Published:Updated:

Welcome to possible

மைண்ட்ட்ரீ: எல்லாமே வித்தியாசம்தான் ! வா.கார்த்திகேயன், படங்கள். ந.வசந்தகுமார்.

பிரீமியம் ஸ்டோரி
##~##

'பெங்களூருவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மைசூர் நெடுஞ்சாலையில் கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடத்தில் ரம்மியமாக அமைந்திருக்கிறது மைண்ட்ட்ரீ அலுவலகம். விப்ரோவில் வேலை பார்த்த சில இன்ஜினீயர்கள் கொள்கைப்பிடிப்போடு வெளியே வந்து, வித்தியாசமான ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியில்தான் மைண்ட்ட்ரீயை ஆரம்பித்தார்கள்.

மைண்ட்ட்ரீ நிறுவனத்தில் அப்படி என்ன வித்தியாசம் என்பதைப் பார்க்க, அங்கு போனோம். அங்கே நமக்காக காத்துக்கொண்டிருந்தார் மைண்ட்ட்ரீயின் சீஃப் டெக்னாலஜி ஆபீஸரான ஜானகிராமன். ஜானி என சுருக்கமாக அழைக்கப்படும் இவர் கும்பகோணத்துக்காரர். எப்படி ஆரம்பித்தீர்கள் இந்நிறுவனத்தை? என அவரிடம் கேட்டோம்.

''விப்ரோவில் வேலை பார்த்த நாங்கள் ஒன்று சேர்ந்ததே ஒரு பெரிய கதை. அப்போது விப்ரோ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருந்த அசோக் சூட்டா தனியாக நிறுவனத்தை ஆரம்பிக்க வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களுடன் பேசி வந்தார். அதேசமயம், சுப்ரதோ பக்ஷியும் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடம் பேசி வந்தார். இரண்டுபேரும் பேசிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமும் ஒன்றுதான். அந்த வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம், 'நீங்கள் இருவரும் ஏன் ஒன்றாகச் சேர்ந்து புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கக் கூடாது’ என்று கேட்க, நாங்கள் பத்துபேர் ஒன்றிணைந்தோம்.  

Welcome to possible

புதிய நிறுவனத்தை ஆரம்பிக்கும்போதே எங்களது திட்டங்கள் என்ன, எங்கள் பிஸினஸ் பிளான் என்ன, யார் யார் என்ன வேலையைச் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்துகொண்டு ஆரம்பித்தோம். எங்களுக்குள் போட்டி போடாமல் எங்கள் அறிவையும், திறமையையும் எப்படி இந்நிறுவனத்துக்குப் பயன்படுத்துவது என்பது பற்றியே யோசித்தோம்.

நிறுவனத்தைத் தொடங்க முடிவு செய்தவுடன், அதற்கு பெயர் வைக்க அமெரிக்காவில் இருக்கும் 'நேம்இட்’ (nameit) என்ற நிறுவனத்திடம் பொருத்த மான பெயரை தேர்வு செய்து தரும்படி கேட்டோம். அவர்கள் பரிந்துரைத்த எழுநூற்றுக்கும் மேற்பட்ட பெயர்களிலிருந்து உருவானதுதான் மைண்ட்ட்ரீ.

Welcome to possible

அந்த பெயரில் இணையதளத்துக்கான வேலைகளை ஆரம்பித்த போதுதான் மைண்ட்ட்ரீ என்கிற பெயரில் ஏற்கெனவே ஒரு நிறுவனம் கனடாவில் இருந்ததைத் தெரிந்து கொண்டோம். அதனால் மைண்ட்ட்ரீ கன்சல்டிங் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தினோம். பிறகு அந்த நிறுவனத்துடன் பேசி, அந்த பெயரை வாங்கினோம்'' - மைண்ட்ட்ரீ பிறந்த கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டே வந்தார் ஜானி.

இன்றைய தேதியில், இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குப் பிறகு புரபஷனல்களால் ஆரம்பித்து நடத்தப்பட்டுவரும் ஐ.டி. நிறுவனம் மைண்ட்ட்ரீதான். 1999-களில் முப்பதுக்கும் குறைவான நபர்களோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்றைக்கு 11,000 பணியாளர்களுடன் வளர்ந்து நிற்கிறது.

Welcome to possible

மேலும் தொடர்ந்தார் ஜானி. ''நிறுவனத்தைத் தொடங்கும்  முன்பே அது பலவகையிலும் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். பிஸினஸ் அதிகரித்து, வருமானம் பெருகி, லாபம் அதிகமாக, ஐ.பி.ஓ. வர முடிவு செய்தபோது, 4,000 பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்களது நிறுவனத்தின் 16.67 சதவிகித பங்குகளை ஸ்டாக் ஆப்ஷனாகத் தந்தோம்.

எங்கள் நிறுவனத்தின் லோகோவை (ஆரம்பத்தில்) ஏதோ ஒரு ஆர்ட்டிஸ்ட்டிடம் போட்டுவாங்கி இருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படி செய்யவில்லை. செரிபரல் பால்சி நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு  மாணவன் வரைந்த படத்தையே எங்கள் லோகோவாகத் தேர்வு செய்தோம். அந்த மாணவனுக்கும், அவன் படித்த பள்ளிக்கும்கூட எங்கள் நிறுவனத்தின் பங்குகளைத் தந்தோம்.  

எந்த நிறுவனமும் சின்ன இடத்தில் பலரையும் வைத்து வேலை பார்க்க விரும்பும். ஆனால், நாங்கள் அப்படி செய்யவில்லை. ஆரம்பத்தில் முப்பது பணியாளர்கள் மட்டுமே இருந்தபோதும், இருநூறுபேர் வசதியாக உட்கார்ந்து வேலை செய்வதற்கு ஏற்ற இடத்தை வாடகைக்கு எடுத்தோம். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் நாங்கள் வித்தியாசமாக திட்டமிடுவோம்'' என்று சொல்லும் ஜானி, மைண்ட்ட்ரீயில் இருக்கும் இரண்டு வித்தியாசங்களைக் காட்டினார்.

கிராமத்தில் வேலை எல்லாம்  செய்து முடித்தபிறகு திண்ணையில் ஹாயாக உட்கார்ந்து பேசுவார்கள். அந்த மாதிரி மைண்ட்ட்ரீயில் ஊழியர்கள் ஹாயாக உட்கார்ந்து பேச திண்ணை வடிவில் ஒரு அறையை அமைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் குழந்தைப் பெற்ற பெண்கள் அந்த குழந்தையை அலுவலகத்துக்கு எடுத்துவந்து படுக்கவைப்பதற்கு ஒரு தனி அறையும் இருக்கிறது. குழந்தையைக் கவனித்துக் கொள்ள பணியாளர்கள் தங்கள் தாயை அழைத்து வரவும் அனுமதி உண்டு.

Welcome to possible

''எங்கள் நிறுவனத்தின் பிஸினஸ்களையும் வித்தியாசமாக அமைத்துக் கொண்டோம். பொதுவாக ஐ.டி. நிறுவனங்கள் பி.எஃப்.எஸ்.ஐ. (Banking, Financial Services and Insurance) பிரிவில்தான் அதிக கவனம் செலுத்தும். ஆனால், நாங்களோ அதில் அதிக கவனம் செலுத்தவேண்டாம் என ஆரம்பத்திலேயே முடிவெடுத்தோம். இப்போதைக்கு இப்பிரிவில் எங்கள் வருமானம் 15 சதவிகிதம்தான்.

அதேபோல, நாங்கள் செய்யும் தவறுகளை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள தயங்கியதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் செல்போன் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை வாங்கினோம். அதன் மூலம் செல்போனையும் தயாரித்தோம். அப்போதுதான் அதிலிருக்கும் பிரச்னை எங்களுக்குப் புரிந்தது. செல்போனில் முக்கியமான நிறுவனங்களே 80 சதவிகித  மார்க்கெட்டை வைத்திருக்கின்றன. மீதமுள்ள 20 சதவிகித மார்க்கெட்டுக்கு பல நிறுவனங் களுடனும் போட்டி போடவேண்டும். தவிர, விளம்பரம், விற்பனைக்கு பிறகான சர்வீஸ் என பிரச்னைகள். இதில் போட்டி போட்டு ஜெயிக்க முடியும் என்று நாங்கள் நினைக்காததால், அதை அப்படியே விட்டுவிட்டோம். இதனால் எங்களுக்கு சில கோடி ரூபாய் நஷ்டம்தான். சமைக்கத்  தெரிவதால் மட்டுமே ஓட்டலை தொடங்கக் கூடாது என்ற பாடத்தைத் தான் நாங்கள் கற்றோம்'' என்று வியக்கிறார் ஜானி.  

Welcome to possible

தங்கள் எதிர்காலத்தையும் வித்தியாசமாகவே யோசித்து வைத்திருக்கிறார் ஜானி. ''இன்னும் சில வருடங்களுக்குள் நாங்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறினாலும் இந்நிறுவனம் சிறப்பாக நடக்கும். பெண்ணை கல்யாணம் பண்ணித் தந்தபிறகு மறந்துவிடுகிறோம். ஆனால், மகன் விஷயத்தில் நாம் அப்படி செய்வதில்லை. அந்த பொசஸிவ்னஸ்தான் பல பிரச்னைகளுக்குக் காரணம். ஆனால், நாங்கள் அப்படி இல்லை'' என்று சிரிக்கிறார் ஜானி.  

மைண்ட்ட்ரீ என்றாலே வித்தியாசம்தானே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு