Published:Updated:

முதலீட்டின் எட்டு ரகசியங்கள் !

முதலீட்டின் எட்டு ரகசியங்கள் !

பிரீமியம் ஸ்டோரி
##~##

வெற்றிகரமான முதலீடு குறித்து சில முக்கிய ரகசியங்கள் உண்டு. இந்த ரகசியங்கள் பின்பற்றுவதற்கு எளிமையானவை. ஆனால், பலராலும் பின்பற்றப்படாதவை. நீங்கள் அந்த ரகசியத்தைப் பின்பற்றினால் முதலீட்டில் நிச்சயம் ஜெயிப்பீர்கள். இதோ அந்த அதிமுக்கிய ரகசியங்கள்:

ஒரு முதலீட்டில் இருந்து எப்போது வெளியேறுவது?

மகாபாரதத்தில் அபிமன்யுவின் கதை நம் எல்லோருக்கும் தெரியும். சக்கர வியூகத்தை அமைத்துக்கொண்டு எதிரிகளை துவம்சம் செய்தவன் அபிமன்யு. ஆனால், அப்பேற்பட்ட வீரனுக்கு அந்த சக்கர வியூகத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் போனதுதான் விதி. முதலீட்டாளர்களாகிய நாமும் சரியான நேரத்தில் முதலீடு செய்கிறோம். ஆனால், எப்போது வெளியே வருவது என்று தெரியாததால் இழப்பைச் சந்திக்கிறோம். ஒரு முதலீட்டிலிருந்து எப்போது வெளியே வருவது?

நம் தேவையும் எதிர்பார்ப்பும் நிறைவேறிவிட்டால், அந்த முதலீட்டிலிருந்து அடுத்த நிமிடமே வெளியே வந்துவிட வேண்டியதுதான். உதாரணமாக, உங்கள் மகளின் பட்டப்பிடிப்புக்காக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள்.

16 அல்லது 17 வயதில் உங்கள் மகள் கல்லூரியில் நுழைந்தவுடன் அந்த ஃபண்டிலிருந்து வெளியே வந்துவிட வேண்டும். இதுபோல, 15% வருமானத்தை எதிர்பார்க்கிறீர்கள் எனில், அது கிடைத்தவுடன், அந்த முதலீட்டிலிருந்து வெளியேறி, லாபமாகக் கிடைத்தப் பணத்தைப் பாதுகாப்பான முதலீட்டில் போட்டு வைத்தால் இழப்பு என்கிற வார்த்தையை நீங்கள் உச்சரிக்கவேண்டிய அவசியமே இருக்காது!

முதலீட்டின் எட்டு ரகசியங்கள் !

எமர்ஜென்ஸி ஃபண்ட் என்ற ஜோக்கர் கைவசம் உள்ளதா?

சீட்டாட்டத்தில், கிங்க், குயின், ஜாக் இருந்தால் மட்டும் போதுமா? ஜோக்கர் இல்லாமல் எப்படி ஜெயிக்க முடியும்? முதலீட்டு உலகிலும் ஜோக்கர் என்கிற எமர்ஜென்ஸி ஃபண்ட் இல்லாமல் ஜெயிக்க முடியாது.  எமர்ஜென்ஸி ஃபண்டை நாம் தயாராக வைத்துக்கொள்ளாமல் எந்த ஒரு முதலீடும் செய்யக்கூடாது. ஒரு குடும்பத்தின் மாதச் செலவு பத்தாயிரம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். 60,000 ரூபாய் என்கிற அளவிலாவது எமர்ஜென்ஸி ஃபண்ட் இருப்பது அவசியம். இந்த எமர்ஜென்ஸி ஃபண்ட் நம்மிடம் தயாராக இருக்கும் நிலையில், எந்த முதலீட்டிலும் துணிந்து இறங்கலாம். ஒருவேளை நாம் நெருக்கடியில் சிக்கினாலும் எமர்ஜென்ஸி ஃபண்டை வைத்து சமாளிக்கலாம்.  இல்லாவிட்டால் கடன் வாங்கி, கடைசியில் நாம் காணாமலேயே போய்விடுவோம்.

தங்கம், பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் - எது பெஸ்ட்?  

இது சரியான கேள்வி அல்ல. நமக்கிருக்கும் கண், காது, கை, கால் - இவற்றில் எது பெஸ்ட் என்று கேட்டால், எதைச் சொல்ல முடியும்? இவை எல்லாமே இருப்பவன்தான் முழுமையான மனிதன். இதுபோல்தான் நம் முதலீட்டில் தங்கம், எஃப்.டி., ஈக்விட்டி மற்றும் ரியல் எஸ்டேட் என எல்லா முதலீடுகளுமே சரியான அளவில் இருப்பது அவசியம். இதைத்தான் 'அசெட் அலகேஷன்’ என்று சொல்கிறோம். தங்கத்தில் மட்டும் முதலீடு அல்லது பங்கில் அதிக முதலீடு என்பது கண் மட்டும்தான் முக்கியம் அல்லது காது மட்டும்தான் முக்கியம் என்று சொல்கிற மாதிரி. இனியாவது தங்கமா, பங்கா, ரியல் எஸ்டேட்டா என்கிற கேள்வியே வேண்டாம்!

கடன் வாங்கி முதலீடு செய்வது கூடாது!

பெரும்பாலான வீடுகளில் இந்த நடைமுறை இருக்கிறது? பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும் என்று யாரோ சொல்ல, கடன் வாங்கி முதலீடு செய்துவிட்டு, பிறகு நஷ்டம் வந்தவுடன் கடனைக் கட்ட முடியாமல் திண்டாடுவார்கள். இதற்கு பதில், உபரியாக கிடைக்கும் பணத்தை முதலீடு செய்தால், ஒருவேளை இழப்பு வந்தாலும் அதனால் தினப்படி வாழ்க்கைப் பாதிப்படையாது. எனவே, கடன் வாங்கி முதலீடு செய்யவே வேண்டாம்!

தவறுகளிலிருந்து பாடம் கற்போம்!

முதலீட்டின் எட்டு ரகசியங்கள் !

தவறு செய்யாத மனிதர்கள் இருக்க முடியாது. தவறே செய்யாமல் இருக்க வேண்டும் எனில், முதலீடே செய்யாமல் இருக்க வேண்டும். ஏதாவது செய்து அதில் தவறுவதைவிட, எதுவும் செய்யாததால் தவறே செய்யாமல் இருப்பது மிகப் பெரிய தவறு. அசோக மன்னர் கலிங்கத்துப் போரில் பலரையும் கொன்றார். பிறகு, இவ்வளவு பெரிய தவறை எப்படி செய்தேன்? என்று தனக்குத்தானே கேட்டுக்கொள்ள, அவருக்கு ஞானம் கிடைத்தது. தவறு செய்வது தவறல்ல. அதிலிருந்து எந்த பாடத்தையும் கற்காமல் இருப்பதுதான் தவறு. எந்த முதலீடாக இருந்தாலும் தவறு செய்துவிடுவோமோ என்கிற அச்சம் வேண்டாம். அந்தத் தவறை மீண்டும் செய்யாதபடி அதிலிருந்து பாடத்தைக் கற்றாலே போதும்.  

இன்ஷூரன்ஸ் வேறு; இன்வெஸ்ட்மென்ட் வேறு!

இன்ஷூரன்ஸையும் இன்வெஸ்ட் மென்டையும் நம்மவர்கள் பலநேரங்களில் குழப்பிக் கொள்கிறார்கள். ஒருவர் இறந்துபோனால், அவரை நம்பியிருக்கும் குடும்பத்தாருக்கு ஃபைனான்ஷியலாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை மனதில்கொண்டு எடுப்பது இன்ஷூரன்ஸ். இது குறைந்த பிரீமியம் மற்றும் நிறைய காப்பீடு என்று உள்ள டேர்ம் இன்ஷூரன்ஸாக இருக்க வேண்டும். இதில் ரிட்டர்ன் எதிர்பார்க்கக் கூடாது. இதுபோக, மீதமுள்ள பணத்தைத்தான் பாதுகாப்பான முதலீடுகளோ, இல்லை கொஞ்சம் ரிஸ்க் உள்ள முதலீடுகளிலோ முதலீடு செய்யலாம்.

ரகசியம் தவிருங்கள்!

உங்கள் முதலீடுகள் பற்றி எல்லோரிடமும் அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. ஆனால் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. ஒரு குடும்பஸ்தராயிருப்பின், மனைவியிடமோ அல்லது விவரமறிந்த மகன்/மகளிடமோ பகிர்ந்துகொள்ளுங்கள். திருமணமாகாதவர் எனில், நம்பிக்கைக்குப் பாத்திரமானவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அப்போதுதான் நமது முதலீடு உரியவர்களுக்குச் சென்று நன்மை தரும்.  

பேராசை, பெரு நஷ்டம்!

வாரன் பஃபெட் எவ்வளவு புத்திசாலியான முதலீட்டாளர்! ஆனால், அவரே 20 சதவிகிதம் ஆண்டு கூட்டு வளர்ச்சியைத்தான் எதிர்பார்ப்பார் என்பது வியப்பாக இல்லை?

15 முதல் 20% வரை கிடைக்கும் லாபம்தான் நிரந்தரம் மற்றும் சாத்தியமும்கூட. இதைவிட்டுவிட்டு, ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 6,000 ரூபாய் வீதம் மூன்று வருஷத்திற்குத் தருவார்கள் என்கிற கதையைக்கேட்டு ஏமாறுகிறவர்கள் ஏராளம்!

சாத்தியமான லாபத்தையே எதிர்பார்ப்போம். எல்லாவகையான முதலீட்டிலும் ஜெயிப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு