Published:Updated:

40 ரூபாயில் நல்ல சிகிச்சை !

மதுரையில் ஒரு மாடல் மருத்துவமனைபானுமதி அருணாசலம்படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

பிரீமியம் ஸ்டோரி
##~##

சுய உதவிக் குழு என்றாலே சிறிய முதலீட்டில் சின்னச் சின்ன தொழில்களை செய்வார்கள் என்பதை மாற்றி, எங்களால் ஒரு மருத்துவமனையையே வெற்றிகரமாக நடத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் மதுரையில் உள்ள களஞ்சியம் சுய உதவிக் குழுவினைச் சேர்ந்த பெண்கள். மதுரை பாத்திமா கல்லூரிக்கு எதிரில் சுகம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முழுக்க முழுக்க சுயஉதவிக் குழுவினைச் சேர்ந்த பெண்களால் நடத்தப்படுவது ஆச்சரியமான விஷயம்.

எப்படி உருவானது இந்த மருத்துவமனை? என அதன் சிஇஓ ராஜபாண்டியனிடம் கேட்டோம். ''தானம் அறக்கட்டளை 1989-ம் வருடம் களஞ்சியம் சுய உதவிக் குழுவை தொடங்கியது. இதன் மூலம் மதுரையைச் சுற்றியுள்ள கிராமத்து பெண்களுக்கு கடன் வழங்கி, சுய தொழில்களை தொடங்க ஊக்குவித்தது. இந்த பெண்களுக்கு சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துச் சொன்னோம். ஆனாலும், அவர்களால் சேமிக்க முடியவில்லை. காரணம், அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி மருத்துவச் செலவிற்கு போய்க்கொண்டிருந்தது.  

இந்த பெண்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ உதவி அளித்தால், அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நினைத்து நேரடியாக மருத்துவ சிகிச்சை தருகிற மாதிரி ஒரு ஏற்பாட்டை செய்தோம். வேன் மூலம் எக்ஸ்ரே, ஸ்கேன், லேப் வசதி சகிதம் கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று சிகிச்சை அளித்தோம்.  

40 ரூபாயில் நல்ல சிகிச்சை !

இந்த மருத்துவ சேவை இரண்டு ஆண்டுகளே நடந்தது. காரணம், எங்களோடு இணைந்து பணியாற்றிய நிறுவனங்கள் எங்களுக்கு அளித்து வந்த மருத்துவ உதவியை நிறுத்தியதே. ஆனால், மக்களோ மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து தரவேண்டும் என்றார்கள். இதற்குத் தேவையான பணத்துக்கு எங்கே போவது என்று நாங்கள் யோசித்தபோது, சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களே நிதி திரட்டி தருவதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட 20,000 களஞ்சியம் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் போட்டு 20 லட்சம் ரூபாய் திரட்டித் தந்தனர்.

இந்த பணத்தைக்கொண்டு 2000-ம் ஆண்டில் தேனி மாவட்டம் கடமலைகுண்டு கிராமத்தில் முதல் கிளினிக்கை தொடங்கினோம். இந்த கிளினிக் நல்லபடியாக நடக்கவே, இதே மாதிரி ஒரு மருத்துவமனை எங்களுக்கும் வேண்டும் என்று மதுரை களஞ்சியம் குழுவைச் சேர்ந்த பெண்கள் கேட்க, இந்த சுகம் மருத்துவமனையைத் தொடங்கினோம்'' என்றார் ராஜபாண்டியன்.  

இந்த மருத்துவ மனையில் தினமும் மூன்று மருத்துவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கின்றனர். சிறப்பு மருத்துவர்கள் குறிப்பிட்ட நாட்களில் வந்து சிகிச்சை அளிக்கின்றனர். இந்த மருத்துவமனையில் கன்சல்டிங் கட்டணம் வெறும் 40 ரூபாய் மட்டுமே என்பது இன்னொரு ஆச்சரியம்.

40 ரூபாயில் நல்ல சிகிச்சை !

பைபாஸ் சர்ஜரி போன்ற பெரிய அறுவை சிகிச்சைக்காக இங்கு யாராவது வந்தால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள். அப்போலோ மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதால் அங்கும் அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளை அனுப்பி வைக்கிறார்கள். இப்படி அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு 30 சதவிகிதம் வரை கட்டணம் குறைவாகவே இருக்குமாம்.

இந்த மருத்துவமனையின் தலைவர் மீனா. சுய உதவிக் குழு மூலம் காய்கறி நடத்திவரும் இவர், இந்த மருத்துவமனையை எப்படி நடத்தி வருகிறார் என்று கேட்டோம். ''என் கணவர் ஒரு கொத்தனார். எனக்கு பெரிசா படிப்பறிவு இல்லேன்னாலும், சுய உதவிக் குழுவில் சேர்ந்தபிறகு கடன் வாங்கி, காய்கறி கடை நடத்தி, இன்னைக்கு நல்ல நிலைமையில இருக்கேன். நாங்க ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதி போர்டு மீட்டிங் நடத்துவோம். இதில் மருத்துவமனை விரிவாக்கம், மருத்துவக் கருவிகள்

40 ரூபாயில் நல்ல சிகிச்சை !

வாங்குவது உள்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வோம். இதில்லாம வருடா வருடம் மருத்துவமனையின் மொத்த வரவு, செலவு கணக்கையும் சமர்ப்பிப்போம். மருத்துவமனையின் செலவினங்கள் அனைத்தும் தகுந்த ஆடிட்டிங் செய்து அரசுக்கு ரிட்டர்னும் தாக்கல் செய்துவருகிறோம்'' என்றார்.

இங்கு மருத்துவச் சிகிச்சைக்கு வரும் குழு பெண்களுக்கு யுனிவர்சல் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலம் மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் 450 ரூபாய் பிரீமியம் கட்டினால், 30,000 ரூபாய் வரை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சிகிச்சை பெறலாம். இதில் 300 ரூபாய் மத்திய அரசே மானியமாகத் தந்துவிடுகிறது. இன்னொரு திட்டத்தில், 350 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் மொத்த மருத்துவச் செலவில் கால் பங்கு மட்டும் செலுத்தினால் போதும் என்பதால் மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மருத்துவமனையைத் தேடி வருகிறார்கள்.  

முன்னாள் பிரதமர் வாஜ்பாயே காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சின்னப்பிள்ளை இந்த மருத்துவமனையின் உறுப்பினர். அவருடன் பேசினோம். ''இங்கே வருகிற நோயாளிங்களுக்கு  என்னவெல்லாம் வசதி செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சு செய்றோம். இங்க இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கிறது. இங்கு வேலை பார்க்கும் நர்ஸுகள், லேப்-ல் வேலை பார்ப்பவர்கள்கூட எங்க சுய உதவிக் குழு பெண்களின் பிள்ளைகள்தான். நாங்கள் குறைந்த விலையில் கட்டணம் வாங்குவதால் எங்களை சுற்றி இருக்கும் தனியார் மருத்துவமனைகளும் கட்டணத்தைக் குறைத்திருக்கிறார்கள். இதுவும் எங்களுக்குக் கிடைத்த பெரிய வெற்றி'' என்றார் சின்னப்பிள்ளை.

மருத்துவமனையைச் சுற்றிப் பார்த்தோம். சிறந்த தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் அங்கே இருந்தது கண்டு ஆச்சரியப்பட்டோம்.  இந்த மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் பவுன்ராஜிடம் பேசினோம்.

''நான் இங்கே அஞ்சு வருஷமா மருத்துவரா இருக்கேன். தினமும் 80 முதல் 100 நோயாளிகள் சிகிச்சைக்கு வருவாங்க. குடல்வால் நோய், மகப்பேறு சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்கிறோம். நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற 23 பெட் வரை உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக செயல்படுறதுனால இங்க வரும் நோயாளிகளுக்கு திருப்தியான சிகிச்சை தர முடியுது'' என்றார்.

40 ரூபாயில் நல்ல சிகிச்சை !

இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சிலரைச் சந்தித்தோம். ''என் மகனுக்கு காய்ச்சல்ன்னு வந்தோம்; 150 ரூபாயில குணமாக்கிட்டாங்க'' என்றார் சுந்தரராஜன்பட்டியைச் சேர்ந்த ஷண்முகபிரியா. சோழவந்தானை சேர்ந்த தேவிகா, ''என் பையனுக்கு குடல்வால் அறுவை சிகிச்சையை கம்மியான செலவுல நல்லபடியா இங்கதான் செய்தோம். தவிர, நாங்க இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கிறதால எங்களோட அறுவை சிகிச்சைக்கான செலவுகளை அவங்களே வாங்கிக் குடுத்திட்டாங்க'' என்றார்.

இந்த மருத்துவமனைக்கு வெளியே ஒரு கேன்டினும் இருக்கிறது. குறைந்த விலையில் சுடச்சுட டிபன் கிடைக்கிறது. இதுவும் சுய உதவிக் குழு பெண்களால் நடத்தப்படுகிறது.

மதுரைக்கு அடுத்து தற்போது சேலத்திலும் ஒரு மருத்துவமனை தொடங்கி இருக்கிறார்கள்

களஞ்சியம் அமைப்பைச் சேர்ந்த பெண்கள். அடுத்து திருப்பதி, விசாகப்பட்டினத்திலும் தமிழகத்தின் பிற நகரங்களிலும் மருத்துவமனை தொடங்கப் போகிறார்களாம். மற்ற  சுய உதவிக் குழுக்களும் இதுபோல செய்யலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு