல்யூ இன்வெஸ்டிங் எந்த விதத்தில் மார்க்கோவிட்ஸின் போர்ட்ஃபோலியோ தியரியிலிருந்து மாறுபடுகின்றது என்று பார்ப்பதற்கு நீங்கள் சந்தையில் நிலவிய மற்றுமொரு கோட்பாடாகிய எஃபீசியன்ட் மார்க்கெட் தியரியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்ன எஃபீசியன்ட் மார்க்கெட் தியரி?

 எம்.பி.ஏ-வில் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் படிப்பிற்கு விண்ணப்பித்தீர்கள் என்றால் இதுபற்றி ஒரு நீண்ட விளக்கமே உங்களுக்குக் கிடைக்கும். எம்.பி.ஏ-வில் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் கோர்ஸ் படிக்கும் ஒரு மாணவனுக்குத் தெரிய வேண்டிய அளவுக்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு இதுகுறித்து தெரிய வேண்டியதில்லை என்றாலும், இந்த சித்தாந்தம் எதன் அடிப்படையில் நிறுவப்பட்டது என்பதை நீங்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடப்பதெல்லாம் தெரிந்துவிட்டால் லாபம் ஏதும் இல்லை!

ஃபீசியன்ட் மார்க்கெட் தியரி எனப்படும் சித்தாந்தம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு விஷயமாகும். தியரிஸ்ட்டுகள் கோபம் கொண்டுவிடுவார்களோ என்ற பயத்துடன் கொஞ்சம் லைட்டாகச் சொன்னால், சந்தையில் பேலன்ஸ்ஷீட், பிராஃபிட்-லாஸ் அக்கவுன்ட், ரிசர்ச் என்றெல்லாம் செய்து ஷேரை வாங்கிப்போட்டு லாபம் பார்க்கலாம் என்று நினைப்பது ஒரு கனவு. ஏனென்றால், சந்தை என்பது ஸ்மார்ட் மணி (பணம்) நடமாடும் ஒரு இடம். இந்த ஸ்மார்ட் மணிக்குச் சொந்தக்காரர்கள், நாட்டிலும், சந்தையிலும், கம்பெனிகளிலும் நடக்கும் விஷயங்களை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களுடைய கண்ணுக்குத் தப்பி விலையை மாற்றக்கூடிய எந்த ஒரு விஷயமும் யார் கண்ணிலும் பட்டுவிடாது. விலை மாறுதலைத் தூண்டக் கூடிய ஒரு செய்தியோ அல்லது நிகழ்வோ வந்தாலோ, நடந்தாலோ அவர்கள் அந்த செய்தியினாலும், நிகழ்வாலும் எந்தவிதமான விலை மாறுதல் வருமோ (ஏற்றம்/இறக்கம்) அதை உடனடியாக கொண்டுவரும்படி நடந்துகொள்வார்கள். கொஞ்சம் குழப்புகின்றது இல்லையா?

ஒரு உதாரணம் மூலம் இதை சுலபமாகப் பார்ப்போம். மாருதி சுசூகியின் ஒரு புதிய மாடல் காரின் விற்பனை பிய்த்துக் கொண்டு போகின்றது என்று காலையில் செய்தித்தாளில் செய்தி வருகிறது. சந்தை ஓப்பன் ஆகும்போது நீங்கள் மாருதி ஷேரின் விலையைப் பார்த்தீர்கள் என்றால் அந்த புது மாடலின் சக்ஸஸ் எந்த அளவுக்கு லாபத்தினை அதிகப்படுத்துமோ, அந்த அளவுக்கு சமமான விலையில் தான் மாருதியின் பங்குகளின் விலை ஓப்பனாகும். அதேபோல், மாருதியில் தொழிலாளர் வேலைநிறுத்தம் என்ற அறிவிப்பு வந்த முதல் நாளன்று பார்த்தால், அந்த வேலைநிறுத்தத்தால் எந்த அளவுக்கு லாபத்தில் பாதிப்பு வருமோ, அந்த அளவுக்கு விலை இறக்கத்தை உடனடியாகச் சந்தித்துவிடும் என்பதுதான் எஃபீசியன்ட் மார்க்கெட் தியரியின் சாராம்சம்.

இதில் நிறைய கிளை தியரிகள் உள்ளன (ஸ்ட்ராங் ஃபார்ம், செமி-ஸ்ட்ராங் ஃபார்ம், வீக் ஃபார்ம் ஆஃப் எபீசியன்சி... என பல கிளை தியரிகள் உண்டு!). அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

எஃபீசியன்ட் மார்க்கெட் தியரியின்படி ஸ்மார்ட்டான நபர்களின் பணம் சந்தையில் சுற்றுவதாலும், சந்தை முழுவதுமே ஸ்மார்ட்டான மற்றும் விவேகம் நிறைந்த நபர்கள் (ரேஷனல் இன்வெஸ்டர்) இருப்பதாலும் ஒவ்வொரு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் செய்திகளின் தாக்கம் உடனுக்குடன் மிகச் சரியான அளவில் ஷேரின் விலையில் பிரதிபலித்துவிடும் என்பதுதான்.

எஃபீசியன்ட் மார்க்கெட் தியரி முழுமையாகச் செயல்படும்பட்சத்தில் ஒரு ஷேரின் விலை என்பது ஒரு கம்பெனியில் உள்ள நல்லது, கெட்டது எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த கம்பெனியின் மதிப்பை முழுமையாகப் பிரதிபலிக்கவே செய்யும். ஏனென்றால், லாபத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும் செய்திகள் அனைத்தும்தானே மதிப்பை மாற்றுவதாக இருக்கும். விலையும் மதிப்பும் மிகச் சரியாக சந்தையில் எல்லா சமயத்திலும் இருந்தால் எங்கே அடிமாட்டு விலையில் வாங்கி சூப்பர் விலையில் விற்று சூப்பர் லாபம் பார்ப்பது? சூப்பர் லாபம் என்ற பேச்சுக்கே பங்குச் சந்தையில் இடம் இருக்காது. சரியான கம்பெனியில் முதலீடு செய்யாவிட்டால் நஷ்டம் வந்துவிடலாம். இதனால்தான் ஒரு கம்பெனியில் முதலீடு செய்வதைத் தவிர்த்து எதிர்மறையாக செயல்படும் இரண்டு கம்பெனிகளில் (சென்ற இதழில் சொன்ன உதாரணமாகிய கரன்டை நம்பியே லாபம் பார்க்கும் வொர்க்ஷாப் தொழில் மற்றும் கரன்ட் இல்லாவிட்டால் சுபிட்சமடையும் யூ.பி.எஸ். தொழில்) முதலீடு செய்யுங்கள் என்றார் மார்க்கோவிட்ஸ்.

நடப்பதெல்லாம் தெரிந்துவிட்டால் லாபம் ஏதும் இல்லை!

சின்னத் தொழில்களில் இதுபோன்ற எதிர்மறை தொழில்களை கண்டுபிடிப்பது சுலபம். பெரிய கம்பெனிகள், பல தொழில்கள் செய்கின்றதே! எப்படி அதில் எதிர்மறை தொழிலைக் கண்டுபிடிப்பது என்பதற்கு வழியையும் சொன்னார் அவர்.

எஃபீசியன்ட் மார்க்கெட் தியரியின்படி மதிப்பு எப்போதும் விலையாகத் திகழ்கின்றது. இரண்டு பங்குகளின் விலை மாறுதல்களை ஆராயுங்கள்; ஒன்று ஏறும்போது மற்றொன்று இறங்கவும், இரண்டாமாவது ஏறும்போது முதலாமாவது இறங்கவும் செய்தால் அந்த இரண்டு கம்பெனிகளும் ஒன்றுக்கொன்று எதிர்மறை லாபம் தரும் தொழிலில் இருக்கின்றது என்றுதானே அர்த்தம்! இந்த அடிப்படையில்தான் மார்க்கோவிட்ஸ் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக விலை மாறுதல் வரும் கம்பெனியின் ஷேர்களை சேர்த்து ஒரு போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதன் மூலம் போர்ட்ஃபோலியோவின் ரிஸ்கினைக் குறைக்க முடியும் என்று நிரூபித்தார்.

மார்க்கோவிட்ஸிற்கு விலைதான் மதிப்பு என்பது தாரக மந்திரமாக இருந்தது.  அந்த தாரக மந்திரம் உருவாக காரணம், எஃபீசியன்ட் மார்க்கெட் தியரியில் அந்த காலகட்டத்தில் இருந்த அதீத நம்பிக்கை. வேல்யூ இன்வெஸ்டிங்கின் மகிமையை தெளிவாகப் புரிந்துகொள்ள இதை இன்னும் கொஞ்சம் அலசுவோம்.

விலை எங்கிருந்து வருகின்றது? மதிப்பில் இருந்து வருகிறது.

எஃபீசியன்ட் மார்க்கெட் தியரியின்படி, எல்லோருமே அதிபுத்திசாலியாக சரியாக விலையைக் கணிக்கும் சூழல் சந்தையில் இருந்தால் என்ன அர்த்தம்? எல்லோருமே பங்குகளின் மதிப்பை செம்மையாக கணிக்கும் திறன் கொண்டவர்கள் என்றுதான் அர்த்தம். அப்படி சந்தையில் முதலீடு செய்யும் அனைவருமே மதிப்பை சரியாக (அதுவும் உடனுக்குடன்) கணக்கிடும் திறைமையை கொண்டவர்களாக இருந்தால் என்னவாகும்?

நடப்பது எல்லாம் முன்கூட்டியே தெரிந்து கொள்ள எல்லோராலும் முடிந்துவிட்டால்,  சூப்பர் லாபம் பார்ப்பது என்பது சாத்தியமில்லாமல் போகும். விப்ரோவில் முதலீடு செய்தால் பதினைந்து வருடத்தில் கோடீஸ்வரர் என்று கண்டுபிடித்து வாங்கியிருக்கவும் முடியாது; சத்யம் கம்ப்யூட்டரில் பணத்தைப் போட்டால் போண்டியாகிவிடும் என்று தெரிந்து விட்டிருக்கவும் முடியாது. ஏனென்றால், விப்ரோ வளரும் என்று தெரிந்து விலைகள் ஆரம்பத்திலேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கும். சத்யத்தின் பிரச்னைகளை ஸ்மார்ட் மணி கண்டுபிடித்து விலையை இறக்கியே வைத்திருந்திருக்கும்.

விப்ரோ, சத்யம் எல்லாம் நீண்ட நாள் முதலீட்டில் நடந்த நல்லது, கெட்டது சார். யாரால் அவ்வளவு நீண்ட நாட்களுக்கு கம்பெனிகளின் போக்கை கணிக்க முடியும்? ஒரு தியரியைப் பற்றி குறைசொல்ல ரொம்பச் சௌகரியமான நீண்ட கால ஏற்ற இறக்கத்தை வைத்து கேலி செய்யக் கூடாது என்கிறீர்களா?

நடப்பதெல்லாம் தெரிந்துவிட்டால் லாபம் ஏதும் இல்லை!

ஓ.கே, வேறு சில உதாரணங்களைப் பார்ப்போம். 2000-ம் ஆண்டிலிருந்து நீங்கள் மார்க்கெட்டில் இருந்தீர்கள் என்றால், நீங்களாகவே பின்வருபவற்றைப் புரிந்துகொள்ளலாம். இல்லை என்றால், 2000-த்தில் இருந்து மார்க்கெட்டில் முதலீடு செய்யும் நண்பர்களை கேட்டுப் பாருங்கள். 2000 பிப்ரவரி யிலும், 2008 ஜனவரியிலும் சந்தை தாறுமாறாக இறங்கியது. அதிலும், 2008 செப்டம்பரில் விலையெல்லாம் தலைகீழ். அந்தச் சூழ்நிலையில் மொத்த மார்க்கெட்டும் இறங்கியதால் சென்டிமென்ட் நெகட்டிவ்வாக மாறி நிறைய கம்பெனிகளின் விலை அதன் மதிப்பைவிட கீழே படுபாதாளத்திற்குப் போனதை எல்லோரும் கண்கூடாகப் பார்த்தார்கள்.

2000-ல் இறங்கிய சந்தை மீண்டும் ஏறி பலமடங்கு உயர்ந்தது; 2008-ல் இறங்கிய சந்தை 2009-ல் ஏற ஆரம்பித்து படுவேகமாக மேலே போனதும் கண்கூடான விஷயங்கள். அளவுக்கதிகமான இறக்கத்திற்குப் பிறகு வேகமான ஏற்றம் கண்டது எதனால் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். ஒரு செக்டாருக்கோ, ஒரு நாட்டிற்கோ ஏதாவது ஒரு பிரச்னை பூதாகரமாக வரும்போது அந்தக் காரணத்தினால் சந்தையில் சென்டிமென்ட் மாறி படுவேகமான இறக்கம் வரலாம். மொத்த சந்தையும் படுவேகமாக இறங்கும்போது நல்ல பல கம்பெனிகளின் விலை அதன் உண்மை மதிப்பைத் தாண்டி கீழே போய்விடுகின்றது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இப்படி மதிப்பைவிட விலை, பயத்தின் காரணமாக கீழே போகும்போது ஒரு சூப்பர் லாபம் பார்க்கும் வாய்ப்பு உருவாகிறது. வேல்யூ இன்வெஸ்டிங்கிற்கான வாய்ப்பு இப்படி சந்தை சரியும் வேளையில்தான் உருவாகின்றது.

எஃபீசியன்ட் மார்க்கெட் தியரியின்படி, ஸ்மார்ட் மணியும் விவேகமுள்ள முதலீட்டாளர்களும் சரியான விலையையே எப்போதுமே முடிவு செய்கிறார்கள் என்ற சித்தாந்தம் மேலே சொன்ன இரண்டு உதாரணச் சூழலின்போது பொய்யாகப் போனது உங்களுக்குத் தெரிகிறதா?

சந்தையில் அசாதாரணச் சூழல்கள் வந்துபோய்க்கொண்டே இருக்கத்தான் செய்யும். எல்லா நாட்களிலும் மதிப்பும் விலையும் ஒன்றாக இருக்காது. மதிப்புக்கு கீழும் மேலுமாய் மட்டுமே விலை போய்க்கொண்டு இருக்கும். மதிப்பைவிட மிகக் கீழே வரும்போது வாங்கி, மதிப்பைவிட மேலே போகும்போது விற்று லாபம் பார்க்கும் தந்திரம்தான் வேல்யூ இன்வெஸ்டிங் என்பதை மீண்டும் ஒருமுறை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

(முதலிடுவோம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism