Published:Updated:

எஃப்.டி.ஐ.ங்கிறது சில்லறை விஷயமில்லே!

எஃப்.டி.ஐ.ங்கிறது சில்லறை விஷயமில்லே!

எஃப்.டி.ஐ.ங்கிறது சில்லறை விஷயமில்லே!

எஃப்.டி.ஐ.ங்கிறது சில்லறை விஷயமில்லே!

Published:Updated:

'சில்லறை வர்த்தகத்தில் எஃப்.டி.ஐ.’ விவாதம் பார்லிமென்டில் சுடச்சுட நடந்துகிட்டிருக்கிறப்ப என்னோடு ஸ்கூல்ல படிச்ச ஒருத்தன் என்னைத் தேடி வந்தான். நான் ஸ்கூல்ல டாப்பர்; அவன் ஜஸ்ட் பாஸ் கேஸு. ஆனா, அவன் சாஃப்ட்வேர், ஹார்டுவேர்ன்னு பல டிப்ளமோ படிச்சுட்டு, இன்னைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறான். ''ஏகாம்பரம், புதுசா ஒரு கார் வாங்கியிருக்கேன். வாயேன் ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்''ன்னான். நண்பன் ஆசைப்பட்றானேன்னு, ஓகே சொல்லிட்டு ஏறினேன்.

எஃப்.டி.ஐ.ங்கிறது சில்லறை விஷயமில்லே!

காருல போறப்ப, ''ஏகாம்பரம், ரீடெய்ல்ல எஃப்.டி.ஐ. கூடாதுன்னு ஏன் எதிர்க்கிறாங்க? எவ்வளவு பணம் வெளிநாட்டுல இருந்து வருது! இதுல மட்டும் வந்தா என்ன தப்பு?''ன்னு ஒண்ணும் தெரியாதப் பச்சப்புள்ளையாட்டம் கேட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''காரணம் குளோபலைசேஷன்தான்ப்பா''ன்னு சொன்னேன் நான். ''அது என்ன குளோபலைசேஷன்? அது எதுக்கு இப்ப வந்துச்சு? அதனால நன்மையா, தீமையா?''ன்னு கேட்டான்.

''டேவிட் ரிக்கார்டோன்னு ஒருத்தருதான் இந்த மாதிரியான விஷயங்களுக்கு விதை விதைச்சாரு. ஒருத்தனுக்கு எதை நல்லாச் செய்ய முடியுதோ, அதை அவன் அதிகமாச் செஞ்சு வியாபாரம் பண்ணனும். தேவையில்லாம அவன் மத்த பொருட்களைச் செய்றதுல நேரத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது. அதேமாதிரி, அவனுக்குத் தேவையான மத்த பொருட்களை எவனாவது ஒருத்தன் சுலபமா செஞ்சுகிட்டு இருப்பான். அவன்கிட்ட இருந்து இவன் அந்தப் பொருளை வாங்கி, உலகத்துல இன்னொரு பகுதியில கொண்டு போயி விக்கணும். இப்படி ஒவ்வொருத்தனும் ஸ்பெஷலைஸ் பண்ணி செய்ய ஆரம்பிச்சா, உலக அளவில பிஸினஸ் செழிக்கும்னு சொன்னாரு. இதிலேயிருந்துதான் குளோபலைசேஷன்ங்கிற விஷயம் உருவாச்சு.

உதாரணத்துக்கு, மழையே பெய்யாத சிவகாசியில பட்டாசு செய்றோம். மழை மட்டுமே எப்போதும் பெய்யற

சிரபுஞ்சியில உலகத்தில இருக்கிற பல கம்பெனிங்க வாட்டர் ப்ரூப் புராடக்ட்களை செக் பண்ணுது. இதை விட்டுட்டு சிவகாசியில வாட்டர் ப்ரூப் புராடக்ட்டை தயார் பண்ணி, சிரபுஞ்சியில பட்டாசு தயார் பண்ணுனா அது கதைக்காவதில்லையா?'' என்றேன்.

''வாஸ்தவம்தானே! அப்புறம் ஏன்ப்பா எப்.டி.ஐ.-ன்னு சொன்னாலே எல்லாரும் அரண்டு ஓட்றாங்க!'' என்றான்.

''குளோபலைசேஷனால நல்ல மருத்துவ வசதி கிடைச்சு மனுசங்க நீடூழி வாழறாங் கன்றது ஒரு நல்ல விஷயம். ஆனா, வாழறப்ப படறபாடு இருக்கே அதைச் சொல்லிமாளாது. இதனால நாடுகளுக்கு நடுவே இருக்கற செல்வத்துல பயங்கரமான வேற்றுமையே உருவாயிடுச்சு. வசதியான நாடுகள் வசதியாகிட்டே போகுது. ஏழை நாடுகள் ஏழையாகிட்டே போகுது. ஜனங்கள்ல, வசதியானவன் வசதியாகிட்டே போறான்; ஏழை ஏழையாகிட்டே போறான். அவ்வளவு ஏன், குளோபலைசேஷனால வளர்ந்த நாடுகளில சம்பளம் குறைஞ்சுடுச்சு. அதனால மக்கள் வாழ்க்கைத்தரம் குறைஞ்சுடுச்சு. தொழில் பண்றவன் மட்டும் நல்லா சம்பாதிக்கிறான். வளர்ற நாடுகளில இருக்கற பல்வேறு பிரச்னைகளை கவனிக்காம கொஞ்ச காலத்துக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்குது. அதுக்கப்புறம் அடிப்படை பிரச்னைகள் தலைவிரித்தாடுது''ன்னு விளக்கமா எடுத்துச் சொன்னேன்.  

''இதெல்லாம் அரசாங்கத்துக்குத் தெரியாதா? அப்ப ஏன் அரசாங்கம் இதை பெர்மிட் பண்ணுது'' என்றான் அவன்.

''குளோபலைசேஷன் அப்படீங்கற விஷயத்தைக் கண்டுபிடிக்கிறப்ப தொழில்கள் அதனோட எல்லையில இருந்துச்சு. அமெரிக்காவுல இருக்கிற கம்பெனி அமெரிக்காவுல மட்டும்தான் தொழில் செய்ய முடியும். தயாரிப்பை அமெரிக்க மக்களுக்கு மட்டும்தான் விற்க முடியும். 1980-களில் ஐபேட் வந்திருந்தா, 32,000 ரூபாய்க்கு விக்கற ஐபேடிற்கு 64,000 டாக்ஸ் போட்டு 96,000 ரூபாய்-ன்னு இந்தியாவிற்குக் கொண்டுவந்திருக்க முடியும். அந்த விலைக்கு வித்திருந்த ஐபேட் அப்பவே அம்பேல் ஆகியிருக்கும்! ஆனா, இன்னைக்கு தேங்கஸ் டு குளோபலைசேஷன், அதே 32,000 ரூபாய்க்கு இந்தியாவில வித்துட்டு, லாபத்தை அசால்ட்டா பையில போட்டுக்கிட்டு போயிகிட்டே இருக்கான் வெளிநாட்டுக்காரன்''னு சொன்னவுடனே என்னை கட் பண்ணினான்.

''நல்லதுதானே ஏகாம்பரம், இது கேட்ஜெட் யுகம். இன்னைக்கு கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக் கூட்ஸ் இல்லாம வாழ்க்கை நடத்த முடியுமா?''ன் னும் கேட்டான் நண்பன்.  

''இதுதாண்டா மாயை என்கிறது. தேவையோ இல்லியோ ஐபாட், ஐபேட், ஆண்ட்ராய்டு போன், கேமிரான்னு எல்லாத்தையும் நீ வாங்கிப்போடுவே. அதுக்கு ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் யாரு கொடுப்பா. அதுக்குத்தான் இங்கேயிருந்து பொருட்களை எக்ஸ்போர்ட் பண்றோமேன்னு சொல்லுவே! வெளிநாட்டுக்காரன் பொருள் ஒன்பது உள்ளே வந்தா, நம்ம பொருள் ஒண்ணே ஒண்ணு வெளியே போகுது! அயல்நாட்டுக்காரனுக்கு சந்தையை விரிவுபடுத்த மட்டுமே குளோபலைசேஷன் உதவுச்சு. நமக்கு பெரும்பாலும் செலவுதான் வச்சுது!''

''எஃப்.டி.ஐ. வந்தா நிறைய வேலைவாய்ப்பு உருவாகுங்கிறாங்களேப்பா'' என்று ஆரம்பித்தான்.

''எஃப்.டி.ஐ. வந்தா எஃப்.ஐ.ஐ.யும் வருது. அது ஹாட் மணி. லாபத்துக்கு வாய்ப்பிருந்தா நம்ம நாட்டுக்குள்ள வேகமா வரும். வேற நாட்டுல துளியூண்டு லாபம் அதிகமா கிடைக்க வாய்ப்பிருந்தாகூட கூண்டோட கைலாசமாப் புறப்பட்டுப் போயிடும். அப்படி போறப்ப அந்நிய செலாவணி ரொம்ப காஸ்ட்லியா ஆயிடுது. எல்லா முதலீடும் டாலரா வருது. எல்லா செலவும் டாலராப் போகுது. தப்பித் தவறி உன் நாடு சம்பாதிச்சாக்கூட அதுவும் டாலரா ரிசர்வுல இருக்குது. அப்படி நீ வச்சுருக்கிற ரிசர்வுக்கு உலகத்திலேயே குறைஞ்ச வட்டிதான் கிடைக்குது. அமெரிக்காக்காரன் ஊரெல்லாம் பணத்தைப் போட்டு தொழில் பண்றான். அவன் தொழில் விருத்தியாகுது. தப்பித் தவறி லாபம் சம்பாதிச்சாகூட அந்த நாடுகள் ரிசர்வை டாலரில வச்சு அமெரிக்காவுலதான் வட்டிக்கு விட்டாகணும். இதுக்கு நடுவுல உன் நாட்டுக்கு உள்ளே வந்த கம்பெனிய வெளிய போகச் சொல்ல முடியாது. உள்ளே வந்த எஃப்.ஐ.ஐ. வெளியே போகும்போது நில்லு போகாதேன்னு சொல்ல முடியாது. இப்படியும் அப்படியுமா ஒரு சுழட்டு சுழட்டுனா, உன் நாட்டு கரன்சிக்கு மதிப்பு தரை தட்டிடும். ஆனா, நீதான் மாயைலே உழள்ற ஆளாச்சே! ஐபோனை காதுல வச்சுகிட்டு நம்மூரு குத்துப்பாட்டு கேட்டு டான்ஸ் ஆடிகிட்டு இருப்பே! நம்மூரு காசு பிளேன் ஏறி பறந்துகிட்டே இருக்கும்!''

''இந்த எழவெல்லாம் நமக்கு வேணாமுன்னு நம் நாட்டு சார்புல சொல்லிட வேண்டியதுதானே?'' என்றான்.

''முடியாதே! அமெரிக்காக்காரன், குளோபலைசேஷனை வளர்க்கற பொறுப்பை ஐ.எம்.எஃப்., வேர்ல்டு பேங்குன்னு, நாடுகளுக்கு கடன் கொடுக்கற நிறுவனங்கள்கிட்ட விட்டுட்டான். அய்யா, கடன் குடுங்கன்னு நாம் போயி நின்னா, இந்தா இதுல கையெழுத்தப் போடுங்கிறான். கையெழுத்துப் போட்டா எஃப்.டி.ஐ., எஃப்.ஐ.ஐ. எல்லாம் நிறைய வரும் போகும்; ஆனா, எந்த கேள்வியையும் கேக்க முடியாது. அநாவசியமா வரியெல்லாம் போட முடியாது!''  

''ஒத்தை கையெழுத்துல நம்ம அடிமை சாசனம் எழுதிக் குடுத்த மாதிரில்ல ஆயிடுது'' என்றான்.

''அதைத்தானேப்பா இவ்வளவு நேரம் சொன்னேன்! என்ன பாட்டி வடை சுட்ட கதையாச் சொன்னேன்? நாம சின்னப் புள்ளயா இருக்கப்ப ஊருல உங்க மாமா ஒருத்தரு வட்டிக்கு விட்டுக்கிட்டு இருந்தாரு, ஞாபகம் இருக்கா'' என்றேன். ஆமான்னு தலையாட்டினான்.

''பால்காரர், அயர்ன் காரர் எல்லாரும் கடன் கேட்டு வர்றப்ப பல்க்கா ஒரு அமௌன்டை கடனா குடுப்பாரு. கடனைத் திருப்பித் தரவேண்டியதில்லை. அதுக்குப் பதிலா ஆயுசுக்கும் துணி துவைச்சு தீர்த்துக்க வேண்டியதுதான். பால் விலை ஏறினாலும் அவருக்கு மட்டும் அதே பழைய விலையிலதான் பால் குடுக்கணும். இல்லாட்டி, உடனே கடனை கட்டச் சொல்லுவாருல்ல'' என்றேன்.

''யோவ், இது சூப்பர் பிஸினஸ் மாடலா இருக்கே?'' என்றான் ஆச்சரியத்தோடு.

''வட்டிக்குக் குடுத்தவனுக்கு இது சூப்பர் பிஸினஸ் மாடல்தான். வாங்கினவனுக்கு..? அது ஈரக்கொலைய அறுக்கற பிஸினஸ் மாடல். இதை நல்லாப் புரிஞ்சுக்கிட்டா குளோபலைசேஷனோட சூட்சுமமும் உனக்குப் புரிஞ்சுடும்'' என்றேன்.  

''எஃப்.டி.ஐ. சில்லறை விஷயம்தானேன்னு நெனைச்சேன்! அது நம்மை காலி பண்ணிடும் போலிருக்கே'' என்றவன், அண்ணாச்சி கடையில் கோலி சோடா குடிக்க காரை நிறுத்தினான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism