Published:Updated:

மருத்துவ முகாமும் மரம் நடுவதும்தான் சி.எஸ்.ஆரா?

பானுமதி அருணாசலம்

பிரீமியம் ஸ்டோரி
 ##~##

மகிழ்ச்சியிலே மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர்களுக்குக் கொடுப்பதுதான். நாம் சம்பாதிக்கும் பணத்தில் நம் குடும்பச் செலவுகள், தேவைகள்போக சிறிதளவாவது சேவை மனப்பான்மையுடன், இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவுவது மிகப் பெரிய விஷயம். தனிப்பட்ட மனிதர்கள் தங்களால் முடிந்த சேவைகளை ஆங்காங்கே செய்யும்போது, பெரிய பிஸினஸ் நிறுவனங்கள் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து சொல்லி வருகிறது.

பிஸினஸ் நிறுவனங்கள் தாங்கள் சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை மீண்டும் அந்த சமூகத்திற்கே திரும்பத் தருவதுதான் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி (சுருக்கமாக, சி.எஸ்.ஆர்.) என்று பொதுவாக கருதப்படுகிறது.

மருத்துவ முகாமும் மரம் நடுவதும்தான் சி.எஸ்.ஆரா?

இந்தியா இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நிலக்கரி, சுண்ணாம்பு, மணல், காடு, மலை, நீர், உலோகங்கள் என எண்ணற்ற வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த வளங்களை மத்திய அரசும், மாநில அரசும் அரசுடைமை ஆக்கிவிட்டது. இதனால், தனிப்பட்ட நபர்களால் இந்த வளங்களைச் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், அரசாங்கமோ இந்த வளங்களை எல்லாம் தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து தந்துவிட்டன. தனியார் நிறுவனங்களோ இந்த வளங்களை மீண்டும் மக்களுக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றன. இப்படி மக்களின் சொத்தை எடுத்துக்கொண்டு, அதில் நல்ல லாபம் பார்த்து, பிறகு மக்களுக்கு வேலை கொடுக்கிறேன், சேவை செய்கிறேன் என்று சொன்னால் அது சி.எஸ்.ஆர். ஆகாது.

நம் நாட்டில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம் ஏழைகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இந்த நிலையில், தனக்கு லாபத்தை அள்ளித்தந்த இந்த சமூகத்திற்கு பிஸினஸ் நிறுவனங்கள் பெரிதாக எதையும் திரும்பத் தந்துவிடுவதில்லை.

மருத்துவ முகாமும் மரம் நடுவதும்தான் சி.எஸ்.ஆரா?

சி.எஸ்.ஆர். என்கிற பெயரில் ஏதாவது செய்தாலும் அவற்றை தனது இமேஜை உயர்த்திக்கொள்ளவும் புகழ் தேடவும் பல நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.

முன்பு தமிழ்நாட்டில் மதுபான விற்பனை தனியாரிடம் இருந்தது. பிறகு, அரசாங்கமே அதை எடுத்துக்கொண்டது. இதன் மூலம் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. முன்பு தமிழக அரசே மணலை விற்றது. ஆனால், என்ன காரணமோ பிறகு மணல் விற்பனையை அரசாங்கம் கைவிட்டுவிட்டது. அரசாங்கமே மீண்டும் மணல் விற்பனை செய்தால் ஆண்டுக்கு சுமார் 70,000 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கும். இந்த வருமானம் இப்போது தனிப்பட்ட சில நபர்களுக்குத்தான் போய் சேருகிறது. இவர்கள் யாரும் தங்களுக்குக் கிடைத்த லாபத்தை மக்களுக்குத் தரப்போவதில்லை.  

மருத்துவ முகாமும் மரம் நடுவதும்தான் சி.எஸ்.ஆரா?

இதுபோல, மத்திய அரசின் கீழ் வரும் வளங்களை அரசே விற்பனை செய்தால் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு கஜானாவிற்கு வரும். இந்தியாவின் மற்ற மாநில அரசுகளும் இதுபோல செய்யும்போது பல லட்சம் கோடி ரூபாய் ஆண்டுக்கு வருமானமாகக் கிடைக்கும். இப்படி அரசுக்கு வருமானம் கிடைக்கும்போது ஒவ்வொரு தனிநபருக்கும் ஆண்டுக்கு கணிசமான தொகை கிடைக்கும். இப்படி இருக்கும்போது நம் நாட்டை ஏழை நாடு என்று எப்படி சொல்ல முடியும்? நம் மக்களை ஏழைகளாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஒரு சிலரிடம் பணம் எக்கச்சக்கமாக சேர, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. இதற்கு அரசு மட்டும் திட்டம் போட்டால் போதாது. நிறுவனங்கள் தாங்கள் லாபம் சம்பாதித்து பிறகு அந்த லாபத்திலிருந்து மக்களுக்கு செய்யும் சேவையை தான் சி.எஸ்.ஆர். என நினைக்கிறார்கள். ஆனால், சம்பாதிக்கும் போதே சமூகப் பொறுப்புடன் நடப்பதுதான் என்னைப் பொறுத்தவரை சி.எஸ்.ஆர். ஆகும்.

நிறைய வேலைவாய்ப்பை உருவாக்குகிறோம் என்று சொல்லி பல நிறுவனங்கள் அரசிடமிருந்து வரிச் சலுகை பெறுகின்றன. ஆரம்பத்தில் புதிய நிறுவனங்களை தொடங்கும்போது வேலை வாய்ப்பை உருவாக்கினார்கள். ஆனால், இப்போது லாபத்தை அப்படியே வங்கிக் கணக்கில் அல்லவா முடக்கி வைத்திருக்கிறார்கள். வரியும் கட்டாமல், வேலைவாய்ப்பையும் உருவாக்காமல் கேட்பாரற்று கிடக்கும் ரூபாய் பல நூறு கோடி. வங்கியில் முடங்கிக் கிடப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. இந்த நிறுவனங்கள் சி.எஸ்.ஆர். செய்கிறேன் என சொன்னால் அதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

வரி கட்டாமல் சில நிறுவனங்கள் பெரும் லாபம் பார்க்கிறது என்றால், இன்னும் சில நிறுவனங்கள் அதிக விலைக்குப் பொருட்களை விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றன. தான் தயாரிக்கும் பொருளை அதிக விலைக்கு விற்பதற்காக இறக்குமதி செய்வதைத் தவிர்த்து, அந்த பொருளுக்குச் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகின்றன. இப்படி சம்பாதித்தப் பணத்தைக்கொண்டு சி.எஸ்.ஆர். செய்வதைவிட கொள்ளை அடிக்காமல் இருக்கலாம். மக்களுக்குச் சேரவேண்டிய வளங்களைச் சுரண்டி அதன் மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்து அந்த பணத்தில் பள்ளிக்கூடம் கட்டித் தருகிறேன், மரம் நடுகிறேன், மருத்துவமனை கட்டித் தருகிறேன் என சொல்வது சரியான சி.எஸ்.ஆர். ஆகாது.

மருத்துவ முகாமும் மரம் நடுவதும்தான் சி.எஸ்.ஆரா?

மேலைநாடுகளைப் பொறுத்தவரை பில்கேட்ஸ், வாரன் பஃபெட் போன்றவர்கள் தங்களது சொத்திலிருந்து பணத்தை

சி.எஸ்.ஆர். செய்கிறார்கள். ஆனால், அவர்கள் நாட்டு கலாசாரம் வேறு. அவர்கள் தங்கள் வாரிசுகளுக்குத் தருவதைவிட மக்களுக்கே திரும்பத் தர நினைக்கிறார்கள். ஆனால், நாமோ 'மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்கிறோம். ஆனால், மக்களின் பணத்தையே கொள்ளை அடித்து அந்த மகேசனுக்கே துரோகம் செய்கிறோம். இல்லாமையை உண்டாக்கி மக்களை கையேந்த வைத்தபிறகு அவர்களுக்குச் செய்யும் எந்த உதவியும் சேவையாகாது. என்னைப் பொறுத்தவரை, இல்லாமையை முழுமையாக இல்லாமல் செய்வதுதான் உண்மையான, சரியான சி.எஸ்.ஆர். சட்டப்படி சரியாகவும், நியாயப்படி தவறாகவும் பிஸினஸ் செய்யாமல் இருந்து, சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்டால் நம் நாட்டில் ஒரே ஆண்டில் வறுமை ஒழிந்துவிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு