Published:Updated:

கடனுக்கு கட்டுப்பாடு...

தங்க மோகத்தை தடுக்க முடியாது ! பானுமதி அருணாசலம்.

பிரீமியம் ஸ்டோரி
##~##

தீபாவளி போனஸ், திடீரென கிடைக்கும் சில ஆயிரம் ரூபாய், குருவிபோல கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்த பணம் என எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சளைக்காமல் தங்கம் வாங்குகிறவர்கள் நம் மக்கள். கையில் இருக்கும் தங்கத்தை வங்கியில் அடமானம் வைத்து, அந்த பணத்தில் தங்கம் வாங்குகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்நிலையில், தங்க நகைகள் வாங்க வங்கிகள் கடன் தரக்கூடாது என ஆர்.பி.ஐ. திடீரென ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

என்ன ஆச்சு ஆர்.பி.ஐ.க்கு? ஏன் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்கிறது?

''தங்க இறக்குமதியை எப்படியாவது குறைக்கவேண்டும் என்று முயற்சித்து வருகிறது மத்திய அரசாங்கம். கடந்த பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது. இதற்கு நகை வியாபாரிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பவே, பிற்பாடு அந்த முடிவை கைவிட்டது. அடுத்தபடியாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்கத்தின் அன்றைய மதிப்பில் 60 சதவிகிதம் வரை மட்டுமே கடன் தரவேண்டும் என்று சொன்னது. இப்போது தங்க பார், காயின், ஆபரணம், கோல்டு இ.டி.எஃப். என எந்தவிதத்திலும் தங்கம் வாங்க கடன் தரக்கூடாது என வங்கிகளுக்கு கண்டிஷன் போட்டிருக்கிறது.

ஆர்.பி.ஐ.-ன் இந்த புதிய உத்தரவால் தங்கத்தின் இறக்குமதி குறையுமா என 'இன்ஸ்டிடியூட் ஃபார் ஃபைனாஷியல் மேனேஜ்மென்ட் அண்ட் ரிசர்ச்’ (IFMR) பேராசிரியர் பாபி ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம்.

கடனுக்கு கட்டுப்பாடு...

''நம் அரசின் வர்த்தகப் பற்றாக்குறை இந்த நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 110 பில்லியன் டாலரைத் தாண்டிவிட்டது. ஒரு நாட்டின் ரூபாய் மதிப்பை நிர்ணயிப்பதில் வர்த்தகப் பற்றாக்குறை முக்கிய பங்கு வகிக்கிறது. 2011-2012-ம் ஆண்டில் 180 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிட்டால் இப்போதே 60 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டோம். வர்த்தகப் பற்றாக்குறை அதிகமாவதால் ரூபாய் மதிப்பு குறைகிறது. இந்நிலை இப்படியே போனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 60 ரூபாய்க்கும் மேல் போக வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் தங்க இறக்குமதியைக் குறைக்க நினைக்கிறது அரசு.

கடனுக்கு கட்டுப்பாடு...

இறக்குமதி வரியை அதிகரித்தால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், விலை அதிகரித்து டிமாண்ட் குறைந்து விடும் என அஞ்சுகிறது அரசு. தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதித்தால் துபாய் போன்ற வெளிநாடுகளிலிருந்து கள்ளச் சந்தை மூலம் நம் நாட்டிற்கு தங்கம் வரும். இதனால் அரசுக்கு பாதிப்பே ஏற்படும். பொதுவாக, தங்கத்தை அதிகளவில் வாங்குவது பணக்காரர்கள்தான். தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தங்கமாக வாங்கி வைக்கிறார்கள். இவர்கள் தங்கத்தைப் பாதுகாப்பான முதலீடாகப் பார்ப்பதால் தங்கம் விலை எவ்வளவு ஏறினாலும் வாங்கிக்கொண்டே இருப்பார்கள்.  

1965-ம் வருடம் ஒரு கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய்; 2012-ல் 3,100 ரூபாய்; இதுவே 2016, 2017-ம் ஆண்டுகளில் 6,000 ரூபாய் வரை போக வாய்ப்புண்டு. தங்கம் வாங்க கடன் தரக்கூடாது என்று ஆர்.பி.ஐ. சொன்னாலும், மக்கள் வாங்குவதை நிறுத்தவே மாட்டார்கள். ஏற்றுமதியை அதிகரித்தால் மட்டுமே வர்த்தகப் பற்றாக்குறை குறையும். எனவே, தங்கத்திற்கு கடன் தராமல் இருந்துவிட்டாலே எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடாது'' என்றார்.

கடனுக்கு கட்டுப்பாடு...

வங்கிகள் தங்கம் வாங்க கடன் தரக் கூடாது என ஆர்.பி.ஐ. சொல்லி இருப்பது குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைவர் ஞானசேகர் தியாகராஜனிடம் கேட்டோம். ''தங்கம் என்பது நம் கலாசாரத் துடன் இணைந்தது. தங்கம் வாங்காதீர்கள் என சொன்னால் மக்கள் ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. தவிர, வங்கி மூலம் கடன் பெற்று வாங்கப்பட்ட தங்கம் நமது தங்க இறக்குமதியில் 3 - 4 சதவிகிதம் மட்டுமே.  

நம் நாட்டின் இறக்குமதியில் கச்சா எண்ணெய் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடி யாகவே தங்கம் இருக்கிறது. சென்ற ஆண்டில்

60 பில்லியன் டாலர் வரை தங்கத்தை இறக்குமதி செய்தோம். இதுவே, இந்த ஆண்டில் 40 பில்லியன் டாலராக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதியைக் குறைப்பதற்குப் பதில் வேறு வகை யோசனைகளைச் செய்யலாம். அரசு கோல்டு

கடனுக்கு கட்டுப்பாடு...

பாண்டுகளை அறிமுகப்படுத்தி நிலையான வருமானம் கொடுக்கும்படி செய்யலாம். அந்நிய சில்லரை வர்த்தகம் போன்ற திட்டங்கள் மூலம்தான் நம் நாட்டிற்குள் பணம் வரும். இதன் மூலமே ரூபாயின் மதிப்பை சரி செய்ய முடியும்.

உலக நாடுகளின் தற்போதைய பொருளாதார பிரச்னையில் அந்தந்த நாட்டு கரன்சிகள் தள்ளாடும் நிலையில், தங்கத்தைத் தந்து மற்ற பொருட்களை வாங்கும் நிலைகூட வரலாம். அந்த சமயத்தில் நம்மிடம் தங்கம் இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். மொத்தத்தில் தங்கத்தை இறக்குமதி செய்வதை தடை விதித்தால் மட்டும் நம் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை பிரச்னை தீர்ந்துவிடாது. கச்சா எண்ணெய்யும், தங்கத்தையும் நாம் அதிகளவில் இறக்குமதி செய்யவேண்டிய நிலையிலேயே இருக்கிறோம்'' என்றார்.

சரி, இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் தங்கம் விலை எவ்வளவு போகும் என்று கேட்டோம். ''ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். டிசம்பர் மாத இறுதிக்குள் பத்து கிராம் தங்கம் 33,000 முதல் 33,500 வரை போக வாய்ப்பிருக்கிறது'' என்றார்.

ஆர்.பி.ஐ.யின் புதிய உத்தரவு பற்றி சில நகைக் கடை அதிபர்களிடம் கேட்டோம். ''வங்கிகள் கொடுக்கும் கடன் மூலம் நகை வாங்குவது என்பது மிகவும் குறைவுதான். வங்கிகள் கடன் தராது என்பதால் யாரும் தங்கம் வாங்காமல் இருக்கப் போவதில்லை. விலை அதிகரிக்க அதிகரிக்க தங்கத்தை வாங்கவே மக்கள் நினைக்கிறார்கள்'' என்றனர்.

மக்கள் தங்கத்தை வாங்குவதை வேறு வகைகளில் மாற்ற 'கோல்டு அக்குமுலேஷன் பிளான்’ என்ற திட்டத்தை வங்கிகள் மூலம் அறிமுகப்படுத்த ஆலோசனை செய்து வருகிறது நிதி அமைச்சகம். இதன் மூலம் தங்க எஃப்.டி.-யில் மக்கள் பணம் போட்டால் ஃப்யூச்சர் கான்ட்ராக்டில் வங்கிகள் தங்கத்தை வாங்கி வைத்துவிடும். மக்கள் இதை தேவை யான நேரத்தில் பணமாகவோ, தங்கமாகவோ பெற முடியும். இதற்கு தங்கத்தை உடனடியாக இறக்குமதி செய்யவேண்டாம் என்றாலும், என்றைக்காவது மக்கள் கேட்கும்போது தங்கத்தை இறக்குமதி செய்துதான் ஆகவேண்டும். அப்போதும் டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு குறையவே செய்யும்.  

தங்க முதலீட்டில் போடும் பணம் அரசு கஜானாவிற்கு வரவேண்டும் என நினைக்கிறது நிதி அமைச்சகம். ஆனால், ஆர்.பி.ஐ.-யோ, மக்கள் தங்கம் வாங்க கடன் தரக்கூடாது என்கிறது. அரசின் இரண்டு முக்கிய அமைப்புகள் ஏன் இரண்டு விதமாகப் பேசி மக்களை குழப்புகிறதோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு