Published:Updated:

சுதாரிக்க வேண்டிய நேரம் இது!

சுதாரிக்க வேண்டிய நேரம் இது!

சுதாரிக்க வேண்டிய நேரம் இது!

சுதாரிக்க வேண்டிய நேரம் இது!

Published:Updated:
சுதாரிக்க வேண்டிய நேரம் இது!
சுதாரிக்க வேண்டிய நேரம் இது!

2012-ல் நடக்கும் என்று நாம் நினைத்தப் பல தவறான விஷயங்கள் நல்லவேளையாக நடக்கவில்லை. டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழியவில்லை; ஐரோப்பிய யூனியன் உடையவில்லை; ஐரோப்பிய நிதி யூனியனில் இருந்து கிரீஸ் வெளியேறவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேசமயம், இதற்கு நேர்மாறாக, 2012-ம் ஆண்டு இறுதியில் கிரீஸின் ரேட்டிங்கை தரக் குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூவர் சில புள்ளிகளை உயர்த்தியது. ஸ்பெயின் மற்றும் கிரீஸ் நாடுகளில் வேலை இல்லாதவர்களின் விகிதம் 20 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருந்தாலும், அந்நாட்டு பங்குச் சந்தைகள் உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தைகள்கூட சுமார் 25 சதவிகிதம் உயர்ந்தது. இந்தியாவுக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இதுதான்.

உலகப் பொருளாதாரமும், சந்தையும் வட்டியில்லாப் பணத்தினாலும் அதிர்ஷ்டத்தின் காரணமாகவும் உயர்ந்து வருகிறது. 70 டிரில்லியன் அளவுள்ள உலகப் பொருளாதாரத்தை இப்படி வழிநடத்துவது நல்லதல்ல. உலகப் பொருளாதாரத்தில் நான்கில் மூன்று பங்கு பணத்திற்கு வட்டி விகிதமே இல்லை அல்லது மிகவும் குறைவான (0.1) வட்டி விகிதத்தில் இருக்கிறது. இது ஓர் அசாதாரண சூழ்நிலையையே காட்டுகிறது.

##~##
வட்டி குறைவாக இருப்பதன் காரணமாக நிறுவனங்கள் அதிகளவுக்குக் கடன் வாங்குகின்றன. திரும்பவும் வட்டி அதிகரிக்கும்போது இந்நிறுவனங்களால் கடனைத் திரும்பக் கட்ட முடியுமா என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை.

இந்நிலையில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை

6.5 சதவிகிதத்துக்குக் கீழே வரும் வரை புதிதாக டாலர்களை அச்சடிக்கவும், வட்டி விகிதத்தை '0%’ என்ற நிலையிலே வைத்திருக்கவும் முடிவு செய்திருக்கிறது. மேலும், டாலரை தொடர்ந்து பலவீனமாகவும் வைத்திருக்கிறது. தற்போதைய நிலையில் யூரோ, டாலருக்கு எதிராக 1.32 என்ற அளவில் வர்த்தகமாகிறது. இது மிக அதிகம்.

இதற்கிடையில் ஜப்பான் தேர்தலில், லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதன் பிரதமர், ஜப்பானின் நாணயமான யென்-ஐ தொடர்ந்து சரிவிலே வைத்திருக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார். (ஒரு டாலருக்கு 85-90 யென் என்ற நிலையில்).

2013-ல் கரன்சி பிரச்னை பெரிய அளவில் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். இதே எச்சரிக்கையை பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் கவர்னர் மெர்வின் கிங்கும் (2013, ஜூன் மாதம் பொறுப்பில் இருந்து விலகுகிறார்!) செய்திருக்கிறார். அதிக பணப்புழக்கமும், கரன்சி பிரச்னையும் சர்வதேச அளவில் பணவீக்கத்தை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

இந்தியாவிலும் பணவீக்கப் பிரச்னை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. தவிர, இந்தியாவுக்கு வேறு பல பிரச்னைகளும் உண்டு. கடந்த சில மாதங்களில், இந்திய அரசாங்கம் பலவிதமான பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கியது. இதன் காரணமாகப் பொருளாதாரம் மீண்டுவிடும் என்ற நம்பிக்கையை வெற்றிகரமாக விதைத்தது. இந்தப் பிரசாரத்தில் பல அறிவுஜீவிகள் மயங்கியது மட்டுமல்லாமல், அதை ஆதரித்தும் பேசி வருகிறார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

ஆனால், பலமான பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களை இந்தியா சிறிதளவும் செய்யவில்லை. இதனால் இந்தியப் பொருளாதாரம் இன்னும் சில ஆண்டுகளுக்கு பலவீனமாகவே இருக்கும். தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை பிஸினஸ் செய்வதற்கான நம்பிக்கையைத் தரவில்லை. இதனால் முதலீடுகள் குறைந்து, பொருள் தட்டுப்பாடு அதிகமாகி பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே போகும் வாய்ப்பு உருவாகும். உலகப் பொருளாதாரக் கொள்கைகளும் இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும்.

கடந்த 2012-ல் இந்தியச் சந்தைகள் மட்டுமல்லாமல் உலகச் சந்தைகளும் உயரக் காரணம் மோசமான சூழ்நிலைகள் வெடிக்காததே. ஆனால், சிறப்பான செயல்பாட்டுக்கு அது காரணமாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. 2008-ம் ஆண்டுபோல் இல்லாமல், முதலீட்டாளர்களும் உலக அரசுகளும் இந்திய அரசும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism