Published:Updated:

உன்னால் முடியும் பெண்ணே !

பிஸினஸ் வெற்றிக் கதைகள் க.அபிநயா படங்கள்: தே.தீட்ஷித்

உன்னால் முடியும் பெண்ணே !

பிஸினஸ் வெற்றிக் கதைகள் க.அபிநயா படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
##~##

செல்வி... சில வருடங்களுக்கு முன்புவரை சாதாரண கிராமத்துப் பெண். இன்று, அவர் ஒரு கிராமிய சாதனையாளர்! விவசாயத்தில் விஞ்ஞான முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றது, ஊரில் பல ஆக்கப்பணிகளையும் முன் நின்று நடத்தியது என்று பாராட்டு மற்றும் விருதுகளை சம்பாதித்துக் கொண்டிருக்கும் செல்வி, புதுக்கோட்டை மாவட்டம், குருந்தடிமலை கிராமத்தின் 'சக்தி மகளிர் சுயஉதவிக் குழு' தலைவி!

''நான் பொறந்தது வெவசாயக் குடும்பம். பத்தாவது வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. என்னையக் கல்யாணம் பண்ணிக் கொடுத்த எடமும் வெவசாயக் குடும்பம். வயல் வேலைகளைப் பார்த்துட்டு, பால் கறந்து கடைகள்ல கொடுப்பாரு. வெவசாயத்துல எங்களுக்கு ஏதும் மிஞ்சல. ரெண்டு பசங்கள வெச்சுக்கிட்டு ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஒரு கட்டத்துல பொட்டுத் தங்கம்கூட இல்லாம, இந்த   ஊருல தொடர்ந்து இருக்க முடியுமாங்கிற நெலமைக்கு வந்துட்டோம். அப்போதான், புதுக்கோட்டை மாவட்ட உழவர் விவாதக் குழுத் தலைவர் தினகரசாமியைச் சந்திச்சோம்'' எனும் செல்விக்கு, அந்தப் புள்ளியில்தான் நல் திசைக்கு மாறியிருக்கிறது வாழ்க்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உன்னால் முடியும் பெண்ணே !

''தினகரசாமி, ஒரு சுயஉதவிக் குழு ஆரம்பிக்கறதுக்கு ஆலோசனை சொன்னாரு. 20 பேரைத் திரட்டி 'சக்தி மகளிர் சுயஉதவிக்குழு'வை ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ஒண்ணும் புரியல. ஒரு கட்டத்துக்குப் பிறகு சுதாரிச்சுக்கிட்ட நான்... வெளியில வட்டிக்கு கடன் வாங்கி வெவசாயம் செய்றதை விட்டுட்டு, வங்கியில கடன் வாங்கி விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன். இதனால கடன் தொல்லை ஓய, வாழ்க்கையில கொஞ்சம் நிம்மதி. அப்போதான் வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துல எல்லா கிராமங்கள்லயும் உளுந்து வெள்ளாமைக்கு தொழில்நுட்பத்தோட பயிற்சி கொடுத்தாங்க. சொந்த நெலம் இருந்தா, உளுந்து விதைக்கத் தேவையான பொருட்களை எல்லாம் அவங்களே கொடுப்பாங்க. அப்படி அவங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டு, உளுந்து வெள்ளாமையில இறங்கினேன்.

முன்ன எல்லாம் கடையில எந்த விதை நல்ல விதைனு சொல்றாங்களோ, கண்ணை மூடிட்டு அதை வாங்கிட்டு வந்து ஏனோதானோனு விதைப்பேன். விளைச்சலும் ஏனோதானோனு போயிடும். இப்ப அப்படி இல்ல. ஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ விதை, வரிசை முறையில விதைக்கிறோம். இதுக்கு 6,500 ரூபா செலவாகும். இதன் மூலமா கிடைக்கற மகசூல்... 30 ஆயிரம் ரூபாய்க்கு குறையாது. லாபம் 20 ஆயிரத்துக்கும் மேல வரும்.

உன்னால் முடியும் பெண்ணே !

உளுந்துக்கான காலமும் குறைச்சல்தான். 65 நாள்ல இருந்து 75 நாட்களுக்குள்ளயே மகசூல் பார்த்துடலாம். உளுந்தை கடைகள்ல கொடுக்கறதவிட, விதைக்குக் கொடுத்தா நல்ல விலை கிடைக்கும். அதனால, நான் விதை உளுந்தாதான் விற்பனை செய்றேன். இந்த விஷயங்கள் எல்லாமே, பயிற்சியில கத்துக்கிட்டதுதான். இப்போ வர்ற புது ரக உளுந்துலயும் நல்ல விளைச்சல் காண்பிச்சு, அதை விதைக்கு கொடுத்துட்டிருக்கேன். இதுக்காகவே வம்பன் ஆராய்ச்சி நிலையத்துல 'சிறந்த விதை உற்பத்தியாளர்’னு பாராட்டி சான்றிதழ் கொடுத்தாங்க. நான் நல்ல விளைச்சல் எடுத்ததைப் பார்த்து, 25 பேருக்கும் மேலானவங்க என்கிட்ட பயிற்சி எடுத்துட்டு போய், இப்ப விவசாயம் பண்ணிட்டிருக்காங்க'' என்று பெருமிதப் பார்வையை வீசிய செல்வி, அடுத்து நெல் சாகுபடி பக்கம் பார்வையைத் திருப்பினார்.

''உளுந்து அறுவடை முடிச்ச கையோட... நெல் போடுவோம். திருந்திய நெல் சாகுபடி முறையில விதைப்போம். இந்த முறையில எந்த ரக நெல் விதைச்சாலும் நல்ல லாபம் கிடைக்கும். பயிர் ஆரோக்கியமா வளரும், களை பறிக்கிறதும் சுலபம். இதுவும் வம்பன் ஆராய்ச்சி நிலையத்துல கத்துக்கிட்டதுதான். ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை இருந்தாலே போதும். 3,000 ரூபாய் செலவு பிடிக்கும். மகசூல், குறைஞ்சது 45 ஆயிரம் ரூபாய்க்கு வரும். லாபம் 35 ஆயிரத்துக்கு குறையாது'' என்றவர், விவசாயத்துடன் நிற்கவில்லை, சமுதாய அக்கறையிலும் சாதித்துஇருக்கிறார். அதுதான் அவருக்கு விருதையும் வாங்கித் தந்திருக்கிறது.

''நாம மட்டும் வாழ்ந்தா பத்தாது, நாலு பேருக்கு நல்லது நடக்க நாமளும் ஒரு கருவியா இருக்கணும்னு நெனப்பு எனக்கு உண்டு. அதனால பக்கத்துல இருக்குற தொடக்கப் பள்ளியில தன்னார்வத் தொண்டரா இருக்கேன். என்னால படிக்க முடியாமப் போனாலும், அந்தப் புள்ளைங்களோட படிப்புக்கு உதவுறேன். எங்க ஊருக்கு தண்ணீர் தொட்டி தேவைப்பட்டுச்சு. சுயஉதவிக் குழுவை முன் வெச்சு அதை செய்ய முடியும்னு தோணுச்சு. அந்தப் பிரச்னையை கையில எடுத்தேன். அலைச்சல், பேச்சு வார்த்தைனு பலதும் நடந்து... மினி டேங்க் போட வெச்சேன். இப்போ அந்த டேங்க்... எங்க ஊருக்கே தண்ணியை கொடுத்திட் டிருக்கு.

உன்னால் முடியும் பெண்ணே !

தெரு விளக்கு, வீட்டுக்கான ஒத்த விளக்கு, மயானக் கரை விளக்குனு எதுவுமே இல்லாம இருந்துச்சு ஊருல. ஒவ்வொரு கிராமசபா கூட்டத்துக்கும் போயி பேசினேன். தனி ஆளாவும், குழு உறுப்பினர்கள் கூடவும் சேர்ந்து நிறைய போராடினேன். இப்போ எல்லா இடங்களுக்கும் விளக்கு போட்டிருக்காங்க. எங்க ஊரு மாற்றுத்திறனாளிகள் ஊக்கத்தொகை கிடைக்காம கஷ்டப்பட்டாங்க. உரிய இடத்துல கேட்டு அதை வாங்கிக் கொடுத்தேன். இப்ப ஊருக்குள்ள தார் ரோடு கேட்டு போராடி, பாதி ரோடும் போட்டுட்டாங்க. மீதியையும் முடிக்கும்வரை எவ்வளவு அலைச்சல் வந்தாலும் அசர மாட்டேன்'' என்றவரின் குரலில் உறுதி. இவருடைய இத்தகைய முயற்சிகள் மற்றும் வெற்றிகளை பாராட்டி... 'ஜாம்ஷெட்ஜி டாடா நேஷனல் அகாடமி’யுடன் இணைந்து 'வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ்.சுவாமிநாதன் ஃபவுண்டே ஷன் சார்பில் இவருக்கு, 'கிராமிய சாதனை யாளர்' எனும் விருது வழங்கப்பட்டிருக்கிறது!  

நிறைவாகப் பேசிய செல்வி, ''என் பசங்களோட எதிர்காலம் கேள்விக்குறியா இருந்த நிலை மாறி, இப்ப ஒரு பையன் பாலிடெக்னிக் படிக்கிறான், இன்னொரு பையன் பத்தாவது படிக்கிறான். அவங்களுக்கு நல்ல படிப்பைப் தரக்கூடிய சூழலுக்கு என் குடும்பம் முன்னேறியிருக்கு. காரணம், தினகரசாமி சார், சக்தி சுயஉதவிக் குழு, வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையம்... அப்புறம்... என் முயற்சியும் உழைப்பும்!''

- அழகாக முடித்தார்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism