Published:Updated:

ஆமை வேகத் திட்டங்கள் !

ஆமை வேகத் திட்டங்கள் !

ஆமை வேகத் திட்டங்கள் !

ஆமை வேகத் திட்டங்கள் !

Published:Updated:
ஆமை வேகத் திட்டங்கள் !

''ந்தியாவுக்கும் சீனாவுக்கும் என்ன வித்தியாசம்?'' - இப்படி ஒரு கேள்வியை அமெரிக்க பிஸினஸ்மேனிடம் கேட்டார்கள் பத்திரிகையாளர்கள். அவர் என்ன சொன்னார் தெரியுமா? ''சீனாவில் ஒரு திட்டத்தைப் போட்டால் அதை அதிகபட்சம் 24 மாதங்களில் முடித்துவிடுவார்கள். ஆனால், இந்தியாவில் 24 ஆண்டுகள் கழிந்தால்கூட அந்தத் திட்டம் நிறைவுபெறுமா என்பது சந்தேகமே'' என்றாராம். அரசாங்கம் போடுகிற திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் முடிகிறதா என்றால் இல்லவே இல்லை என்பது நாம் நிதர்சனமாக காணும் காட்சி. இதனால் மக்கள் பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் அநியாயத்துக்கு வீணாகிறது. இன்றைக்கு தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே நிறைவேறாமல் கிடக்கும் அல்லது ஆமை வேகத்தில் நடக்கும் சில திட்டங்களைப் பற்றி இனி பார்ப்போம்.

ஆமை வேகத் திட்டங்கள் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நோக்கம்: தொழில் துறை வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் நெல்லையில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் அங்குள்ள இளைஞர்கள் வெளியூர்களுக்கு இடம் பெயர்வதைத் தடுக்கவும், சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு காணவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் இது சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.

 என்ன நன்மை: தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு மிகப் பெரிய முன்னேற்றத்தை இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் தந்திருக்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.

என்ன செய்தார்கள்: 1998-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 1,700 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதில் 700 ஏக்கர் நிலம் உள்கட்டமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்டது.

ஏன் தாமதம்: இந்த  பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்க சர்வதேச நிறுவனங்கள் தயங்குகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லை. மின்சாரம் முக்கியமான பிரச்னையாக உள்ளது. முதலீட்டைக்கொண்டு வர எந்த முயற்சியும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை.

தற்போதைய நிலை: இத்திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. தற்போது நான்கு நிறுவனங்களே இங்குள்ளன. உள்கட்டமைப்பு வசதி இல்லாமல் எப்படி வருவது என்பது நிறுவனங் களின் கேள்வியாக இருக்கிறது.

இழப்பு: இத்திட்டம் வந்திருந் தால் தூத்துக்குடி, மதுரை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டு இருக்கும். 20,000 கோடி ரூபாய் முதலீடு, 10,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்திருக்கும்!

ஆமை வேகத் திட்டங்கள் !

நோக்கம்: திருச்சியைச் சுற்றி 15 பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், இங்கு தொழில்நுட்ப பூங்கா அமைத்து, இந்தப் பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது.  

என்ன நன்மை: ஐ.டி. என்றாலே சென்னை என்கிற நிலை மாறி, திருச்சி போன்ற சிறிய நகரங்களிலும் ஐ.டி. படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். சுமார் 20,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு, 40,000 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

என்ன செய்தார்கள்: திருச்சியை அடுத்த நாவல்பட்டு கிராமத்தில் 147 ஏக்கரில் 60 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பூங்கா தொடங்க 2008-ல் திட்டம் தீட்டப் பட்டது. கட்டடங்கள் கட்டும் வேலையும் முடிந்துவிட்டது.

ஏன் தாமதம்: இப்பூங்காவில் ஐ.டி. நிறுவனங்கள் வராமல்போக காரணம், அடிப்படை கட்டமைப்பு எதையும் அரசு பெரிய அளவில் செய்து தராததே. குறிப்பாக, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 100 அடி அகல சாலை மிக மோசமான நிலையில் இருப்பது ஒரு காரணம்..!

இழப்பு: இத்திட்டம் நிறைவேறி இருந்தால், திருச்சி நகரம் உலக ஐ.டி. வரைபடத்தில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்து, திருச்சி நகரம் குட்டி பெங்களூருவாக மாறி இருக்கும்.

ஆமை வேகத் திட்டங்கள் !

நோக்கம்: இந்தியாவின் கிழக்குக் கடற்கரை யிலிருந்து மேற்கு கடற்கரைக்கு கப்பல் மூலம் செல்லவேண்டுமெனில் இலங்கையைச் சுற்றியே செல்லவேண்டும். இதைத் தவிர்க்க, ராமேஸ்வரம் கடல் வழியாகப் பாதை அமைத்து தூத்துக்குடி துறைமுகத்தை அடைவது. இத்திட்ட மதிப்பு சுமார் ரூ.2,500 கோடி!

என்ன நன்மை: இலங்கையைச் சுற்றிச் செல்வதால் ஆகும் பல மணி நேரம் மிச்சமாகும்; இதனால் எரிபொருள் செலவு குறையும். மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் நல்ல வளர்ச்சி கண்டிருக்கும். தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வர்த்தக வருவாய் அதிகரித்திருக்கும்.

என்ன செய்தார்கள்: இத்திட்டத்திற்கான இறுதி அறிக்கையைத் தயாரிக்க 2000-2001-ல் 4.8 கோடி ரூபாயை ஒதுக்கியது மத்தியில் இருந்த பா.ஜ.க. அரசாங்கம். 2005-ல் பிரதமர் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.  

ஏன் தாமதம்: பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தபோது, இத்திட்டத்தால் அந்தப் பகுதியில் சுற்றுச் சூழல் பிரச்னை ஏற்படும் எனவும் பாரம்பரியமிக்க சின்னம் அழிக்கப்படும் எனவும் சர்ச்சை எழுந்ததால் சேது சமுத்திர கால்வாய் தோண்டும் பணி அப்படியே முடங்கிக் கிடக்கிறது.

தற்போதைய நிலை: பாக் ஜலசந்தியில் சில கிலோ மீட்டர் தூரத்தில் கால்வாய் தோண்டும் பணி நடந்தது.  இப்போது அந்தக் கால்வாய் ஏறக்குறைய தூர்ந்துபோயிருக்கும்.

இழப்பு: இத்திட்டம் நிறைவேறி யிருந்தால் கொழும்பு துறைமுகத்தில் நடந்துவரும் சரக்குப் போக்குவரத்தில் 40 சதவிகிதம் வரை தூத்துக்குடி துறைமுகத்தில் நடந்திருக்கும். 424 கடல் மைல் தொலைவு (780 கி.மீ) சுற்றுவதால் எரிபொருள் செலவும் வீண். மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.  

ஆமை வேகத் திட்டங்கள் !

நோக்கம்: தமிழகத்திற்கு சராசரி மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம். உற்பத்தி ஆவதோ 8,500 மெகாவாட். மேலதிகமாகத் தேவைப்படும் 3,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே பல்வேறு மின் திட்டங்களின் நோக்கம்.

என்ன நன்மை: பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்து, பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வந்திருக்கும்!

என்ன செய்தார்கள்: பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிலவற்றுக்கு இடம் ஒதுக்கியும், இன்னும் சிலவற்றுக்கு இடம் ஒதுக்கப்படாமலும் இருக்கிறது.

ஏன் தாமதம்: மாநில அரசிடம் போதிய அளவு நிதி வசதி இல்லாதது முக்கியமான காரணம். அரசியல் இன்னொரு காரணம்.

தற்போதைய நிலை: மேட்டூர் அனல் மின் நிலையம் 600 மெகாவாட், வடசென்னை அனல் மின் நிலைய இணைப்பு இரண்டாம் கட்டம் நிலை-1: 600 மெகாவாட், வள்ளூர் அனல் மின் நிலையம் 500 மெகாவாட் ஜ் 3 யூனிட்கள் (இதில் ஒரு யூனிட் மட்டும் தற்போது செயல்பட ஆரம்பித்துள்ளது!), தூத்துக்குடி அனல் மின் நிலையம் 500 மெகாவாட் ஜ் 2 யூனிட்கள், உடன்குடி அனல் மின் நிலையம் 2 ஜ் 800 மெகாவாட், உடன்குடி அனல் மின் நிலைய விரிவாக்கம் 1 ஜ் 800 மெகாவாட், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை உப்பூர் அனல் மின் திட்டம் 2 ஜ் 800 மெகாவாட், எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் 660 மெகாவாட், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அனல் மின் நிலையம் 5 ஜ் 800 மெகாவாட், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம் 2 ஜ் 800 மெகாவாட், வடசென்னை அனல் மின் திட்டம் நிலை - 3,  1 ஜ் 800 மெகாவாட் ஆகிய  மின் திட்டங்களில் பல ஆமை வேகத்தில் வளர்கிறது.  

இழப்பு: தொழில் துறைக்கு தேவையான மின்சாரம் கிடைக்காததால் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் வேலை கிடைக்காமல் போயிருக்கிறது.

ஆமை வேகத் திட்டங்கள் !

நோக்கம்: ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்ய, சென்னை துறைமுகத்திற்கு விரைந்து கொண்டுவரவே இந்தப் பறக்கும் சாலைத் திட்டம்.

என்ன நன்மை: தற்போதைய நிலையில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து துறைமுகத்திற்கு 30 கி.மீ. செல்ல வேண்டும்.  இந்தத் தூரத்தைக் கடக்க இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஆகும். இந்தப் பாலம் வந்தால் 19 கி.மீ. தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்துவிட முடியும்.  

என்ன செய்தார்கள்: கடந்த 2009-ல் பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த திட்டம் இது. இதற்கென 2,148 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றும் சோமா நிறுவனம் 269 கோடி ரூபாய் போட, 269 கோடி ரூபாயை சோமா நிறுவனத்துக்கு மானியமாக அளித்தது அரசாங்கம். மீதமுள்ள 1,610 கோடி ரூபாய் வங்கிக் கடன் மூலம் திரட்டப்பட்டது. இத்திட்டம் கொண்டுவர கூவம் கரையில் இருந்த 1.20 லட்சம் குடியிருப்புகளை அகற்ற 345 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ஏன் தாமதம்: பாலம் கட்டுவதற்காகத் தரப்பட்ட பிளான்படி கட்டப்படவில்லை என மாநில அரசாங்கம் அறிவிக்க, திட்டம் அப்படியே கிடக்கிறது.

தற்போதைய நிலை: 30 சதவிகித வேலைகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதற்கு செலவான தொகை 900 கோடி ரூபாய்.

இழப்பு: இத்திட்டம் முழுமைப் பெற்றிருந்தால் 2013-ம் ஆண்டில் 86 கோடியும், 2014-ம் ஆண்டில் 252 கோடியும் வருமானம் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நீரை.மகேந்திரன், இரா.ரூபாவதி.

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், எல்.ராஜேந்திரன், தே.திட்ஷித்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism