Published:Updated:

வங்கி திருத்த மசோதா: யாருக்கு லாபம்?

வங்கி திருத்த மசோதா: யாருக்கு லாபம்?

வங்கி திருத்த மசோதா: யாருக்கு லாபம்?

வங்கி திருத்த மசோதா: யாருக்கு லாபம்?

Published:Updated:
வங்கி திருத்த மசோதா:  யாருக்கு லாபம்?
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டந்த இரு வாரங்களாக நாடாளுமன்றத்தில் கடுமையாக விவாதிக்கப்பட்டுவந்த வங்கி சீர்திருத்த மசோதா ஒரு வழியாக இரண்டு அவைகளிலும் நிறைவேறி இருக்கிறது. இந்த மசோதாவினால் இந்தியாவுக்கு இன்னும் சில புதிய வங்கிகள் வரும்; அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்கும் என்றெல்லாம் பல எதிர்பார்ப்புகள் இருப்பது ஒருபக்கம்; இந்த மசோதா வந்தால் பொதுத்துறை வங்கிகள் நீர்த்துப் போகும் என்பதால் நாடு முழுக்க ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தது இன்னொரு பக்கம்.  

கடந்த வாரம் (டிசம்பர் 23) வெளியான நாணயம் விகடன் தலையங்கத்தில், 'வங்கி மசோதாவில், வங்கிகள் கமாடிட்டி சந்தையில் வர்த்தகம் செய்வதை அனுமதிப்பது கூடாது’ என்று எழுதி இருந்தோம். நியாயமான இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் முகமாக அந்த விதிமுறையை நீக்கிவிட்டு, வங்கி மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தவிர, கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி ஆரம்பிப்பதில் ரிசர்வ் வங்கிக்கு ஒப்புதல் இல்லை. இருந்தாலும் நிதி அமைச்சகம் இதனை ஆதரித்ததால் ரிசர்வ் வங்கியும் ஏற்றுக்கொண்டது, ஒரு முக்கிய நிபந்தனையுடன். புதிதாக வங்கி தொடங்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் குழும கம்பெனிகளின் கணக்குகளை எப்போது வேண்டுமானாலும் தணிக்கை செய்யும் உரிமையை வேண்டும் என இந்த மசோதாவின் மூலம் கேட்டு வாங்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. மேலும், இயக்குநர் குழுவில் எடுக்கும் முடிவுகளை மாற்றும் அதிகாரத்தையும் ரிசர்வ் வங்கி வைத்திருக்கிறது. இந்த விதி நல்லது தான் என்கிறார் முன்னணி கன்சல்டன்ஸி நிறுவனமான கே.பி.எம்.ஜி.யின் செயல் இயக்குநர் நாராயண் ராமசாமி.

வங்கி திருத்த மசோதா:  யாருக்கு லாபம்?

''வங்கிகள் கடன் கொடுப்பதில் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஓர் அளவு இருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் கடன் கொடுக்கும் போது, அதை இயக்குநர் குழுதான் முடிவு செய்யும். ஒருவேளை குழு தவறான முடிவு எடுக்கும் பட்சத்தில் ரிசர்வ் வங்கி தலையீடு செய்து தடுக்க வாய்ப்புண்டு. ஆனால், நியாயமாகத் தேவைப்படும்  கடனைகூட இந்த குழு நிராகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விதியை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதும் முக்கியம்.

வங்கி திருத்த மசோதா:  யாருக்கு லாபம்?

மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி ஆரம்பிக்கும்போது, வங்கியில் இருந்து தங்கள் குழும நிறுவனங்களுக்குப் பணத்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் வங்கியின் டெபாசிட்தாரர்களுக்கு இழப்பு ஏற்படலாம். மேலும், குறைவான வட்டிக்குப் பணம் கிடைக்கும், பணத்தின் அருமை தெரியாமல் பிஸினஸ் செய்யும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிலின் வருமானம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படலாம்'' என்றார்.

ஆனால், பி.இ.எஃப்.ஐ.-ன் (Bank Employees Federation of India) பொதுச் செயலாளர் கிருஷ்ணன், ''வங்கிகள் தொடங்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏன் அனுமதி அளிக்க வேண்டும்?'' என்று கேட்கிறார். ''அமெரிக்காவில் மட்டும் இதுவரை 450-க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாக இருக்கிறது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி தொடங்கும் அனுமதி தரவேண்டாம் என்று முடிவு செய்திருக்கின்றன. வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து நம் நாட்டில் பல விதிமுறைகள் இருந்தாலும், இங்கேயும் வங்கிகள் திவாலாகவே செய்திருக்கிறது. கிராமப்புறங்களில் வங்கிச் சேவை சென்றடையவே புதிய தனியார் வங்கிகளுக்கு அனுமதி தருவதாகச் சொல்கிறது அரசாங்கம். ஆனால், தனியார் வங்கிகள் நகரம் மற்றும் பெருநகரங்களிலேயே அதிகளவு இருக் கின்றன. அவர்களையே கிராமங்களை நோக்கி செல்ல வைக்க முடியவில்லை. இனி புதிய வங்கிகள் மட்டும் எப்படி கிராமங்களை நோக்கி செல்லும்'' என்று கேள்வி எழுப்புகிறார். கே.பி.எம்.ஜி. நாராயணும், ''புதிய வங்கிகளின் நோக்கத்தில் தெளிவில்லை'' என்றார்.

இவர்களின் இந்த வாதம் ஓரளவுக்கு சரிதான். கிட்டத்தட்ட இந்தியாவிலும் சீனாவிலும் வங்கிகளின் எண்ணிக்கை சமஅளவில் உள்ளன. ஆனால், சீனாவில் வங்கிகளின் ஊடுருவல் அதிகம். இந்தியாவில் குறைவு. இப்போதைக்குப் பொதுத்துறை வங்கிகள் பாதிக்குப் பாதி கிராமப்புறங்களில் இருக்கிறது. ஆனால், தனியார் வங்கிகள் பெரும்பாலும் நகரங்களில் இருக்கிறது. 2011 சென்சஸ்படி இந்தியாவில் 58.7 சதவிகித மக்களுக்கே  வங்கிச் சேவை கிடைக்கிறது. இந்த நிலையில் மானியத்தை நேரடியாக மக்களுக்குக் கொடுக்கும் திட்டத்தை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி அமல்படுத்தப்போகிறது மத்திய அரசு. ஆனால், கிட்டத்தட்ட பாதி இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை. துரதிருஷ்டவசமாக, அந்தப் பாதி இந்தியர்களுக்குத்தான் மானியத்தின் தேவை இருக்கிறது.

வங்கி திருத்த மசோதா:  யாருக்கு லாபம்?

உங்கள் குழுமம் புதிதாக வங்கி தொடங்கப் போவதாகப் பேச்சு எழுந்துள்ளதே என தொடங்கியவுடன், ''ஆமாம், ஸ்ரீராம் குழுமம் சார்பில் வங்கி ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கிறது. இன்ஷூரன்ஸ், ரீடெய்ல் கடன், தங்க நகைக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல வகையான நிதிச் சேவைகளில் 35 வருடங்களாக எங்கள் குழுமம் செயல்பட்டு வருகிறது. எங்கள் குழுமத்தில் வங்கி மட்டும்தான் இல்லை. அதற்கும் விண்ணப்பிக்கலாம் என்றிருக்கிறோம்'' என்றார்.

இதற்குமேலும் நம் நாட்டுக்குப் புதிய வங்கிகள் தேவையா?

''நிச்சயம் தேவை. இந்தியாவிலும் சீனாவிலும் சம எண்ணிக்கையில் வங்கிகள் இருந்தாலும் நம் நாட்டில் வங்கி ஊடுருவல் குறைவுதான். எங்களது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வங்கிகளிடம் கடன் பெற முடியாமல் எங்களைத் தேடி வந்தவர்கள்தான். கிராமப்புறங்களில் என்று இல்லை, நகரங்களில்கூட பலருக்கு இன்னும் வங்கிச் சேவை கிடைக்கவில்லை.''

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி ஆரம்பிக்கும் போது, அவர்களது குழும நிறுவனங்களின் கணக்கைத் தணிக்கை செய்வது சரியா?

''சரிதான். முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நினைக்கிறது ரிசர்வ் வங்கி. இந்த விதிகளுக்குக் கட்டுப்பட நினைக்கிறவர்களே புதிய வங்கியைத் தொடங்க முன்வருவார்கள். சுமார் 70 முதல் 80 பேர் வரை புதிய வங்கி தொடங்க விண்ணப்பிக்கலாம்!''

நீங்களே புதிதாக வங்கியை ஆரம்பிப்பீர்களா அல்லது ஏற்கெனவே இருக்கும் வங்கியை இணைத்துக் கொள்வீர்களா?

''எந்த வங்கியையும் வாங்கி எங்களுடன் இணைக்கும் திட்டம் இதுவரை இல்லை. நாங்களே புதிய வங்கியை ஆரம்பிப்போம்!''

இந்த மசோதாவில் இருக்கும் அடுத்த முக்கியமான விஷயம், முதலீட்டாளர் களுக்கு ஓட்டுரிமை. பொதுத்துறை வங்கியில் முதலீட்டாளர்களின் ஓட்டுரிமையை 1 சதவிகித்திலிருந்து 10 சதவிகிதமாகவும், தனியார் வங்கிகளில் 10 சதவிகிதத்திலிருந்து 26 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விதி காரணமாக முதலீடுகள் அதிகரிக்கும் என்கிறார் நாராயண் ராமசாமி. ''வங்கிகளுக்கு அதிக முதலீடு தேவை. ஆனால், முதலீடுகள் தற்போது அதிகம் வராமல் போகக் காரணம், முதலீட்டாளர்களுக்கு எந்தவிதமான அங்கீகாரமும் இல்லை என்பதால்தான். வங்கி நிர்வாகத்திடம் அவர்களால் எந்த கேள்வியும் கேட்க முடியாது. இப்போது ஓட்டுரிமையை அதிகரிக்கும்பட்சத்தில் இந்திய வங்கிகளில் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.

''ஆனால் இந்த  ஓட்டுரிமை காரணமாக, முன்னுரிமை கடன்கள் கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும். ஏன் விவசாயத்துக்கு அதிக கடன்களை கொடுக்கிறீர்கள், கல்விக் கடன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க வாய்ப்பு இருக்கிறது'' என எச்சரிக்கிறார் கிருஷ்ணன்.

புதிய வங்கிகளுக்கு லைசென்ஸ் கிடைக்கும் என்பதால் கார்ப்பரேட்கள் முக்கியமான தனியார் வங்கிகளை தங்களுடன் இணைப்பதற்கான பேச்சு வார்த்தையை துவங்கி இருப்பதாகத் தெரிகிறது. வங்கி துவங்கும் ஆசையில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கெனவே வங்கி களில் கிட்டத்தட்ட ஐந்து சத விகிதத்துக்கு சற்று குறைவான பங்குகளை வாங்கி வைத்திருக்கிறது. இந்தப் பட்டியலில் பழைய தனியார் வங்கிகளின் பெயர்தான் அடிபடுகிறது. விதிகளின்படி வங்கிகளை இணைப்பதுசரிதான். அதற்காக நன்கு செயல்பட்டு வருகிற சிறிய வங்கிகளை அதன் போக்கில் விட்டுவிடுவது நல்லது. தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்ட்ரா,

பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங் களில் சிறிய தொழிற்சாலைகள் வளர்வதற்கு இதுபோன்ற சிறிய வங்கிகள்தான் காரணம்.

ஆக மொத்தத்தில், இந்த வங்கி திருத்த மசோதா சில கார்ப்பரேட் களுக்கு லாபமாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கும் புதுப் புதுச் சேவைகள் கிடைக்கும். மேலும், வங்கித் துறையில் சுமார் ஒரு லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகும். பொருளாதாரத்தின் முதுகெலும்பே வங்கிகள் என்பதால், இந்த சீர்திருத்தங்கள் எல்லோருக்கும் சம வாய்ப்பை அளிக்கும் என நம்பலாம்.

- வா.கார்த்திகேயன்,
படம்: எம்.உசேன்..

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism