Published:Updated:

நேரடி மானியம்!

ஊழலை தவிர்த்தால் உருப்படும் திட்டம்தான்!

நேரடி மானியம்!

ஊழலை தவிர்த்தால் உருப்படும் திட்டம்தான்!

Published:Updated:

டுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் பதினெட்டு மாதங்களே இருக்கும் நிலையில் மத்திய அரசும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது போலிருக்கிறது. கடந்த தேர்தலுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவந்து நல்லபேர் வாங்கியதுபோல, இந்தத் தேர்தலுக்கு அரசு வழங்கும் மானியத்தை மக்களுக்கு நேரடியாகத் தரும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருக்கிறது. வருகிற ஜனவரி 1-ம் தேதியில் இருந்து இந்தியாவில் இருக்கும் 51 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து இருக்கிறது மத்திய அரசு!

நேரடி மானியம்!

என்ன பயன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய, மாநில அரசுகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களுக்காக ஆண்டுதோறும் 42 வகையில்  மானியங்களைத் தருகிறது. உதாரணத்துக்கு, நாம் பயன்படுத்தும் சிலிண்டர் மானிய விலையில்தான் அரசு தருகிறது. நாம் காசு கொடுத்து வாங்கும் விலையைவிட ஒரு மடங்கு விலையை மானியமாக அரசாங்கம் தருகிறது. இப்போது நாம் உண்மையான விலையில் சிலிண்டரை வாங்கி, அதன்பிறகு மானியத்தை அரசிடமிருந்து பணமாகப் பெறுவதுதான் இந்தத் திட்டம். இதுபோல உரம், உணவு என பலவகைகளில் நமக்குக் கிடைக்கும் மானியத்தை ரொக்கமாக அரசு திரும்பத் தரும். இதன் மூலம் மக்களுக்கு 3,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் மானியமாகத் திரும்பக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

நேரடி மானியம்!

இப்படி செய்வதன் மூலம் இரண்டு விஷயங்கள் நடக்கும் என்று நினைக்கிறது அரசு. முதலாவது, யாருக்கு மானியம் தேவையோ, அவர்களுக்குக் கண்டிப்பாகப் போய்ச் சேரும். இரண்டாவது, மானியங்கள் என்ற பெயரில் நடக்கும் ஊழலைக் குறைத்து ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவர உதவும் என்று நினைக்கிறது அரசு.

இந்த அறிவிப்பே ஓட்டுகளை வாங்கத்தானே என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் சிலர் கேட்டனர்.

''காங்கிரஸ் என்பது அரசியல் கட்சியே தவிர, என்.ஜி.ஓ. அல்ல. நாங்கள் 2009-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலே இதைச் சொல்லி இருக்கிறோம். தேர்தலுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்'' என்று கேட்டிருக்கிறார்.  நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒருபடி மேலே போய், ''உங்கள் பணம் உங்கள் கையில்’. இது  ஆட்டத்தின் போக்கினையே மாற்றும்'' என்று சூசகமாகச் சொல்லி இருக்கிறார்.

வருகிற ஜனவரி

1-ம் தேதி இந்தியாவின்

51 மாவட்டங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்தப் போகிறது மத்திய அரசு. ஏப்ரல் 1-ம் தேதிக்குள் 18 மாநிலங் களிலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளோ அல்லது 2014-ம் ஆண்டின் ஆரம்பத்திலோ இந்தியா முழுமைக்கும் இத்திட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த

51 மாவட்டங்களில் குஜராத்தில் 4 மாவட்டங்கள் வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளின் புகாரினால், தேர்தல் நடக்க இருக்கும் குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தத்

நேரடி மானியம்!

திட்டத்தைத் தள்ளிப்போட சொல்லி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

ஆனால் பிரேசில், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் இருப்பதை ஆதாரமாக்கி இங்கேயும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் மத்திய அரசு மும்முரமாகி இருக்கிறது. இந்நிலையில், இந்தத் திட்டம் பற்றி சென்னையின் பிரபல பொருளாதார ஆலோசகர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம்.

''நமது ஆட்சியாளர்களுக்கு எப்படிதான் இதுபோன்ற சிந்தனைகள் தோன்றுகிறதோ தெரியவில்லை. சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக உணவைப் பதப்படுத்தத் தேவையான வசதியை அமைத்துத் தராததற்காக வருத்தப்படாமல் வால்மார்ட் வந்தால் (அதாவது, அந்நிய நேரடி முதலீடு வந்தால்) பதப்படுத்தும் வசதி வந்துவிடும் என்று பேசி வருகிறது.

மானியம் விஷயத்திலும் இதேதான் பிரச்னை. இந்தத் திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதை விட்டுவிடுவோம். முதலில் இது தேவையா என்பதைப் பார்ப்போம். ஆதார் அட்டை மூலம் ஒருவருடைய அத்தனை தகவல்களும் அரசுக்குத் தெரிந்துவிடும். இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு அரசில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். இந்திய அரசாங்கத்தை ஆட்டுவிப்பது 20 முதல் 30 அரசியல் குடும்பங்கள்தான். அவர்களுக்கு இந்தத் தகவல் கிடைக்கும்போது அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், இந்தியாவில் கள்ளநோட்டு அச்சடிப்பதைத் தடுக்க முடியவில்லை; போலியான பத்திரங்கள் அச்சடிப்பதைத் தடுக்க முடியவில்லை. இத்தனை நடக்கும்போது போலியான மனிதனை உருவாக்கி அவருக்கு ஆதார் அட்டையைத் தந்து, அவன் பெயரில் பணத்தைக் கொள்ளை அடிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

இந்தத் திட்டம் வந்தால் 'லீக்கேஜ்’ குறையும், ஊழல் இருக்காது என்கி றார்கள். அது எப்படி குறையும் என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர் களுக்குத்தான் பணம் போய் சேரும். ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை யார் முடிவு செய்வார்கள்? எப்படி இருந்தாலும் யாராவது ஒரு அதிகாரிதான், இவர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர் என்று உத்தரவாதம் கொடுக்க முடியும். அப்போது அந்த அதிகாரி ஊழலில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறதே! இதனால் ஊழல்தான் அதிகரிக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் அதே நிலையில்தான் இருக்கிறார்களா? என்று உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் திட்டத்திலும் எந்த ஊழலும் நடக்காது என்று வைத்துக் கொண்டாலும் கூட, அந்தப் பணம் வீணாகச் செலவாகவே வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, அரசு கொடுக்கிற மானியம் மீண்டும்

நேரடி மானியம்!

அதே பொருள் வாங்குவதற்காகப் பயன்படுமா என்பது கேள்விகுறி. ஊரெல்லாம் டாஸ்மாக் கடை இருக்கும்போது, மானியம் தந்தால் அது டாஸ்மாக் கடைக்கே போக வாய்ப்பு இருக்கிறது. இங்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க வீணாக செலவு அதிகரிக்க வாய்ப்பு இருகிறது.

இத்திட்டத்தில் வங்கியில் பணத்தைச் செலுத்துகிறார்கள். ஆனால், எத்தனை கிராமங்களில் வங்கி இருக்கிறது? அல்லது எத்தனை கிராமங்களில் ஏ.டி.எம். இருக்கிறது? அவர்களது வங்கிக் கணக்கில் போட்டால்கூட அந்த பணத்தை எடுக்க அவர்கள் அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும். வங்கிகள் கிராமங்களை நோக்கி செல்லாதபோது, அரசாங்கம் கொடுக்கும் பணம் எப்படி கிராம மக்களுக்குப் போய்ச் சேரும் என்றே தெரியவில்லை.

மானியம் திருப்பித் தரும்பட்சத்தில் ரேஷன் கடைக்கு அவசியமே இல்லாமல் போகும் சூழ்நிலை வரும். ஆனால், நிஜத்தில் ஓர் இந்தியனுக்கு அடிப்படை தேவை ரேஷன் கார்டுதான். ஒருவருக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, அவர் ரேஷன் கார்டில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி அதை மற்றவருக்குத் தந்து வருகிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறவர்களுக்கு மட்டும் ரேஷன் கார்டு தந்து, மற்றவர்களுக்கு வேறு அடையாள அட்டை தரும்பட்சத்தில் தேவையானவர்களுக்கு மட்டும் மானியம் செல்லும்.

ஆனால், ஏதேதோ காரணங்களுக்காக ஓர் ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் கோடி ரூபாய் மானியமாகவே செலவு செய்கிறோம். இந்த மானியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து, மற்ற கட்டுமானங்களுக்குச் செலவு செய்யலாம்'' என்று முடித்தார்.

ஆக மொத்தத்தில், இது பார்ப்பதற்கு நல்ல திட்டமாக இருந்தாலும், ஊழலைத் தவிர்த்தால்தான் இந்தத் திட்டம் உருப்படும்! பொதுத் தேர்தலை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளாமல் மற்ற விஷயங்களையும் கவனித்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு நல்லபேர் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!

- வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism