Published:Updated:

எடக்கு மடக்கு

தங்கமோ தங்கம்...அரசாங்கம் வாங்கலாமாம், ஜனங்க வாங்கக்கூடாதாம் !

எடக்கு மடக்கு

தங்கமோ தங்கம்...அரசாங்கம் வாங்கலாமாம், ஜனங்க வாங்கக்கூடாதாம் !

Published:Updated:
##~##

ருக்குப் போய்விட்டு அதிகாலை டிரெயினில் திரும்பிவந்து சேர்ந்த அம்மா, ரயில்வே ஸ்டேஷனிலேயே தங்கமே என்று பேத்தியை அணைத்துக்கொண்டாள். கிராமத்துக்காரியான அவளுக்கு வாயில் எப்போதுமே தங்கம்தான். மருமகளிடம் பேசும்போதுகூட சொல்லு தங்கம் என்று அடிக்கடி சொல்லக்கூடிய மனப்பாங்கு கொண்டவள் அவள்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் அடிக்கடி அவள் கழுத்தில் மஞ்சள் கயிறைத்தான் பார்த்திருக்கிறேன். அவளுடைய தாலிச்செயின் வீட்டில் பணப் பற்றாக்குறை வரும்போதெல்லாம் வேடந்தாங்கல் வரும் பறவைபோல் அடகுக் கடை நோக்கிப் பறந்து, பின்னர் திரும்பவரும். நாங்கள் தலையெடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தப் பின்னர்தான் அது கழுத்தில் அடங்கியிருந்தது. அண்ணன், தம்பி எல்லாம் சேர்ந்து அறுபதாம் கல்யாணத்திற்கு பத்து பவுனுக்கு ரெட்டைவடச் சங்கிலி வாங்கிப் போட்டபோது நாங்கள் அவள் முகத்தில் பார்த்த சிரிப்புதான் எங்கள் வாழ்நாளிலேயே நாங்கள் பார்த்த சிறந்த சிரிப்பாக இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடக்கு மடக்கு

என்ன ஏகாம்பரம், ஒரே சென்டிமென்டா பேசிக்கிட்டே போறியேங்கிறீங்களா? இது சென்டிமென்ட் இல்லீங்க! இந்திய அம்மாக்கள் மற்றும் அக்கா, தங்கைகளின் தங்க சென்டிமென்ட். ஏன், இன்னைக்கு உலகத்தின் பெரும்பான்மையான வளரும் நாடுகளோட சென்டிமென்டா மாறிக் கிட்டிருக்கிறது இந்த தங்க சென்டிமென்ட்.

அதென்னவோ தெரியலீங்க அரசாங்கம், அமைச்சருங்க, ரிசர்வ் வங்கின்னு எல்லோரும் ஒரே வாய்ஸ்ல தங்கம் வாங்காதே அப்படீன்னு மக்களைப் பார்த்து கூவுறாங்க. நாமதான் சின்னப்புள்ளேல இருந்து ஒண்ணைச் செய்யாதேன்னு சொன்னா திரும்பத் திரும்ப செய்வோமே! அதேபோல தங்கத்தையும் வாங்கிக் குவிச்சுக்கிட்டுதான் இருக்கோம். அதனால தங்கம் வாங்குவதைத் தடுப்பது எப்படின்னு அரசாங்கம் யோசிக்க ஆரம்பிச்சுடுச்சு.

நம்ம நாட்டு அரசாங்கமுன்னு மட்டும் இல்லீங்க, எல்லா நாட்டு அரசாங்கமும் கிட்டத்தட்ட மக்களைப் பார்த்து, 'மக்களே மக்களே தங்கத்தை வாங்கிக் குவிக்காதீங்க. அதுல ஒண்ணும் பெருசா வருமானம் வராது’ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா என்ன ஒரு கபட நாடகமுங்கிறீங்க? 2012 ஜனவரி-செப்டம்பரில உலகத்தில இருக்கற ரிசர்வ் வங்கிங்க எல்லோரும் வாங்கிப் போட்ட தங்கத்தின் அளவு 2011 ஜனவரி-செப்டம்பரில வாங்கின அளவைவிட அதிகமுன்னு வேர்ல்டு கோல்டு கவுன்சில் சொல்லுதுங்க. எப்படி நாடாளுறவங்களோட ஐடியா? அவங்க சொல்றதைச் செய்யமாட்டாங்களாம்! செய்றதைச் சொல்லமாட்டாங்களாம்! அப்படீங் கறதுதானே அவங்களோட பஞ்ச்லைன்!

நம்ம நாட்டுல மைனர்செயின்ல இருந்து இப்ப லேட்டஸ்ட்டா ஆம்பளைங்க (அதுவும் பெருசு பெருசா போடறது தாதாக்கள்தாங்க!) போடற ப்ரேஸ்லெட் வரைக்கும், மூக்குத்தியில இருந்து ஒட்டியாணம் வரைக்கும் தங்கத்தை நகையாச் செஞ்சு போட்டு அழகு பாக்கற எண்ணம் இருக்குது. நம்ம நாட்டுல பெண்ணைப் பெத்தவங்க, பெண்ணுங்க எதிர்காலத்துக்காக தங்கத்தை வாங்குறாங்க. அவங்களுக்குத் தெளிவாத் தெரியுது, பணத்தோட மதிப்பு நிச்சயமா குறையும். விலைவாசி எகிறிட்டே போகும். நிலம் நீச்சு வாங்கிப் போடணுமின்னா பெரிய தொகை வேணும். ஆனா, தங்கத்தை குந்துமணி அளவுக்குகூட கையில இருக்கற காசோட அளவுக்கு ஏத்தாப்போல வாங்கிப் போடலாம். அதனால தங்கத்தை வாங்கிக் குவிக்கிறாங்க.

நகை நட்டு போட்ற நாடுகள்ல தங்கத்தை வாங்கிக் குவிக்கிறாங்கன்னு வச்சுக்குவோம், நகை போடாத நாடுகளிலேயும் ஏன் ஏகாம்பரம் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறாங்க? இதுக்கொரு பதிலைச் சொல்லு பார்ப்போம்னு நீங்க கேக்கலாம்.

எல்லா நாட்டு ஜனங்களுக்கும் அரசாங்கத் தோட பெஸ்ட்டான நிதி மேலாண்மைத் திறன் பத்தி தெளிவாப் புரிஞ்சுடுச்சு. ஓட்டு வாங்கறதுக்காகவும் ஊழல் பண்றதுக்காகவும் எதை வேணா அரசியல்வாதிங்க செய்வாங் கங்கிறத ஜனங்க தெளிவாப்

புரிஞ்சுக்கிட்டாங்க. ஓட்டு வாங்கறதுக் குக்காக இலவசங் களைக் கொடுத்து டெபிசிட் பட்ஜெட் போட்டு நோட்டை அடிச்சு பறக்க விடுவாங்க. அதுலயும் நம்பர் ஒன் அமெரிக்காதாங்க. வர வர நோட்டு பிரின்டிங் ஸ்பெஷலிஸ்டா மாறிகிட்டு வருது. உலக நாடுகள் அனைத்துமே ரிசர்வ்வா (சேமிப்பு போல) டாலரை வச்சுக்கிட்டு இருக்கு.

டாலர் அதிகமாப் புழக்கத்தில வந்தா என்னவாகும்? ஜனங்க பொருட்களை வாங்கித் தள்ளுவாங்க. விலைவாசி ஏறும். செயற்கையாச் செய்ற பொருட்களாயிருந்தா பரவாயில்லை. இரண்டுக்கு மூணு ஷிஃப்ட் ஓட்டி பொருளைக் கொண்டுவந்து குவிச்சிட லாம். தங்கம் அப்படியில்லீங்களே! செயற்கையா செய்யமுடியாதே! இயற்கையா கெடைக்கிறதைத் தேடி, தோண்டி எடுத்து சந்தைக்குக் கொண்டுவர வேண்டியிருக்கு. கிடைக்கிற அளவு குறைவு. தங்கம் வேண்டும்னு வேண்டி நிக்கிறவங்க கூட்டமோ தினம் தினம் அதிகமாயிட்டே போகுது!

தங்கமோ டாலரில விலை மதிப்பிடப்படுது. டாலர் பிரின்ட் பண்ணி சர்க்குலேஷன் அதிகமாச்சுன்னா அதே அளவுக்கு தங்கம் கிடைக்காது. (பணத்தை பிரின்ட் பண்ண பேப்பரும் மையும் போதுங்களே!). சர்க்குலேஷனில இருக்கற டாலர் அதிகரிக்க அதிகரிக்க தங்கத்தோட விலை ஏறத்தானே செய்யும். அதாவது, டாலரோட மதிப்பு குறையும் இல்லீங்களா? தவிர, உலகத்துல உள்ள அத்தனை நாடுங்களும் கோடி கோடியா டாலரைத்தான் குவிச்சு வச்சிருக்கு! டாலர் மதிப்பிழந்தா என்னவாகும்? அவங்க சேமிப்போட மதிப்பு குறைஞ்சுதானே போகும். கஷ்டப்பட்டு சேமிச்ச பணம் மதிப்பிழக்கிறதை சகிச்சுக்க முடியாதுங்கறதால எல்லா ரிசர்வ் வங்கியும் கையில இருக்கிற டாலரை வச்சு தங்கத்தை வாங்கிப்போட்டுடுது.

இங்கதாங்க பிரச்னையே! ஜனங்க ரிசர்வ் வங்கியோட போட்டி போட்டுட்டு போய் தங்கத்தை வாங்கினா என்னவாகும்? விலை எகிறும். ரிசர்வ் வங்கிகள் அதிக விலை கொடுத்து தங்கத்தை வாங்கவேண்டியிருக்கும். தங்கத்துக்கு ஒவ்வொரு நாடும் டாலரில விலை கொடுக்கவேண்டியிருப்பதால ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரிசர்வ் கரையும். இதை கரன்ட் அக்கவுன்ட் டெபிசிட் கூடுதுன்னு சொல்லி கேள்விப்பட்டிருப்பீங்களே? அது இதுதாங்க.

எடக்கு மடக்கு

என்ன ஏகாம்பரம், புரியாத பாஷையெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டேங்கிறீங்களா? இன்னும் சிம்பிளாச் சொல்றேன். நீங்க அரசாங்கத்தோட போட்டி போட்டா அரசாங்கம் ஒத்துக்குமா? நாங்க எங்கங்க அரசாங்கத்தோட போட்டி போடப்போறோம் அப்படீங்கிறீங்களா?

நீங்க வாங்கற ஒவ்வொரு கிராம் தங்கமும் அரசாங்கத்தோட நீங்க போடற போட்டிதான். இன்னொன்னும் இருக்கு. நீங்க அரசாங்கத்தோட திறமையிலே நம்பிக்கையில்லேன்னு சொன்னா அரசாங்கம் சும்மாவிடுமா? விடவே விடாதுங் கிறீங்களா?

நீங்க வாங்கற ஒவ்வொரு கிராம் தங்கமும் பண ரீதியாக, அரசாங்கத்தின் மேலே நம்பிக்கை இல்லாத்தன்மையைக் காண்பிக்குதுன்னுதான் அர்த்தம். இப்படி அரசாங்கத்தால சகிச்சுக்க முடியாத இரண்டு விஷயத்தை நீங்க செய்றப்ப அரசாங்கம் என்ன செய்யும்? உங்களை அந்த விஷயத்தை, அதாங்க தங்கம் வாங்கறதை நிறுத்த என்னென்ன செய்ய முடியுமோ, அதைத் தானே செய்யும். அதைச் செய்யத்தான் இப்போ முயற்சிங்க நடந்திட்டிருக்கு.

ஏன் ஏகாம்பரம், அரசாங்கம் நோட்டடிக் கிறதை நிறுத்தி சிக்கனமா வாழ ஆரம்பிச்சா நம்ம கணக்கு தப்பாயிடாதான்னு நீங்க எடக்கு மடக்கா ஏன்கிட்டயே ஒரு கேள்வி கேக்கலாம். 1970-71ல கிட்டத்தட்ட 185 ரூபாய் வித்த பத்து கிராம் தங்கம் இன்னைக்கு 30,900 ரூபாய்க்கு விக்குது. நாப்பது வருஷமா நடந்த விஷயம் இது. பர்சென்டேஜ் கணக்கெல்லாம் நீங்க போட்டுப் பாத்துக்குங்க.

இறுதியா என்னதான் ஏகாம்பரம் சொல்லவர்றேன்னு நீங்க கேக்குறதுக்கு முன்னால, நானே நச்சுன்னு சொல்லிடறேன். ஜனங்க தெளிவானவங்க. தங்கம் வாங்கி சேமிக்கிறாங்க. அவங்களுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறதுக்குப் பதிலா தடுக்கப் பாக்காதீங்க. தங்கம் வாங்கறதை விட்டுட்டு சைனா பொம்மையும், சைனா மொபைலையும் வாங்கிக் குவிச்சா என்னவாகும்? அப்பவும் ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரிசர்வ் கரையத்தானே செய்யும். நாளடைவில எலெக்ட்ரானிக்ஸ் குப்பை நாட்டுக்குள்ள ஜாஸ்தியாகிறதுதான் மிச்சமாகும்.

ஆனா, தங்கம் வாங்காம விட்டீங்கன்னா ஃபாரெக்ஸ் ரிசர்வ் உங்க கையில இருந்து போயி ஜனங்க கையில தங்கமா இருக்கப் போகுது. இன்னொரு மாதிரி யோசனை பண்ணுங்க, சார். தங்கமும் வாங்கலை. மொபைலும் வாங்கலை. சினிமா, டிராமா, மால், காட்ஸ் வோன் கன்ட்ரிக்கு டூர் அப்படீன்னு சும்மா இஷ்டத்துக்கு செலவு பண்ண ஆரம்பிச்சா என்னவாகும்? இன்ப்ளேஷன் அதிகமாகி அரசாங்கத்துக்குத்தான் குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கும்.

ஆண்டாண்டு காலமா ஏதோ பாவப்பட்ட ஜனங்க அவங்களுக்குத் தெரிஞ்சதைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்றாங்கன்னு விடுவீங்களா? அவங்க வாழ்க்கையில புகுந்து ஏடாகூடமா என்னத்தையோ பண்ணப் பார்க்கறீங்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism