பிஸினஸ் வெற்றிக் கதைகள்

##~##
''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொ
றந்தப்பவேவா பானை செய்யக் கத்துக்கிட்டோம்? எல்லாம்... சூழலும் தேவையும்தான். புகுந்த வீட்டுல கஷ்டம். அதைக் குறைக்கறதுக்கு நாமளும் ஏதாவது உதவியா இருக்கலாமேனு, வாசம் புடிச்சு... மண் தொட ஆரம்பிச்சேன். இன்னிக்கு இந்த மண்ணுதான் எங்களுக்குப் பொன்னு!''

- களிமண் பிசைந்த கைகளுடன் சிரிக்கிறார் பிச்சையம்மாள்.

மானாமதுரையில், கணவர் ஆறுமுகத்துடன் சேர்ந்து மண்பாண்டம் தொழில் செய்து கொண்டிருக்கிறார் பிச்சையம்மாள். மானாமதுரையில் இருந்து சிவகங்கை முழுவதும் விற்கப்படும் மண் பானைகளுள் பாதி, பிச்சையம்மாளின் கை பட்டதாகத்தான் இருக்கும்!

''பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரைப் பக்கம்தான். மானாமதுரைக்கு வாக்கப்பட்டு வந்தேன். என் வீட்டுக்காரர் மண் பானை செய்றவர். எனக்கு ஆரம்பத்துல இதுல எந்த விஷயமும் தெரியாது. அதுக்காக எட்ட நிண்டே வேடிக்கை பார்க்காம, அவரோட கஷ்டத்துல நாமளும் கொஞ்சம் பங்கெடுக்கலாம்னு முடிவெடுத்தேன். மண் பானை செய்யக் கத்துக்கிட்டு, இப்போ நானும் இந்தத் தொழிலை முழு நேரமும் செய்ய ஆரம்பிச்சுட்டேன்!'' - கண்கள் மிளிர ஆரம்பித்தது பிச்சையம்மாளுக்கு.

உன்னால் முடியும் பெண்ணே!

''ஆரம்பத்துல, எனக்கும் பானை செய்யக் கத்துக் கொடுங்கனு அவர்கிட்ட கேட்க தயக்கமா இருந்துச்சு. அதனால அவர் வேலை செய்றதைப் பார்த்துப் பார்த்தே நானும் கத்துக்க ஆரம்பிச்சேன். அதைப் புரிஞ்சுகிட்டவர், 'அதுக்கென்ன கத்துக்கிட்டா போச்சு!’னு என் கை பிடிச்சு பானை வடிக்க வெச்சார். ஒரு பையன், ஒரு பொண்ணுனு ரெண்டு பிள்ளைங்களோட எதிர்காலம் பத்தின யோசனை... இந்த தொழிலை இன்னும் நேர்த்தியா எடுத்துச் செய்றதுக்கு என்னை செலுத்துச்சு'' என்றவர்,

''எங்க ஊர்ல அரசாங்கமே 'மண் பாண்டம் சொசைட்டி’ ஆரம்பிச்சு கொடுத்திருக்காங்க. அதுல 250 ரூபாய் கொடுத்து உறுப்பினர் ஆனேன். சொசைட்டியில இருந்து பானை செய்றதுக்கு பொருள் வாங்க முன் பணம் கொடுத்தாங்க. பொருள் எல்லாம் தயார் ஆனதும் சொசைட்டியில இருந்தே விற்பனைக்கும் உதவி செய்றாங்க. சொசைட்டி மூலமா நிறைய வியாபாரிகளோட அறிமுகம் கிடைச்சுருக்கு. கொஞ்சம் கொஞ்சமா எனக்கும் தொழில் தெரிய ஆரம்பிச்சு... இப்போ எங்ககிட்ட 50 பேர் வேலை செய்றாங்க. பானை செய்யும் நேரத்துல இவ்வளவு ஆட்கள் தேவைப்படாது. சூளையில் வேக வைக்கும் நேரத்துலதான் இத்தனை பேர் தேவைப்படுவாங்க. அவங்களுக்கு ஒரு நாளைக்கு 120 முதல் 200 வரை சம்பளம் கொடுப்போம்'' என்று பெருமிதம் பொங்கப் பேசிய பிச்சையம்மாள்,

''மண் பானை செய்ய 20 ஆயிரமாவது முதல் போடணும். இந்தத் தொழிலுக்கு முக்கியமான முதலீடு மண்தான். பானை செய்ய நத்தவெரக்கி, செய்களத்தூர், சுந்தரகடப்புனு மொத்தம் மூணு இடத்துல இருந்து மண் எடுக்குறோம். ஒரு வருஷத்துக்கு தேவையானதை 10, 15 பேர் சேர்ந்து வண்டி புடுச்சு எடுத்துட்டு வந்திருவோம். ஒரு வண்டிக்கு 700 ரூபாய் வாடகை. மண்ணைக் காயவெச்சு, தண்ணி ஊத்தி, ஊற வெச்சுருவோம். தெனமும் காலையில யாராவது மிதிச்சி பக்குவப்படுத்தணும்.

மண்பாண்டம் எல்லாம் செஞ்சு முடிச்சதும், அதை வேக வைக்க சூளைக்கு தனியா வாடகை தரணும். அதுக்கு ஒரு 3,000 ரூபாய் தேவைப்படும். எங்ககிட்ட சூளை சொந்தமா இருந்துச்சு. மழையினால சேதமாயிடுச்சு. இப்ப அரசாங்கமே பொதுவா ஒரு சூளை வெச்சு கொடுத்துருக்காங்க'' என்று வெற்றி ரகசியம் சொன்னவரிடம்,

''பொங்கல் வியாபாரம் எப்படி?'' என்றோம்.

''சின்னது, பெருசுனு மொத்தம் ஆறு வகை பானை 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை போகுது. பொங்கலுக்கு மட்டுமே 500, 600 பானைங்க தீர்ந்துடுச்சு. பானை மட்டும் இல்லாம அடுப்பு, குவளை இதையெல்லாமும் செய்றோம். எல்லாமே நல்ல விற்பனைதான். வீட்டோட பொருளாதாரத்துலேயும், வீட்டுக்காரரோட தொழில்லயும் பாதியா நான் இருக்கேன். எங்களை நம்பி நாலு பேர் வேலை பார்க்குறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!'

- பானைகளை பத்திரமாக அடுக்க ஆரம்பித்தவரிடம் விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism