Published:Updated:

தங்கைக்கு நிலம்... பாகப் பிரிவினைப் பத்திரம் போதும்!

நீரை.மகேந்திரன், படம்: ரா.மூகாம்பிகை.

பிரீமியம் ஸ்டோரி
##~##

பூர்வீகச் சொத்திலிருந்து பெண்களுக்குத் தரும் சொத்தை எப்படி பதிவு செய்வது? கிரயப் பத்திரமாக எழுதித் தரலாமா? அல்லது பாகப் பிரிவினைப் பத்திரமாக எழுதித் தரலாமா? எனது தங்கைக்கு நிலம் தர உள்ளேன்.  பிற்காலத்தில் எது சிக்கல் இல்லாமல் இருக்கும்?

- ராஜலிங்கம், கோயம்புத்தூர்.

''பூர்வீகச் சொத்திலிருந்து பாகப் பிரிவினையாகப் பெண்களுக்குத் தரும் சொத்தை கிரயப் பத்திரம் செய்துதர வேண்டும் என்பது கட்டாயமில்லை. ரத்த சம்பந்த உறவுகளுக்குள் சொத்தை பிரித்துக் கொள்வதற்கு பாகப் பிரிவினை பத்திரம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது பிரித்துக்கொள்ள வேண்டிய பூர்வீகச் சொத்தை யாராவது ஒருவர் முழுமையாக எடுத்துக்கொள்ள நினைத்தால் விடுதலைப் பத்திரம் மூலம் எழுதிக் கொடுக்கலாம். இதற்கு பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். சொத்தின் மதிப்பில் ஒரு சதவிகிதம் அல்லது அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் பதிவு கட்டணமாகவும், முத்திரைத்தாள் கட்டணமாக பத்து லட்சத்திற்கு குறைவான மதிப்புடைய சொத்திற்கு சொத்தின் மதிப்பில் ஒரு சதவிகிதமும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய சொத்திற்கு அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாயும் கட்ட வேண்டும். இதனால் பிற்காலத்தில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது. சொத்தை மூன்றாம் நபர்களுக்கு உரிமை மாற்றம் செய்யும் போதுதான் கிரயப் பத்திரம் பதிவு செய்து தரவேண்டும்.''  

தங்கைக்கு நிலம்... பாகப் பிரிவினைப் பத்திரம் போதும்!

தற்போது தனி வீடுடன் உள்ள ஒரு இடத்தை வாங்க உத்தேசித்துள்ளேன். அந்த இடத்தில் உள்ள பழைய வீட்டை எப்படி மதிப்பிடுவது?  

- சுசீலா நடராஜன், திருச்சி.

''எத்தனை ஆண்டுகள் பழைமை யானது, அந்த வீடு பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதைப் பொறுத்து அந்த வீடு மதிப்பிடப்பட வேண்டும். குறிப்பாக, அந்த வீட்டின் ஜன்னல், கதவுகள் எந்த மரத்தைக் கொண்டு செய்யப்பட்டுள்ளன; அதன் பராமரிப்பு, தரை டைல்ஸ் அல்லது மார்பிள்ஸ், மின் இணைப்புகள், குடிநீர் இணைப்பு போன்றவற்றை கவனிக்க வேண்டும்.

தங்கைக்கு நிலம்... பாகப் பிரிவினைப் பத்திரம் போதும்!

ஐம்பது வருடங்களுக்கு மேற்பட்ட கட்டடம் அல்லது இடிக்கக்கூடிய நிலையில் உள்ள கட்டடம் என்றால் அவற்றிலிருந்து பயன்படுத்தும் நிலையில் உள்ள பொருட்கள், இடிப்பதற்கு ஆகும் செலவு இவற்றையும் கவனிக்க வேண்டும். அப்படியே பயன்படுத்தும் நிலையில் உள்ள கட்டடம் என்றால், கட்டட மதிப்பு தவிர நிலத்தின் சந்தை மதிப்பில் பத்து சதவிகிதம் குறைத்துக்கொள்வது நடைமுறையில் உள்ளது. அல்லது நிலத்தின் குறைந்தபட்ச சந்தை மதிப்பைக் கணக்கிட்டு வாங்க வேண்டும். இந்த அடிப்படையில் வாங்குவதற்கு முடிவெடுத்தாலும் ஒரு சொத்து மதிப்பீட்டாளர் அல்லது இன்ஜினீயர் தரும் மதிப்பின் அடிப்படையில் வாங்கவும்''.

ஒரு இடத்தை வாங்கியபின் தரப்பட்ட வாக்குறுதிகளை, அதனை விற்றவர் நிறைவேற்ற வில்லை என்றால், அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?

- குமரகுரு, செங்கிப்பட்டி.

''இடமோ, வீடோ வாங்க முயற்சிக்கும்போது முதல் நிலையிலேயே என்னென்ன வசதிகள் உங்களுக்குத் தரப்படும் என்பதை ஒப்பந்தத்தின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்மொழியாகத் தரப்படும் வாக்குறுதிகளை நம்பக்கூடாது. ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள ஷரத்துகள் மீறப்படும்பட்சத்தில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்''.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு